

அய்யாவாடியில் உள்ள ப்ரத்யங்கிரா தேவி பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலம். இழந்த செல்வம், புகழ், வெற்றி கிடைக்க அருள்தரும் தெய்வம். ஒரு மனிதன் தன் வாழ்வில் பணம், புகழ், பதவியை ஏன் மனநிம்மதியைக் கூட இழக்கலாம். அத்தகைய வேளையில் இறைவனிடம் முழுமனதுடன் சரணடைந்து வழிபட்டால் இழந்தவற்றை மீண்டும் பெறும் மனவலிமை பெறலாம். அத்தகைய அருளை அரளிப்பவளே ப்ரத்யங்கிரா தேவி. தஞ்சை கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அருகில் அமைந்துள்ளது ப்ரத்யங்கிரா தேவி ஆலயம்.
அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி திருவுருவத்தின் உக்கிர பின்னணி:
ஹிரண்யகசிபுவை வதம் செய்தபிறகு நரசிம்மரின் ரத்தவெறி அடங்காமல் மூவுலகையும் அழிக்கத்துவங்க தேவர்கள் சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர். ஈசனும் தன் மூன்றாவது கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவியை வெளிப்படுத்தினார்.
இந்த தேவி இரண்டாயிரம் கைகள், சிங்கமுகம், இரண்டாயிரத்துப் பதினாறு கண்கள் அதைத்தவிர மூன்றாம் கண், கைகளில் புலி நகம், யமனைப்போன்ற கரிய நிறம் யானையைவிட பத்து மடங்கு பெரிய ரூபம் கொண்டவளாக வந்தாள்.
இவர் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி இவர்களின் சக்திகளின் வடிவமே ப்ரத்யங்கிராதேவி. இங்கு ராமரும் லக்ஷ்மியும் பூஜித்ததாக தெரிகிறது. அகத்தியருக்கு ப்ரத்யங்கிரா தேவி காட்சி தந்த தலம்
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலம் இது. மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தங்கள் ராஜ்ஜியம்,செல்வம் மற்றும் கௌரவத்தை இழந்த பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் அனுபவித்தனர். அப்போது அவர்கள் பல புனிதத்தலங்கள் சென்றனர்.
அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இத்தலம். புராண மரபின்படி பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து சுயம்புவாக அருள்பாலித்த ப்ரத்யங்கிரா தேவியை மனமுருகி வழிபட்டனர். அவர்கள் பூஜை செய்ய மலர்கள் தேவைபட்டது. சித்திரை மாதமான தால் பூக்கள் கிடைக்கவில்லை. எனவே அருகிலிருந்த ஆலமர இலையை மலர்களால் பாவித்து பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதாக தெரிகிறது.
ஐந்து ஆல இலைகளால் அரிய பூஜை
அவர்கள் வந்த சமயம் சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்காமல் ஆலமர இலைகளையே பூக்களாக பாவித்து பூஜை செய்தனர். பல நாட்கள் பக்தியுடன் இங்கு பூஜை செய்த காரணத்தால் குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்களை வென்று தங்கள் இராஜ்ஜியம் புகழ் மற்றும் செல்வத்தைச் பெற்றனர். பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதால் ஐவர்வாடி என அழைக்கப்பட்டது காலப்போக்கில் மருவி அய்யா வாடி ஆனது.
ப்ரத்யங்கிரா தேவி சக்தியின் உக்ரவடிவம் புராணங்கள்படி இவள் பரமேஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டதாகத் தெரிகிறது. சிம்ம முகத்துடன், பதினெட்டு திருக்கரங்களுடன், நான்கு சிங்கங்கள் இழுக்கும் ரதத்தில் மகாலக்ஷ்மி, சரஸ்வதியும் காட்சி தருகிறார். வலது காலை கீழே தொங்கவிட்டும், இடது காலை சிங்கத்தின் மீது ஊன்றியபடியும், சூலம், பாசம், மருகம், கபாலம் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் அன்னையை தரிசிக்கலாம்.
இங்கு தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. காரணம் அம்பாளின் திருமேனி பசுவின் காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி பல்வேறு மூலிகை கலவைகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சுதை மூர்த்தம். எனவே நீரால் அபிஷேகம் செய்யாமல் தை தொடங்கி ஒரு மண்டலக்காலம் புனுகு சாற்றப்படுகிறது.
தீவினைகளை வேரறுக்கும் பிரத்யங்கிரா தேவி நிகும்பலா யாகம்:
ராவணனின் மகன் இந்திரஜித் போரில் வெற்றி பெறவும், சக்தி பெறவும் நிகும்பலா யாகத்தை செய்து ப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக தெரிகிறது. இங்கு ஒவ்வொரு அமாவாசையில் நிகும்பலா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளாகாய் இடப்படுகின்றன. அதோடு பட்டுப் புடவைகள, பழங்கள் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. ஆனாலும் யாருக்கும் கண் எரிச்சலோ தும்மலோ ஏற்படுவதில்லை.
தேவியை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்
எதிரிகள் தொல்லை குறையும்
பயம் நீங்கும்
தீய எண்ணங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்
கடன் தீரும்
மனவலிமை பெருகும்
செல்வம் புகழ் கிடைக்கும்
பில்லி சூன்யம் நீங்கும்
இங்கு வினாயகர், சிவபெருமான் சரபேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. நம் வாழ்க்கையில் எந்த இழப்புகள் நடந்தாலும் ப்ரத்யங்கிரா தேவியை வழிபட அனைத்தும் கிடைக்கும்.
வாழ்வில் தீராத கடன் தொல்லை, எதிரிகள் பயம், பில்லி சூன்யம் போன்ற தடைகளால் முடங்கிக் கிடப்பவர்கள் இந்த பதிவை வாசிப்பதன் மூலம், தங்களின் இழந்த செல்வம் மற்றும் மனநிம்மதியை மீண்டும் பெறுவதற்கான ஆன்மீக வழிகாட்டுதலையும், அய்யாவாடி திருத்தலத்தின் மகிமையையும் முழுமையாக அறிந்துகொண்டு வாழ்வில் புதிய உத்வேகத்தைப் பெறுவார்கள்.