வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் ஆலயங்களில் இருபது நாட்கள் சிறப்பாக நடைபெறும். பகல் பத்து என பத்து நாட்களும், இராப்பத்து என பத்து நாட்களும் இந்தத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களை பகல் பத்து என்றும் வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை இராப்பத்து என்றும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் திருமங்கை ஆழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம் அரங்கன் முன்பு பாடப்பட்டு இந்த விழா கோலாகலமாகத் துவங்கும். அன்று முதல் பகல் பத்து விழா ஆரம்பமாகும்.
திருமங்கை மன்னன் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னே பாடினார். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள், திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் எனக் கேட்க, அதற்கு அவர், ‘வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களைக் கேட்டருள வேண்டும்’ என்று கூறுகிறார். அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.
நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கையாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழி பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும்விதமாக பகல் பத்து மற்றும் இராப்பத்து உத்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களை பக்தர்கள் பாடுவார்கள். இந்த பத்து நாள் உத்ஸவம் ‘அத்யயனோத்ஸவம்’ என்று அழைக்கப்படும். இது பகலில் நடைபெறுவதால் பகல் பத்து உத்ஸவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகல் பத்து உத்ஸவம் அரையர் சேவையுடன் தொடங்கும். இந்த உத்ஸவ நாட்களில் திருமால் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார். தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல் பத்து உத்ஸவத்தில் தினம்தோறும் இரு முறை அரையர் சேவை நடைபெறும். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும்.
பகல் பத்தில் முதலாயிரமும் பெரிய திருமொழி பாடப்படும். இராப்பத்தில் திருவாய் மொழியும் இயற்பாகவும் பாடப்படும். பகல் பத்து விழாவின் பத்தாவது திருநாளின்போது பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம், மோகினி அலங்காரம் செய்விப்பார்கள். இதை மோகனாவதாரம் என்றும் சொல்வார்கள். அன்று ஆழ்வார்களுக்கு கைலி வஸ்திரத்தை சமர்ப்பிப்பார்கள். அதன் மறுநாள்தான் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறக்கப்படும். இராப்பத்து உத்ஸவம் தொடங்கும். இது திருவாய்மொழி திருநாள் எனப்படும். இத்திருவிழாவின்போது பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் வீற்றிருப்பார். இம்மண்டபம் ஐந்தாவது பிராகாரமான அகளங்கள் திருச்சுற்றில் இருக்கிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் மையப்பகுதிக்கு திருமாமணி மண்டபம் என்று பெயர். இராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று ரத்தினாங்கி சேவை நடைபெறும். பெரிய பெருமாளுக்கும் உத்ஸவர் நம்பெருமாளுக்கு மிகவும் விசேஷமான அலங்காரங்கள் செய்யப்படும்.
இராப்பத்து உத்ஸவத்தில் திருக்கைத்தல சேவை விசேஷமான விழா. இது ஏழாவது நாள் நடைபெறும் விசேஷம். அன்று பெருமாளை அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலங்களால் தூக்கி வருவர். நம்மாழ்வாருக்கு பெருமாள் தரிசனம் கொடுப்பார். அன்று நம்மாழ்வாருக்கு நாச்சியார் அலங்காரம். இந்த விழாவின் எட்டாவது திருநாள் திருவேடு பறி உத்ஸவம். திருமங்கை மன்னன் கொள்ளை கூட்டத் தலைவராக இருந்தவர். அவருக்கு பெருமாள் அருளால் ஞானம் உண்டாகியதை நினைவுபடுத்தும் திருநாள் இது. ஆழ்வார், ‘வாடினேன் வாடி’ என்ற பாசுரத்தை பாடுவதாக ஐதீகம்.
பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம் அன்று பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரை எழுந்தருள்விப்பார்கள். நம்மாழ்வார் மேல் துளசி தளங்களை மழையாகப் பொழிந்து அர்ச்சிப்பார்கள். திருவாய்மொழி ஓதுதல், சாற்றுமுறை நடைபெறும். அதன்பின் நம்மாழ்வாரை ஆழ்வார் கோஷ்டியில் எழுந்தருள வைப்பார்கள். அப்போது ‘கண்ணினுள் சிறுதம்பு’ என்னும் பாடல் விசேஷமாக ஓதப்படும். எல்லா ஆழ்வார்களுக்கும் கைலி வஸ்திரம் அணிவிக்கப்படும்.
நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராக தாளத்தோடு அபிநயத்துடன் ஆடிப் பாடும் அரையர் சேவை தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அரையர் சேவைக்கு என்று அலங்காரமோ உடையோ செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லாவை தலையில் அணிந்துகொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அணிந்து கொள்வர். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இச்சேவையை தொடங்கியதாகக் கூறுவர். பாசுரங்களை பாடும்போது அதற்கேற்ப முகம், கை பாவத்தைக் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் நிகழ்ச்சிக்காக அரையர் பட்டு உடுத்துவர். முத்துக்குறி என்பது குறி சொல்பவளிடம் மகளின் எதிர்காலம் பற்றி தாய் குறி கேட்கும் நிகழ்வாகும். அன்று அரையர் ஒருவரே தாயாக, மகளாக, குறி சொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவர்.
மந்திரங்களுக்கு காயத்ரி, முக்திக்கு காசி, விரதத்துக்கு ஏகாதசி என்பது ஒரு முதுமொழி. இது பக்தர்கள் பின்பற்றும் விரதங்களில் ஏகாதசி விரதத்திற்குரிய சிறப்பைக் காட்டுகிறது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் பகல் பத்து இராப்பத்து உத்ஸவங்களை கண்டு களித்து நம் பெருமாளின் பேரருளைப் பெறுவோம்.