
சுந்தரரின் பசி போக்க, திருக்கச்சூர் வீதிகளில் ஈசன் பிச்சையெடுத்து வந்து அவருக்கு அமுது படைத்தார். ஈசன் செய்த பல உதவிகளுக்காக பல திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார். அந்த வகையில், திருக்கொப்புளியூரும் சுந்தரரின் திருப்பதிகம் பெற்றத் திருத்தலமாகும். சுயம்பு மூர்த்தமாக அருளும் இத்தல பெருமானுக்கு அவிநாசியப்பர் என்பது திருநாமம். காசி விஸ்வநாதரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலனை அவிநாசியப்பரை வழிபடக் கிடைக்கும்.
அமாவாசையில் இங்குள்ள காசி கிணற்றில் நீராடுவது சிறப்பு. மூலவர் அவிநாசி லிங்கேஸ்வரர். அம்மன் கருணாம்பிகை. தல விருட்சம் பாதிரி மரம். தீர்த்தம் ஐராவதத் தீர்த்தம்.
ஒரு சமயம் அவிநாசியப்பர் திருக்குளத்தில் அந்தணச் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை அவனது தாய் தந்தை கண் முன்னே ஒரு முதலை விழுங்கி விட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்தார்.
அவர் வீதி வழியே சென்றபோது எதிரெதிர் வீடுகளில் ஒருவர் வீட்டில் பூணல் கல்யாணமும் இன்னொருவர் வீட்டில் பெற்றோர் சோகமாகவும் இருப்பதைக் கண்டு அதற்கான காரணம் கேட்க, ‘சோகமாக இருப்பவர் வீட்டுப் பையனை முதலை விழுங்கியதாகவும், அவன் தற்போது உயிரோடு இருந்தால் அவனுக்கும் பூணல் கல்யாணம் நடத்தியிருக்கலாமே’ என்ற வருத்தத்தில் அவர்கள் இருப்பதாகக் கூறினர்.
அதைக்கேட்டு உடனே சுந்தரர் இக்கோயிலுக்கு வெளியே நின்று மனமுருகிப் பாடி, பிரார்த்தனை செய்ய, முதலை வாய்க்குள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போன சிறுவன் 7 வயது பையனாக வெளியே வந்தான். அச்சிறுவனை அப்பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களின் விருப்பப்படி பூணல் கல்யாணமும் நடத்தி வைத்தார். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இங்கு முதலைப் பிள்ளை உத்ஸவம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக்கன்னி 21 ஆண்டுகளும் தவமிருந்து வழிபட்டனர்.
அவிநாசி என்றால் அழிவில்லாதது என்று பொருள். 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. மைசூர் மகாராஜா வம்சத்தினர் அரச பதவி ஏற்கும்போது காசிக்குச் செல்வார்கள். காசியில் பூஜை செய்த லிங்கத்தை எடுத்து வந்து இந்த அவிநாசி கோயிலில் வைத்து பூஜை நடத்திய பின்பே அவர்கள் அரண்மனைக்குள் செல்வார்களாம்.
இங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டு. வரப்பட்டவை. இங்குள்ள சனி பகவான், வசிஷ்டரின் தோஷத்தைப் போக்கியவர். சனி பகவான் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். இத்தலத்தில் அம்மன் ஆட்சி பீட நாயகியாகையால் சுவாமிக்கு வலப்புறம் காட்சி தருகிறாள். இக்கோயிலில் வியாதவேடரீ என்ற திருடனுக்கு ஒரு சன்னிதி உள்ளது விசேஷம். 32 கணபதிகள் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார்கள்.
ஆலயத்திற்கு வெளியே இரட்டை கோபுரங்கள் உள்ளன. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்ய, சனி தோஷ நிவர்த்தி ஏற்படும். இத்தலத்தில் அருளும் பைரவருக்கு வடை மாலை விசேஷம். இக்கோயில் தல விருட்சமான பாதிரி மரம் பிரம்மோத்ஸவ காலங்களில் மட்டுமே பூக்கும், மற்ற காலங்களில் பூக்காது. சிறப்பு வாய்ந்த இக்கோயில் கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி எனும் இடத்தில் உள்ளது.