
மனித வாழ்வில் குழந்தைகள் அற்புதமானவர்கள். குழந்தைப் பருவ லீலைகள் அற்புதமும், அதிசயமும் உடையது. அதனால்தான், ‘குழந்தையும் தெய்வமும்’ ஒன்றே என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர். இறைவன் எடுத்த அவதாரத்தில் குழந்தை கண்ணனாக அவதரித்த கிருஷ்ண அவதாரமே உயர்ந்தது. கண்ணன் படத்தை அநேகர் வீட்டில் வைத்து வழிபடுகின்றனர். நிறைய வீடுகளில் பார்த்தால் காலண்டர்களில் கண்ணன் படம் அமைந்திருப்பதைக் காணலாம்.
அப்படி வழிபடுகின்ற படங்கள் பாலகோபால கிருஷ்ணனாக குழந்தைக் கண்ணன், தவழும் வடிவில் மண்டியிட்டு ஓடும் கிருஷ்ணன், கோவர்த்தன கிருஷ்ணன், குழலூதும் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணனாக வேணுகோபாலகிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணனாகவும், பாமா-ருக்மணி கண்ணன், ராதாகிருஷ்ணன் என்ற பெயரில் என்று வழிபடுகின்றனர். இதுபோல், நவநீதகிருஷ்ணன், வெண்ணெய் கிருஷ்ணன் படத்தை சில வீடுகளில் வைத்து அதை குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்பொழுது வேடிக்கைக் காட்டி ஊட்டுவதையும், கண்ணன் கதை சொல்லி ஊட்டுவதையும் காண முடிகிறது.
தமிழகத்தின் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி ஆலயம் பார்த்தனுக்கு தேரோட்டியாக கண்ணன் இருந்ததை நினைவூட்டும் கோயிலாக அமைந்திருப்பது சிறப்பு.
பாண்டவர்களுக்கு தூதராக செயல்பட்ட கண்ணனுக்கு, 'பாண்டவ தூதர்' என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
மன்னார்குடியில் கண்ணன் ராஜகோபால சுவாமியாகக் காட்சியளிக்கிறார். இங்கு குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் குழந்தை கண்ணனை தொட்டிலில் வைத்து ஆட்டி வேண்டிச் செல்கின்றனர்.
கேரள மாநிலம், குருவாயூரில் மகாவிஷ்ணுவின் அவதாரமான பாலகிருஷ்ணராக வழிபடப்படுகிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில் புகழ் பெற்றது. அதேபோல், 'தொட்டமகளு'ஆலயம் கண்ணன் வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்றது. குழந்தை வரம் வேண்டிடும் பிரார்த்தனைக்கு மிகவும் புகழ் பெற்ற இடமும் இதுதான். இங்கு கண்ணன் குழந்தை வடிவில் இருக்கிறார். வட இந்தியாவில் 'மதுரா' போன்ற இடங்கள் கிருஷ்ணன் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்ற இடங்கள் ஆகும்.
கண்ணன் குழந்தையாக மண்ணை வாயில் போட்டுக்கொண்ட போது, யசோதை வாயை பிளந்து பார்த்தாள். அப்போது அதில் உலகங்கள் அனைத்தையும் கண்டாள். பிறகுதான் கண்ணன் யாரென்று புரிந்து வளர்ப்பில் ஆர்வம் கொள்கிறாள்.
குறும்பு செய்த கண்ணனை உரலில் கட்டி வைத்திருந்தனர். அப்பொழுது கண்ணனை அழிக்க வந்த அரக்கர்கள் விளா மரமாக நின்றிருந்த போதிலும் வேகமாகச் சென்று இரண்டு மரங்கள் இடையே தவழ்ந்து உரலை வேகமாக இழுத்தபோது அரக்கர்கள் அழிந்தனர்.
தன்னை அழிக்க மாடு, கன்று வடிவில் வந்த அரக்கர்களை கண்ணன் கண்டுபிடித்து மாட்டின் மீது கன்றை மோதி அடித்துக் கொன்றான்.
தன்னை ஏமாற்றி பொய் சொல்லி சிறுவயதில் கடலை சாப்பிட்ட குசேலரை மன்னித்து பின்னாளில் ஏழ்மையுடன் 27 குழந்தைகளுடன் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது அவரது குடும்பத்திற்கு நல்வாழ்வும், வளமும் வசதியும் வழங்கி ஆதரித்தார் கண்ணன்.
மக்களுக்கு இன்னல் விளைவித்த நரகாசுரனை வதம் செய்து, அவன் விரும்பியவாறு மக்கள் தீபாவளி கொண்டாட வரம் அருளினார். இந்திரன் அடாவடித்தனமாக பேய் மழை பெய்யச் செய்து கோகுலத்தை அழிக்க முயன்றபோது கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து உயிர்களைக் காத்தான்.
கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி தன்னைக் கொல்ல முயன்றபோது அவளது நஞ்சுப் பாலை உறிஞ்சி அவளைக் கொன்றான்.
எல்லாம் அறிந்திருந்தும் முறையாக ஆசானிடம் கற்றல் வேண்டும் என்பதற்கேற்ப சாந்தீபனி முனிவரிடம் சென்று, அவரது இறந்த மகனை மீட்டுக் கொண்டு வந்து குருதட்சணையாக்கி பாடம் கேட்டான்.
தன்னை விரும்பும் அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பதைக் காட்டிட, ஒவ்வொரு ஆன்மாவிடமும் பரமாத்மா சேர்ந்து இருந்து ராஜ லீலை நிகழ்த்தி ராமகிருஷ்ணனாகவும் காட்சி தந்தான்.
மகாமல்லர்களை வென்ற மல்யுத்த வீரன், ஏழு காளைகளை அடக்கியவன். ராஜதந்திரி, சிறந்த தூதன், சாரதி, திரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கி உள்ளவர்களைக் காத்திடும் ஆபத்பாந்தவன், பீஷ்மருக்கே முத்தி அளித்தவன், கர்ணனுக்கும் முக்தி அளித்தவன், தன்னையே கொல்லும்படியான அம்பை எய்த வேடனுக்கும் முக்தி அளித்தவன் என்று, இதுபோன்று பல லீலைகளை சிறப்பாக செய்திருக்கிறான் கண்ணன். இதனால் கிருஷ்ணாவதாரம் பரிபூரண அவதாரமாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.