
ஒரு சமயம் நான்கு வேதங்களும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் கேட்டனர். சிவபெருமானும் ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் மூங்கில் மரங்களாக இருக்க அருள்புரிந்ததோடு, அவற்றின் நிழலில் லிங்க ரூபத்தில் அமர்ந்து கொண்டார். இதனால், இத்தலத்திற்கு ‘வேணுவனம்’ (வேணு - மூங்கில்) என்ற பெயர் உண்டாயிற்று.
தினசரி இந்த மூங்கில் காடு வழியாக ராமக்கோனார் என்னும் பால் வியாபாரி பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு பால் கொண்டு போவார். திடீரென ஒரு நாள் வழக்கம்போல அவர் பால் கொண்டு செல்லும்போது, கல் ஒன்று அவரது காலை தடுக்கி விடுகிறது. அதில் ராமக்கோனார் தடுமாறவே, அவர் கையிலிருந்த பால் கல்லின் மேல் கொட்டி விடுகிறது. தொடர்ந்து வந்த நாட்களிலும் இதுபோல் நடக்கவே, ராமக்கோனார் பயந்தார்.
அரண்மனைக்குக் கொண்டு செல்லும் பாலின் அளவு தினமும் குறைவாக இருப்பது அரசனுக்குத் தெரிந்தால் சிக்கலாகி விடுமே என்று பயந்து, பாண்டிய மன்னனிடம் நடந்ததைச் சொல்கிறார் ராமக்கோனார். மன்னர் வீரர்களுடன் சென்று, மூங்கில் புதர்களுக்கு நடுவே இருந்த அந்தக் கல்லைக் கோடரியால் அகற்ற முயன்றான். அப்போது கோடரி கல்லின்மேல் பட்டதும், அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மன்னரும் வீரர்களும் பதற, அங்கிருக்கும் லிங்கத்தை மூலவராக வைத்து கோயில் எழுப்பும்படி அசரீரி கேட்டது.
பாண்டிய மன்னனும் அதற்கேற்ப செயல்பட்டான். வெட்டுப்பட்ட கல் இருந்த இடத்தில் கையால் மண்ணை அகற்றிப் பார்த்தபோது, சுயம்பு லிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார். அவரையே மூலவராக வைத்து கோயில் எழுப்பினான் பாண்டியன். இறைவனுக்கு வேணுவன நாதர், வேண்ட வளர்ந்த நாதர், சால்வடீஸ்வரர், வேய்முத்த நாதர் என்று பல பெயர்கள் உண்டு. வெட்டுப்பட்ட லிங்கத்திற்கு ஆவுடையார் அமைக்கும்போது, அதற்கேற்ப லிங்கம் உயர்ந்தது. மீண்டும் இன்னொரு ஆவுடையார் அமைக்க, மறுபடியும் லிங்கம் வளர்ந்தது. இப்படியாக இருபது ஆவுடையார் அமைத்த பின்பும் லிங்கம் உயர்ந்து கொண்டிருந்தது.
‘இறைவா! இது என்ன சோதனை’ என்று மன்னன் கலங்கி நிற்க, ஜோதி வடிவமாக இறைவன் காட்சியளித்து அருளினார். இறுதியாக, சதுர வடிவமான இருபத்தியோராவது ஆவுடையார் மேல் வெட்டுப்பட்ட லிங்கம் பொருந்தியது. மீதமுள்ள இருபது ஆவுடையார்கள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், ‘வேண்ட வளர்ந்த நாதர்’ என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இறைவனின் லிங்கத் திருமேனியின் மேல்பகுதியில் ஒருபுறம் வெட்டுப்பட்டு சரிவாக இருப்பதை இப்போதும் காணலாம்.
தற்போது இத்தலத்து இறைவன், ‘வேணுவன நாதர்’ என்று அழைக்கப்படுவதில்லை. வேறு பெயரில் அழைக்கக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு சமயம், இந்தக் கோயில் அர்ச்சகராக இருந்த வேத பட்டர் தனக்கு, உணவில்லாவிட்டாலும் யாசகம் பெற்றாவது இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விடுவார். ஒரு நாள் ஈர நெல்லே யாசகத்தில் கிடைத்தது. இருந்தாலும் சன்னிதிக்கருகில் வெயில் வரும் இடத்தில், நெல்லை உலரப் போட்டுவிட்டு நீராடப் போனார் வேதபட்டர். அப்போது திடீரென மழை வரவே, ‘மழையில் நெல் நனைந்து தண்ணீரில் போய்விடுமே’ என்று கவலையுடன் கோயிலுக்கு ஓடி வந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது. மழை மற்ற இடங்களில் பெரிதாகப் பெய்து கொண்டிருக்க, நெல்லை உலர்த்திய இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆச்சரியத்தில் உறைந்துபோன அர்ச்சகர், நேரே அரசனிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அரசனும் வந்து பார்த்துவிட்டு வேணுவன நாதரை வணங்கி போற்றி, ‘நெல்லுக்கு வேலியிட்டுக் காத்த கயிலாய நாதர் இனி, ‘நெல்வேலி நாதர்’ என்று அழைக்கப்படுவார்’ என்றார்.
அன்று முதல் வேணுவனநாதர், ‘நெல்வேலி நாதர், நெல்லையப்பர் என்ற பெயருடன் அருள்புரிகிறார். காலப்போக்கில் ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்து ஊர் பெயரும் திருநெல்வேலி என்றானது. வற்றாத ஜீவநதி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும், அல்வாவுக்கு பெயர் பெற்ற திருநெல்வேலியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயில்தான் இத்தனை சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது. இப்போதும் இந்தக் கோயிலின் தல விருட்சமாக மூங்கில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவன் கோயில் என்ற சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு.