

‘வலன்’ எனும் கொடிய அரக்கன் இந்திரனை வெற்றி கொண்டு தேவலோகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தான். அவனை ஏமாற்றி கொல்ல நினைத்த தேவர்களான சுக்ரன், சந்திரன், சனி போன்றவர்கள் அவனிடம் சென்று, "நாங்கள் செய்யும் யாகத்தில் வந்து நீ உன்னையே காணிக்கையாகக் கொடுத்தால், தானாகவே நீ தேவலோகத்தின் அதிபதியாகி விடுவாய்" என்று ஆசை காட்டினார்கள். அதை நம்பி அங்கு சென்ற வலனை தேவர்கள் ஒன்று கூடி கொன்றனர்.
அவனுடைய உடலின் ஒன்பது உறுப்புகளையும் ஒவ்வொரு கிரகத்துக்கான தேவர்கள் எடுத்துக் கொண்டு போக, அவை அந்தந்த கிரகங்களுக்கான ரத்தினங்களாக மாறின. அந்த அரக்கனின் ரத்தம் மாணிக்கமாகவும், பற்கள் முத்தாகவும், எலும்புகள் வைரமாகவும், பித்த நீர் மரகதமாகவும், தசைகள் பவழமாகவும், கண்கள் நீலமாகவும், சருமம் புஷ்பராகமாகவும், விரல் நகம் வைடூரியமாகவும், உயிரணுக்கள் கோமேதகமாகவும் மாறியதாக கருட புராணம் கூறுகிறது.
வைரங்களின் வயது 100 கோடி ஆண்டுகள் முதல் 5 கோடி ஆண்டுகள் வரை கணக்கிடப்படுகிறது. மனிதன் முதலில் 18 வகையான மணிகளை மட்டுமே அறிந்து இருந்தான். அவற்றில் 16 மட்டுமே நகைகள் செய்யப் பயன்படுகின்றன. ஒளி, நிறம், அழகு ஆகிய மூன்றும் நிறைந்தது உயர்ந்த வைரம். பொதுவாக, வைரக்கற்களில் எந்த அளவுக்கு ஒளியின் ஊடுருவும் தன்மை (transparency) இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மதிப்பு. அதே போல எவ்வளவு அரிதாகக் கிடைக்கிறதோ அந்தளவுக்கு அதன் மதிப்பு அதிகம்.
'மாணிக்கங்கள் எல்லாமே சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்' என்றாலும், அதில் ‘பீஜியன்ஸ் ரெட்' (புறாவின் ரத்தச் சிவப்பு) நிறம்தான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 'கோமேதகம்' என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் பசுவின் கோமியம் என்று அர்த்தம். கோமியம் போல சிவப்பு கலந்த அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருந்தால்தான் கோமேதகத்துக்கு மதிப்பு.
வைடூரியத்தை ஆங்கிலத்தில் 'கேட்ஸ் - ஐ' (பூனையின் கண்) என்கிறார்கள். பூனையின் கண்களில் தெரிவது போன்ற நீளவாக்கிலான ஒரு ஒளி தெரிவதுதான் இதன் அடையாளம். கல்லுக்குள்ளே ஒரு ஒளிக்கீற்று ஊடுருவி இருப்பதால்தான் 'வைடூரியம்' என்று இதற்குப் பெயர்.
வைரம் சாதாரண கரித்துண்டு. மண்ணுக்கு அடியில் புதைந்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தப்பட்டு, ஒளி பெற்றுவிடுகிறது. முத்தும், பவளமும் கடலில் விளைபவை. இவை கற்கள் அல்ல. முத்து ஒருவித சுண்ணாம்பு. பவளமோ ஒரு வகை கடல் பூச்சிகளின் எச்சம்.
முத்து என்பது சிப்பிக்குள் இருந்து வளர்ந்து உருவாகிறது. சிப்பியினை கடலுக்குள் இருந்து எடுத்து சுத்தம் செய்து முத்து எடுக்கப்படுகிறது. இதனை ஒரிஜினல்தானா என்று கண்டறிய முகம் பார்க்கும் கண்ணாடியின் மேல் தண்ணீர் ஊற்றி அல்லது வெறும் கண்ணாடியில் கூட முத்துவை வைத்து தேய்த்து பவுடர் போன்று வந்தால் அது ஒரிஜினல் முத்து ஆகும். வடிவம், நிறம், ஒளி வீசும் தன்மை, கணம் இவற்றைக் கொண்டு முத்து மதிப்பிடப்படுகிறது. செம்பவளம் என்பது ‘கோரல்லியம் ரூப்ரம்’ (Corallium rubrum) என்ற உயிரினத்தின் . வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். இதுவே நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
மருந்தாகும் நவரத்தினம்: உடலில் ஏற்படும் நோய்களுக்குக்கூட நவரத்தினக் கற்கள் மருந்தாகப் பயன்படுகிறது.
வைரம்: சிறுநீரகக் கோளாறுகள், வாதம், மலட்டுத்தன்மை போன்ற நோய்களை குணமாக்கும்.
மாணிக்கம்: கெட்ட எண்ணங்கள், சீதள சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
மரகதம்: இரத்தத்தை சுத்தப்படுத்தும், செவிட்டு தன்மையை நீக்கவல்லது, புத்திக் கூர்மை, கணிதத்திறனை அதிகரிக்கும்.
நீலம்: உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும், மூட்டு வலிகளை நீக்கும்.
புஷ்பராகம்: கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் சர்க்கரை நோயை குணப்படுத்தும்.
கோமேதகம்: ஒவ்வாமையை (அலர்ஜி) குணப்படுத்தும்.
வைடூரியம்: மன தைரியம், வியாபார முன்னேற்றம் தரவல்லது.
முத்து: பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பவளம்: மன நோயை தீர்க்கும், கொழுப்பைக் குறைக்கும், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.