
இந்தியாவில் பாயும் ஏழு புனித நதிகளில் ஒன்று நர்மதா. ‘ரேவா’ என்பது அதன் பழைய பெயர். ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் ரேவா பற்றிய தகவல்கள் உள்ளன. ஐந்தாவது நீண்ட நதி. இந்தியாவில் பயனளிக்கும் நான்காவது பெரிய நதி. கங்கை, கோதாவரி, கிருஷ்ணாவிற்கு அடுத்து பெரிய நதி. மொத்தம் 1,312 கி.மீ. பயணிக்கும் இதன் நீரை குடித்து சிவனை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும் என்பது வடநாட்டு பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நர்மதை நதிக்கு ஒரு சிறப்பு உண்டு. இங்கு கிடைக்கும் அழகிய கூழாங்கற்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. இவற்றை பாணலிங்கம் என்று சிறப்புப் பெயரிட்டு அழைப்பர். நர்மதா நீர் வீழ்ச்சி விழும் இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகி தண்ணீருடன் பாறைகளும் சுற்றுதலுக்கு ஆளாகின்றன. இதனால் கற்கள் கடைந்தது போல மென்மையாவதுடன் பல வண்ணங்களையும், ரேகைகளையும் பெறுகின்றன. இவை 20 செ.மீ. முதல் 300 செ.மீ. வரை நீளத்தில் உள்ளன.
ஒரு காலத்தில் வடநாட்டில் உள்ள சிவத்தலங்களில் இந்த பாணலிங்கங்களே இடம் பெற்றதாம். இன்று நர்மதையில் பாணலிங்கம் உருவாகும், ‘தாடிகுண்ட்’ என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட்டு விட்டதால் இந்தப் பகுதி தண்ணீரில் மூழ்கி விட்டதால் பாணலிங்கம் கிடைப்பது அரிதாகி விட்டது.
தஞ்சை பெரிய கோயிலில் நாம் காணும் லிங்கம் பாணலிங்கம் என கூறப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து வரப்பட்டதாகும். இதுபோன்ற பெரிய, பெரிய லிங்கங்களை உருவாக்க கர்கோன் மாவட்டத்தில் பக்காவா என்ற கிராமம் உள்ள பகுதியில் ஓடும் நர்மதையின் கரையில் மிகக் கடினமான பாறைகள் உள்ளன. இந்தக் கடினமான பாறைகள்தான் லிங்கம் செய்ய ஏற்றவை என தீர்மானிக்கப்பட்டு அவற்றிலிருந்து பிரம்மாண்டமான லிங்கங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பாணலிங்கம் கட்டை விரல்களின் நகங்களுக்கு இடையே பிடித்தால் அவை சுற்ற வேண்டும். இதனை வைப்ரேஷன் என்கின்றனர். இத்தகைய பாணலிங்கங்கள் சக்தி மிக்கவை. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து வர கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
இப்போதும் நர்மதா நதி பாயும் காட்டு பகுதிகளில் உள்ள மணலைத் தோண்ட ஏராளமான பாணலிங்கங்கள் கிடைக்கிறதாம். இறை வழிபாட்டிற்கு பயன் தரும் பல பொருட்கள் நதி படுகையில்தான் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.