

திருவண்ணாமலை வந்தவாசி அருகே அமைந்திருக்கிறது அவனியாபுரம் நவ நரசிம்மர் திருப்பதி வெங்கட ஆலயம். அவனிநாராயணபுரம் என்பதே மருவி அவனியாபுரம் ஆயிற்று. அவனி என்றால் சம்ஸ்க்ருதத்தில் சிம்மம் ஆகும். சிறிய குன்றின் மேல் நவநரசிம்மர்கள் அமர்ந்து அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத கோலம் என்பதால் இது தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படுகிறது.
நரசிம்ம அவதாரம் வெகு விரைவாக முடிந்துவிட்ட ஒன்று. அதனால் இந்த கோலத்தை தேவர்கள் யாரும் பார்க்க முடியவில்லை. ஆதலால் அவர்கள் இங்கு வந்து பகவானை நோக்கித்தவம் செய்தார்கள்.
தவத்தின் உக்கிரமாய் வெப்பாலை மரங்களாக மாறிப் போனார்கள். அவர்களின் பக்திக்கிரங்கி நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் இது. இவரின் உக்கிர படிவம் கண்டு பிரம்மனும் யாகம் செய்து வழிபட்ட தலம் இதுவே.
தேவர்கள் வெப்பாலை மரமாக நின்று தவம் செய்த அடையாளமாக இன்றும் அங்கு வெப்பாலை மரங்கள் உண்டு. பிருகு முனிவர் பகவானிடம் பெரும் பக்தி கொண்டவர். அவருக்கு முக்தி கிட்டவில்லை. அதனால் பகவானை வேண்டினார். பகவான் அவருக்குக் கனவில் தோன்றி நீ அவனிநாராயணபுரம் சென்று தவம் செய். நான் காட்சி தந்து முக்தி அளிப்பேன் என்றார். பிறகு முனிவர் தவத்திற்கு மெச்சி தான் நின்ற கோலம் சயனக்கோலம் என எல்லா கோலமும் காட்டி முக்தி கொடுத்தார்.
அவர் பொருட்டு இங்கு லட்சுமிதேவி சமேத நரசிம்மராகவும், ரங்கநாயகி சமேத ரங்கநாதர் ஆகவும், அமிர்தவள்ளி சமேத யோகநரசிம்மராகவும், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜனாகவும், அலர்மேல் மங்கை சமேத சீனிவாசராகவும் 5 சிலைரூபமாக காட்சி தந்தார்.
எல்லா நரசிம்மர் ஆலயத்திலும் நரசிம்மர் மட்டுமே சிம்மரூபத்தில் இருப்பார். ஆனால் இங்கே பகவான், பிராட்டி மற்றும் கருடாழ்வாரும் சிம்ம முகத்திலேயே காட்சி தருகிறார்கள். பகவான் நரசிம்மரின் அம்சம் தாயாரிலும் உண்டு. அவளே நரகாசுரனை வதம் சேர்ந்தாள். கருடனிலும் நரசிம்ம அம்சம் உண்டு.
இத்தலம் நவக்கிரகங்களின் பலனைமொத்தமாகத் தரும். இதை பஞ்ச திருப்பதி என்று போற்றப்படுகிறது. திருப்பதி வெங்கடாசலபதி, திருவரங்கம் அரங்கநாதரா, காஞ்சீபுரம் வரதராஜன், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி சிம்மர் ஆகிய 5 மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாதிப்பதால் பஞ்ச திருப்பதி என அழைக்கப்படுகிறது. இங்கு கர்ப்பக்கிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மன், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரக்லாத நரசிம்மர், மங்கள நரசிமாமர் என்று பஞ்ச நரசிம்மரும் மலை உச்சியில் யோக நரசிம்மர் என்று பல நரசிம்மர் சேவை தருகிறார்.
இக்கோவிலில் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் புத்திர பாக்யம் கிடைக்கும் பிள்ளை வரம் பெற்றவர்கள் எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு வந்து சேவிக்க எதிரி தொல்லைகள் நீங்கும். இக்கோவில் பல்லவ ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக தேரிகிறது.
இங்கு நரசிம்மர் கண்கள், தாடி மூக்கு போன்றவற்றுடன் முன் இடது காலை ஆசீர்வதித்து மண் தோரணையில் உயர்த்திய நிலையில் சிங்கத்தின் வடிவத்தில் இயற்கையான பாறை அமைப்பு உள்ள ஒரு சுயம்பு நரசிம்மர். இங்கு லட்சுமிதேவி சிங்க முகத்துடன் காணப்படுவது சிறப்பான அம்சமாகும்.
ஆதிசங்கரால் நிறுவப்பட்ட மரகதலிங்கத்துக்கு கூடிய கோவில் அவனியாபுரம் மலையடி வாரத்தில் உள்ளது.