
ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணர், மகாலட்சுமி தாயாரோடு வீற்றிக்கும்போது, அவளிடம் தாயார் விரும்பி வாசம் செய்யும் இடங்கள் குறித்து விவரிக்கும்படி கேட்டார். அதற்கு தாயார், ‘தாம் அனைத்து இடங்களிலும் வாசம் செய்வதில்லை. அழகான எளிமையான தோற்றமுடைய பெண் எந்த வீட்டில் வசிக்கிறார்களோ, அங்கு தாம் விரும்பி தங்குவதாகவும், எங்கு வெண்மை நிறமுடைய மாடப்புறாக்கள் கூடு அமைத்து மகிழ்ச்சியோடு வாழ்கின்றனவோ அவ்விடம் தமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
எந்தக் குடும்பத்தில் சண்டை, சச்சரவு பிரச்னை ஆகியவற்றை விரும்பாத பெண் வாழ்கிறாளோ அங்கே தாம் விருப்பமுடன் தங்குவதாகவும், நெற்குவியல்களும் மற்ற தானியங்களும் எந்த இடத்தில் சிதறாமல் ஒழுங்காக குவிக்கப்பட்டுள்ளனவோ அவை தமக்கு மகிழ்வைத் தரும் இடங்கள் எனவும், நன்றாகத் தீட்டப்பட்ட வெள்ளிமணி போன்ற அரிசி குவியல்கள் எங்கே இருக்கிறதோ அதுவும் தாம் விரும்பி வாசம் செய்யும் இடம்.
மேலும், இனிய வார்த்தைகளால் அன்புடன் பேசி, மற்றவர்களை மகிழ்விப்பனுடைய இல்லங்களிலும், தாம் உண்ணுகின்ற உணவை மற்றவர்க்கும் எடுத்து வைத்து கொடுப்பவன் உள்ள இடங்களிலும் தாம் விரும்பி வாசம் செய்வதாகக் கூறுகிறார்.
இவை தவிர, மகாலட்சுமி தாயார் மேலும் 15 இடங்களில் தங்கி வாசம் செய்வதாகப் புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை, யானையின் முகம், பசுவின் பின்புறம், வாசமுள்ள வெள்ளை மலர்கள், தீபம், சந்தனம், தாம்பூலம், கோமியம், கன்னிப் பெண்கள், அதிகம் பேசாதவர்கள், வேதம் ஓதும் உத்தமர்கள், உள்ளங்கை, குதிரை, டமாரம், பசுவின் கால் தூசி, வேள்விப் புகை ஆகியவையாகும்.
மகாலட்சுமி தாயாருக்குப் பிடித்தமான மலர்கள் செந்தாமரையும் செவ்வந்தியும் ஆகும். செந்தாமரை காலை நேரத்திலும், செவ்வந்தி மாலை நேரத்திலும் மலரும். வீட்டில் செல்வம் வற்றாமல் இருக்க இம்மலர்களைக் கொண்டு மகாலட்சுமி தாயாரை பூஜை செய்யலாம்.
மகாலட்சுமிக்கு பிடித்தமான மங்கலப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், எலுமிச்சை, துளசி, மாக்கோலம், மாவிலை தோரணம், உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, பூரண கும்பம், வில்வ இலை, நெல்லிக்கனி, செவ்வந்தி பூ போன்றவையாகும்.
மகாலட்சுமி தாயார் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை காலையிலும் மாலையிலும் விளக்கேற்ற வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பும் வாசல் மாடத்திலும் விளக்கேற்றுவது நல்லது. காலையில் விளக்கேற்ற முடியாதவர்கள் மாலையில் ஐந்தரை மணியில் இருந்து ஆறு மணிக்குள்ளாக சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்ற வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை துதித்து லட்சுமி அஷ்டகம், லட்சுமி ஸ்தோத்திரம் போன்ற பாடல்களைப் படித்து மகாலட்சுமியை போற்றி வணங்கி வழிபட்டு அவளது அருளைப் பெறுவோம்.