
கலைமகளாம் சரஸ்வதி தேவியின் கடாட்சம் ஒரு மனிதனின் மீது பட்டால் உலகமே அவனது காலடியில் விழுந்து வணங்கும். அளவிற்கு கல்வி அறிவையும், ஞானத்தையும் தேவி வழங்குவாள். சரஸ்வதி தேவி அறிவு மற்றும் கற்றலின் தெய்வம் எனப் போற்றப்படுகிறாள். தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள பாசரா என்ற இடத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி கோயில். சரஸ்வதி தேவியின் புகழ் பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான சரஸ்வதி கோயில்களில் ஒன்று. இங்கு குழந்தைகளுக்கான முதல் எழுத்துப் பயிற்சி விழாவான, ‘அக்ஷரப்யாசம்’ நடைபெறுவது சிறப்பு.
அருள்மிகு பாசரா ஞான சரஸ்வதி கோயில் மிகவும் புராதனமான கோயில். இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருப்பவள் கலைமகளான சரஸ்வதி தேவி ஆவாள். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இதுவென்று தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் தீர்த்தமாக அருகில் ஓடும் கோதாவரி நதி விளங்குகிறது.
புராணங்களின்படி மகாபாரதத்தை எழுதிய வேத வியாசர் இங்குள்ள அமைதியான கோதாவரி நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது அவருக்குக் காட்சி தந்த சரஸ்வதி தேவி, அவரை சரஸ்வதி, மகாலட்சுமி, மகாகாளி ஆகிய மூன்று தேவியர்களின் தன்மை கொண்ட ஒரு கோயிலை உருவாக்கச் சொல்ல, சரஸ்வதியின் கட்டளைப்படி வியாசர் உருவாக்கிய கோயில்தான் இந்த ஞான சரஸ்வதி தேவி கோயில் எனக் கூறப்படுகிறது. இந்த இடம் முதலில் ‘வியாசபுரி’ என்று அழைக்கப்பட்டு பிறகு நாளடைவில் ‘பாசரா’ என்று மாறியது.
இந்தக் கோயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு குகை மற்றும் வேதாவதி என அழைக்கப்படும் நான்கு பக்க ஒற்றைக்கல் பாறை காணப்படுகிறது. பாறையின் ஒவ்வொரு பக்கமும், இதை அடிக்கும்போது வெவ்வேறு ஒலிகளை எழுப்புகிறது. இங்கு சீதா தேவியின் நகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தைச் சுற்றி இந்திரன், சூரியன், வியாசர், வால்மீகி, விஷ்ணு, விநாயகர், சிவன் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
இந்தக் கோயிலின் கொடிமரத்தைத் தாண்டி உள்ளே நுழையும் போது சூர்யேஸ்வர சுவாமி சிவன் சன்னிதி இருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் மீது வருடம் முழுவதும் சூரியனின் ஒளி விழுவதால் இவர் சூர்யேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு மூன்று தேவியருக்கும் தனித் தனி சன்னிதிகள் இருந்தாலும் ஞான சரஸ்வதி தேவியே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார். எப்போதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதியின் மீதிருக்கும் மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. இப்பிரசாதத்தை சாப்பிடுவதால் கல்வி, கலைகளில் சிறக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலில் வியாசர், வால்மீகி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இந்த பாசரா பகுதியில் தத்தாத்ரேயர் பகவானுக்கும் கோயில் இருக்கிறது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி தினங்களில் இக்கோயிலில் குழந்தைகளுக்கு நடக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர். அப்போது சரஸ்வதியை வணங்கி குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பதால் குழந்தைகள் கல்வி மற்றும் கலைகளில் சிறப்பதாகக் கூறுகிறார்கள்.