இந்தியாவில் சக்தியும் ரகசியமும் மர்மமும் நிறைந்த கோயில்கள் ஏராளமாக உள்ளன. பண்டைய வரலாற்றில் தீர்க்கப்படாத மற்றும் மறைக்கப்பட்ட பல ரகசியங்கள் உள்ளன. அவற்றை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. பழமையான கோயில்கள் சில தனித்தன்மை வாய்ந்த ரகசியங்களால் உலக அளவில் புகழ் பெற்றுள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்தும் அதன் கட்டடக்கலை மற்றும் சிலைகள் மூலம் மர்மமான பல கதைகளைச் சொல்கின்றன. அப்படி ஒரு அதிசயமும் ஆச்சர்யமும் கொண்ட கோயில் தான் இது.
மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, மல்ஷேஜ் காட் என்ற இடத்தில் ஹரிஷ் சந்திரகாட் மலைக்கோட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோயிலின் பெயர் கேதாரேஷ்வர் குகைக் கோயில். இந்த கோயில் சுமார் 4,671 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒற்றைக்கல் அமைப்பில் இருந்து செதுக்கப்பட்ட இந்த கோயிலில் ரிஷி சாங்தேவினால் தேவநாகரி எழுத்துக்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மற்றும் தனித்துவமான சிற்பங்கள் உள்ளன.
ஹேமத்பந்தி கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில் ஹரிஷ் சந்திரேஷ்வருக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. கலாச்சூரி வம்சத்தை சேர்ந்த அரசர்கள் இந்த கோட்டையை கிபி.6 ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள். பின்னர் ஹரிஷ் சந்திரகாட் கோட்டை குகைகள் 11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. கோட்டையில் உள்ள சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல கட்டமைப்புகளும் காண்பவர்களைக் கவர்கின்றன. இந்த கோயிலை பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.
இந்த கோயிலில் சுயம்புவாக உருவான சிவலிங்கம் உள்ளது. கோயிலுக்கு அருகில் மூன்று குகைகள் உள்ளன. அதில் வலது பக்க குகையில் குளிர்ந்த நீரால் சூழப்பட்ட 5 அடி சிவலிங்கம் உள்ளது. இந்த நீர் பூமியில் கோடைக்காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய எல்லா தருணங்களிலும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், இந்த கோயிலின் உள்ளே கோடையில் மிகவும் குளிராகவும், குளிர் காலத்தில் கோயிலின் உள்ளே கதகதப்பாகவும் இருக்கும்.
இந்த சிவலிங்கத்தை வழிபட வேண்டும் என்றால் நீந்தி தான் செல்ல வேண்டும். மங்கள கங்கை என்றழைக்கப்படும் சப்த புஷ்கரணியில் இருந்து இந்த குகைக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த குகைக்குள் அனுமதி இல்லை. இந்த நீரில் நீராடினால் கங்கையில் நீராடிய அதே பலன் கிடைக்கும். ஒருவரது பாவங்களை முழுமையாக நீக்குகிறது.
இந்த குகைக் கோயிலில் உள்ள சிவலிங்க சந்நிதி எப்போது உருவானது என்று எவருக்கும் தெரியவில்லை. இந்த கோயில் சத்ய யுகத்தில் தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை சுற்றி 4 தூண்கள் இருந்துள்ளன. தற்போது ஒரு தூண் மட்டுமே எஞ்சியுள்ளது. மக்களின் நம்பிக்கையின்படி இந்த தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகம் முடியும் போதும் ஒவ்வொன்றாக தானாக இடிந்து விடும்.
சத்ய, திரேதா, துவாபர யுகங்களி்ன் முடிவில் ஒவ்வொரு தூணும் இடிந்து விழுந்தது. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கலியை குறிக்கும் தூண் மட்டும் அப்படியே உள்ளது. கலியுகத்தின் முடிவில் இந்த தூண் இடிந்து விழும். அதோடு இந்த உலகம் அழிந்து விடும் என்று பரவலாக கூறப்படுகிறது.
இந்த கோயில் புனேவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மல்ஷேஜ் காட் செல்ல பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு செல்வது சவாலான மலையேற்றங்கள் நிறைந்தது. கேதாரேஷ்வர் குகைக் கோயில் புனிதத்தலம் மட்டுமல்லாது, பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது.