தல வரலாறு:
சோழ நாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருக்கோழியூர், பெருமாளின் 108 திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். துவாபர யுகத்தில், திருக்கோழியூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் நந்தசோழனுக்கு புத்திர பாக்கியம் இல்லை . தினமும் திருவரங்கத்து ரங்கநாதரை தரிசித்து சோழமன்னன் புத்திர பாக்கியம் வேண்டினான். ஒருநாள் நந்தசோழன் நீர் அருந்த தடாகத்திற்கு செல்லும் போது அங்கு அழகே உருவான பெண் குழந்தை ஒன்று தாமரை மலர் மீது துயில் கொண்டிருந்ததை பார்த்தான். ஶ்ரீ மஹாலக்ஷ்மி தான் பெண் மகவாக அங்கு அவதரித்திருந்தாள். சோழன் அந்த குழந்தையை எடுத்துச் சென்று கமலவல்லி என்று பெயரிட்டு தன் மகளாக வளர்த்து வந்தான்.
சோழ நாட்டின் இளவரசியாக சீரும் சிறப்புமாக கமலவல்லி வளர்ந்திருந்தாள். ஒருமுறை கமலவல்லி தோழியர்களோடு உலாவும் போது, எதிரே குதிரையில், அழகிய மணவாளனாக வந்தவனை (அரங்கனை) கண்டு மையல் கொண்டு விட்டாள். அழகிய மணவாளன் மீது காதல் கொண்ட கமலவல்லி நாச்சியார், மணந்தால் அவனை தான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருந்தாள். கமலவல்லிக்கு காதல் முற்றி உணவு உண்ண மறுத்து அங்கேயே தவமிருக்க ஆரம்பித்து விட்டாள்.
இதனால் கவலையடைந்த நந்தசோழனின் கனவில் தோன்றிய அரங்கன், மஹாலட்சுமி தான் கமலவல்லியாக அவதரித்ததாகவும், தானே அவளை மணக்க விரும்புவதாகவும் , கமலவல்லியை திருவரங்கம் அழைத்து வருமாறும் கூறினார். திருவரங்கத்தில் அழகிய மணவாளனாக காட்சி தந்து கமலவல்லியை மணந்து கொண்டார். அதன் பின்னர் நந்தசோழன், கமலவல்லி அவதரித்த திருத்தலத்தில் பெரிய கோயில் ஒன்றை கட்டினார்.
சிறப்பு:
திருப்பாணாழ்வாரும் கொச்செங்கட் சோழ நாயன்மாரும் அவதரித்த திருத்தலம் இது. திருமங்கை ஆழ்வாரும் இந்ததலத்தை 'பெரிய திருமொழியில்' மங்களசாசனம் செய்துள்ளார். வழக்கமாக பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சொர்க்க வாசலை கடந்து செல்வார். இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று எப்போதும் போல பூஜை மட்டுமே நடைபெறுகிறது. அன்றைய நாளில் இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. தேய்பிறை ஏகாதசி நாளில் நாச்சியார் மட்டும் சொர்க்கவாசலை கடக்கிறார் என்பது தனிச்சிறப்பு.
திருவிழா:
பங்குனி மாதம் , ஆயில்ய நட்சத்திரத்தில் கமலவல்லி தாயார் அவதரித்ததால் பங்குனி திருவிழா இக்கோயிலில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் திருவரங்கத்தில் இருந்து அரங்க பெருமாள் பல்லக்கில் கிளம்பி காவிரி , குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருக்கோழியூர் என்றழைக்கப்பட்ட இன்றைய திரு உறையூருக்கு வருகை தருகிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் கமலவல்லி நாச்சியாரை அழைத்துக் கொண்டு சேர்த்தி மண்டபத்தில் திருமணக் கோலத்தில் இருவரும் காட்சி தருகின்றனர். பின்னர் அரங்கன் மட்டும் திருவரங்கம் செல்கிறார், தாயார் மூலஸ்தானம் திரும்புகிறார்.
துவாபர யுகத்தின் முடிவில் மறைந்திருந்த இக்கோயில் சோழர்களால் மீண்டும் கட்டப்பட்டது. ஐந்து நிலை மாடத்துடன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அரங்கனுக்கும் தாயாருக்கும் ஒரே சன்னதி தான். திருப்பாணாழ்வார் மற்றும் ராமானுஜருக்கு இங்கு தனி சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் தாயார் அவதரித்ததால் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கமலவல்லி தாயாரே பிரதானமாக உள்ளார்.
பங்குனி மாதம், ஆயில்ய நட்சத்திர நாளில் திருமணம் ஆகாதவர்கள், திருமணமாகி பிரிந்து வாழ்பவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் அனைவரும் இத்தலத்தில் வந்து திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும் அரங்க நாதரையும் கமலவல்லி தாயாரையும் வணங்கினால் விரைவில் அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார்.
நாச்சியார் கோயிலின் அமைவிடம் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், ஶ்ரீ ரங்கத்தில் இருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ளது.