

ஐப்பசி மாதம் தீபாவளியை அடுத்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விரதத்தின் இறுதி நாளில் பத்மாசுரனை முருகப்பெருமான் ஆட்கொள்வார். இதேபோல, கார்த்திகை அல்லது மார்கழி வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படும் விழாதான் ‘சம்பக சஷ்டி.’ கந்த சஷ்டி முருகப்பெருமானுக்கு உரியது. அதேபோல், சம்பா சஷ்டி தினம் சிவனுக்கு உரியது.
சம்பா சஷ்டி என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கண்டோபா கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இது பொதுவாக ஆகஹன் மாதத்தின் சுக்ல பட்ச சஷ்டி திதியில் அனுசரிக்கப்படுகிறது.
பண்டிகையின் சிறப்பு: இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. பத்மாசுரன் என்ற அசுரனை முருகன் மயிலாக மாற்றியதைப் போல, சிவன் அசுரர்களை அழிக்காமல் மனம் திருந்திய அவர்களுக்கு அருள்புரிந்தார் என்று கூறப்படுகிறது.
சம்பா சஷ்டி தோன்றிய வரலாறு: மல்லன், மணி என்ற அரக்கர்கள் தங்களை யாரும் வெல்லக் கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் பெற்றனர். வரம் பெற்ற அசுரர்களோ, சப்த ரிஷிகள் உட்பட அனைவரையும் யாகங்கள் செய்யவிடாமல் தடுத்ததுடன் துன்பமும் இழைத்தனர். ரிஷிகளும், தேவர்களும் இதனை ஈசனிடம் முறையிட, அவர் கண்டோபா என்னும் அவதாரம் எடுத்தார். இவரை 'மார்த்தாண்ட பைரவர்' என்றும் அழைப்பார்கள். தனது தலைமுடியில் இருந்து, ‘கிருதமாரி’ என்ற குரூரப் பெண் சக்தியை ஈசன் உருவாக்கினார். அத்துடன் பார்வதி தேவியை ‘மல்ஷா’ என்ற பெயரில் தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆறு நாட்கள் மல்லன், மணியுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தார்.
மல்ஷா என்றால் 'மீட்டுத் தருபவள்' என்று பொருள். அதாவது, கஷ்டங்களிலிருந்து பக்தர்களைக் காப்பவள் என்று பொருள். போர் முடிவில் அரசர்கள் இருவரும் மனம் திருந்தி சிவ - பார்வதியிடம் மன்னிப்பு கேட்டு, மணி என்ற அரக்கன் முக்தி வேண்டும் என்று கேட்டதால் மோட்சத்தை அடைந்தான்.
மணியோ தனது வெள்ளைக் குதிரையை சிவ - பார்வதிக்கு காணிக்கையாக அளித்தான். முக்தி கேட்ட மல்லன் மோட்சத்தை அடைய, சிவ - பார்வதி மீது சம்பக மலர்கள் பொழிந்தன. இதனால் இந்த தினத்தை, ‘சம்பக சஷ்டி’ என்று கொண்டாடுகின்றனர். மகாராஷ்டிரா கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் கண்டோபா என்னும் பைரவர் ஈசனின் வடிவம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பக சஷ்டி அன்று சிவ - பார்வதி இருவரும் வெள்ளை குதிரையில் பவனி வருவார்கள். இந்த சம்பக சஷ்டியின் நோக்கம் எதிரிகளிடமும், பகைவர்களிடமும் அன்பைக் காட்ட வேண்டும் என்று பரிந்துரைப்பதாக உள்ளது.
கொண்டாடப்படும் முறை: முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபட்டு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து விரதம் இருக்கும் வழக்கம் உள்ளது. காலையில் எழுந்து குளித்து முருகனுக்கு வெள்ளை நிற பூக்கள் சூட்டி, பாடல்கள் பாடி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பால், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிவேதனம் செய்து விரதம் இருப்பவர்கள் காய்ச்சிய பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம்.