
விஞ்ஞான உலகத்தை மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களையும் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் சந்திர கிரகணம் நாளை இரவு (07.09.2025) நிகழ உள்ளது. பூரண சந்திர கிரகணம், அதாவது முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகண நாளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்!
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, அதாவது பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுகிறது. இதனால் சந்திரன் இருண்டு விடுகிறது அல்லது சிவப்பாகத் தோன்றுகிறது. இது ஒரு முழு நிலவின்போது மட்டுமே ஏற்படும் ஒரு வான் மண்டலமாக நிகழ்வாகும். கிரகணம் முழுமை அடையும்போது, அதாவது பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைக்கும்போது பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் சூரிய ஒளி பூமியின் நிழலில் உள்ள சந்திரன் மீது படும். அப்படிப் படும் இந்த ஒளி சிவப்பாக மாறி, சந்திரனை சிவப்பு நிறமாக ஒளிரச் செய்கிறது. இதனால் சந்திரன் சிவப்பு நிலவு போல தோன்றும்.
பொதுவாக, கிரகணம் இரண்டு வகைப்படும். ஒன்று சூரிய கிரகணம், மற்றொன்று சந்திர கிரகணம். பாற்கடலை கடையும்பொழுது அமுதம் கிடைத்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. அந்த அமுதத்தை தேவர்களும் அசுரர்களும் உண்பதற்காக போட்டி போட்டனர். இதனைக் கண்ட திருமால், மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அந்த அமுதத்தைப் படைக்க முற்பட்டார். அசுரர் குலத்தைச் சேர்ந்த ராகு, தேவர் உருவம் கொண்டு ராஜ கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அமர்ந்தார். இதனைக் கண்டுபிடித்த சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் இந்தத் தகவலை தெரிவித்தனர்.
இதனால் மிகுந்த கோபம் கொண்ட திருமால், தாம் கையில் வைத்திருந்த அகப்பையால் ராகுவின் தலையில் அடித்தார். இதனால் அவரது தலையும் உடலும் தனித்தனியாக விழுந்தது. பிறகு பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்டவராக ராகு மாறினார். அமுதத்தை உண்டதனால் ராகு சாகா நிலை பெற்றார். ராகுவை அசுரர் என அடையாளம் காட்டியதால் சூரிய, சந்திரன் மீது ராகுவிற்கு பகை தோன்றியது. இதனால் இவர்கள் இருவரையும் பிடிக்கத் தொடங்கினர். அந்த அடிப்படையில் இன்றும் கிரகணம் நடைபெறுவதாக ஐதீகம். காட்டிக் கொடுத்த சந்திரனை, ராகு அதாவது கரும்பாம்பு பற்ற சந்திர கிரகணமும் சூரியனை கேது, அதாவது செம்பாம்பு பற்ற சூரிய கிரகணமும் நிகழ்வதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
2025ம் ஆண்டு நிகழும் மூன்றாவது சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் இந்தியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் தெரியப்போகிறது. பஞ்சாங்க கணக்கீடுகளின்படி இந்த ஆண்டு முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஏழு மணி நேரத்திற்கு முன்பாகவே தோஷ காலம் தொடங்குகிறது. அதனால் கோயில்களில் கிரகணம் தொடங்குவதற்கு முன்னதாகவே நடை சாத்தப்பட்டு, அதிகாலையில் கோயில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் முடிந்த பிறகுதான் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரகணம் முடியும் நேரத்தில் ஆண்கள் குளம் அல்லது ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கிரகணத்தின்போது உங்கள் மனதிற்குப் பிடித்த தெய்வங்களை நினைத்து ஜபம், தியானம் செய்யலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற பல மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் கூறலாம். கிரகண நேரத்தில் நாம் ஒரு மந்திரத்தை ஒரு முறை சொன்னால் அது ஆயிரம் முறை சொன்னதற்கான பலனை நமக்குப் பெற்றுத் தரும்.
கிரகணம் துவங்குவதற்கு ஏழு மணி நேரம் முன்பாகவே உணவு சாப்பிட்டு விடுவது நல்லது. வயதானவர்கள், நோயாளிகள், மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு பெறுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் ஒரு இருட்டறையில் அமர்ந்து கொண்டு தெரிந்த ஸ்வாமி ஸ்லோகங்களைக் கூறுவது நல்லது. இதனால் வயிற்றில் வளரும் சிசு நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பக்தியுடன் நல்ல ஒழுக்கம் உள்ள குழந்தையாக வளரும். கிரகண ஒளியினால் ஏற்படும் கதிர்வீச்சு வயிற்றில் உள்ள சிசுவை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் இருட்டு அறையில் இருக்கச் சொல்வதின் அர்த்தம். சிசுவின் மேல் கிரகண கதிர்கள் பட்டால் குழந்தைகளுக்கு அங்கக் குறைபாடு ஏற்படலாம். கிரகணக் கதிர்கள் உணவுப் பொருட்களை தாக்காமல் இருக்க கிரகண நேரங்களில் தர்ப்பையை அதில் போட்டு வைப்பது நல்லது என்று சாஸ்திரம் சொல்கிறது. கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு காலையில் ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பிறகு அன்றைய பணிகளைத் தொடங்குவது நல்லது.
இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 9.56 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது. கிரகணம் பிடிக்கும் நட்சத்திரம் சதயம், முடியும் நட்சத்திரம் பூரட்டாதி, கிரகணம் நிகழும் ராசி கும்பம். சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, புனர்பூசம், விசாகம். ராசிகள் மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம். நாளை இரவு நிகழப்போகும் முழு சந்திர கிரகணத்தை முறையாகக் கடைபிடித்து கிரகண தோஷம் நிவர்த்தி பெறுவோம்.