
சிவ பக்தியால் தெய்வப் பதவி அடைந்தவர் சண்டிகேஸ்வரர். பக்தியின் மேன்மையால் எம்பெருமானின் அருளைப் பெற்ற 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படும் இவர், சிவாலயங்கள் அனைத்திலும் அதன் தனத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். சிவாலயங்களில் தியானத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர் முன்பு மூன்று முறை மெல்லக் கைதட்டி, சிவ தரிசன பலன் தருமாறு வேண்டிக்கொண்டு, கைகளை விரித்துக் காட்டி, கோயிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், சண்டிகேஸ்வரர்தான் கோயில் சொத்துக்களின் காவலர். இவரை வலம் வராமல் சென்ற வழியே திரும்பி வர வேண்டும். அவரை தரிசித்தால்தான் சிவ தரிசன பலன் முழுமையாகக் கிட்டும்.
நடுச்சத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரிஷப வாகன சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சிவன் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தொனிச் சண்டிகேஸ்வரர் என்றும் முருகன் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சுமித்ர சண்டிகேஸ்வரர் என்றும், விநாயகர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் கும்ப சண்டிகேஸ்வரர் என்றும், சூரியனார் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தேஜஸ் சண்டிகேஸ்வரர் என்றும், அம்பாள் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் யமுனா சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில், மகேஸ்வரன் உமா மகேஸ்வரியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஈசனின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் சண்டிகேஸ்வரர் அமர்ந்துள்ளார். அவரது திருமுடியில் சிவன் பூமாலை சூட்டுகிறார்.
திருப்பெருந்துறை சிவாலயத்தில் சிவன், மாணிக்கவாசகருக்கு சண்டிகேஸ்வரர் பதவியை தந்ததால், சண்டிகேஸ்வரருக்கு தனிச் சன்னிதி இல்லை.
திருநாரையூர் சௌந்தரேசுவரர் கோயிலில் இரட்டை சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு அருகருகே இரண்டு சண்டிகேஸ்வரர்களை தரிசிக்கலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில், சண்டிகேஸ்வரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்கு முருகனுக்குக் கட்டிய பூமாலையை, சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
காவிரி வடகரையில் அமைந்துள்ளது 41வது திருமறைத்தலமான சேங்கனூர் சக்திகிரீஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம் சண்டிகேஸ்வர நாயனார் அவதாரம் எடுத்த தலமாகக் கருதப்படுகிறது. குமரி முதல் இமயம் வரையில் உள்ள அனைத்து சிவத்தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்த புண்ணியப் பலனை சேங்கனூர் சண்டிகேஸ்வர நாயனாரை தரிசனம் செய்தால் மட்டுமே கிடைக்கும். சண்டிகேஸ்வர நாயனார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சண்டிகேஸ்வரரை ஏன் வலம் வந்து வணங்கக் கூடாது?
நிர்மால்ய தீர்த்தம் (சிவனுக்கு அபிஷேகம் செய்த நீர்) கொட்டும் கோமுகி அருகில் இவருக்கு சன்னிதி அமைப்பர். இந்த கோமுகியைத் தாண்டக் கூடாது என்பதால் சண்டிகேஸ்வரரை வலம் வந்து வணங்குவதில்லை. சிவாகம புராணங்களின்படி, ஒவ்வொரு யுகத்திற்கும் தனித்தனி சண்டிகேஸ்வரர் நியமிக்கப்படுகிறார். கிருத யுகத்தில் நான்கு முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், திரேதா யுகத்தில் மூன்று முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், துவாபர யுகத்தில் இரண்டு முகங்களைக் கொண்ட சண்டிகேஸ்வரரும், கலி யுகத்தில் ஒரு முகத்தைக் கொண்ட சண்டிகேஸ்வரரும் இருப்பார்கள்.
சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
‘ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்’
சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீ சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும்போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல்போன பொருட்கள் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்.