காஞ்சி மகாபெரியவர் அருளிய பிரதோஷ காலத் தத்துவம்!

Pradosha philosophy
Kanchi Maha Periyavar, Lord Shiva
Published on

கத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பிரதோஷ காலத் தத்துவத்தைப் பற்றி மிகவும் அற்புதமாக நமக்கு அருளுகின்றார். “பிரதோஷ காலம் சூரிய அஸ்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. இது பரமேஸ்வரனை தியானம் செய்வதற்கு தகுந்த காலம் ஆகும். அதாவது, ஈஸ்வரன் தன்வசப்படுத்திக்கொள்ளும் இக்காலம் மிகவும் விசேஷமாகும். மனம் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தனது ஸ்வரூபத்தில் அடக்கிக்கொள்ளும் நேரம்.

பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுடன் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக இது அமையும். உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரியின் ஆரம்பத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால்தான் இரவு நித்திய பிரளய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகாலட்சுமி தாயார் மிகவும் விரும்பி தங்கும் இடங்கள் எவை தெரியுமா?
Pradosha philosophy

இரவில் பட்சிகள், விலங்குகள் ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட தம் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர். அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்குத் தகுந்த காலம். பிரதோஷ வேளைகளில் பரமேஸ்வரன் உலக சக்தி முழுவதையும் தன்வசம் ஒடுக்கிக் கொண்டு நடராஜராக நர்த்தனம் செய்யும் வேளையில் அனைத்தும் அவரிடத்தில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூத பிசாசுகள் கூட அந்த நர்த்தனத்தில் லயித்து யாருக்கும் உபத்திரத்தைக் கொடுக்காது.

அது கண்கட்டி வித்தை போல நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்து விட்டு, தான் நினைத்ததை செய்து விடுகிறான்.

இதையும் படியுங்கள்:
நொடிப்பொழுதில் பக்தர் துயர் போக்கும் சக்கரத்தாழ்வார்!
Pradosha philosophy

உஷத் காலத்தில் ஹரிஸ்மரணையும் சாயங்காலத்தில் சிவ நாமஸ்மரணையும் உகந்தவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ வேளைதான் உகந்தது. சிவ பஜனை செய்வதற்கு எல்லோருக்கும் அவரவர் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகத்தான் பெரும்பாலும் சிவன் கோயிலைக் கட்டினார்கள்.”

சகல லோகத்தையும் காத்தருளும் கருணாமூர்த்தியான கயிலை மலை வாசனுக்கு உகந்த இந்த பிரதோஷ கால மகிமையை பற்றி காஞ்சி மகாபெரியவா அருளிய அமுத வாக்கு அனைவருக்கும் வாழ்வில் சுபிட்சத்தையும் செல்வத்தையும் காரிய சித்தியையும் தரத்தக்க பக்தி மார்க்கம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com