
இறை வழிபாட்டு முறை என்பது இந்துக்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்படி இறைவனை கோயில்களிலோ அல்லது வீட்டிலோ வழிபடும்போது கடைபிடிக்க வேண்டிய சில முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* ஈரமான உலராத உடையை உடுத்திக்கொண்டு பூஜை, அர்ச்சனை போன்ற தெய்வ வழிபாட்டை செய்யக் கூடாது.
* விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது விளக்கின் எண்ணெயில் உள்ள தூசியை கைவிரலால் எடுக்கக் கூடாது.
* அபிஷேகம் செய்யும்போது இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் அபிஷேகத்திற்கு ஜலம் வைத்துக் கொள்ளக்கூடாது. பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களில் வைத்துக் கொள்ளலாம்.
* தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலையையோ பாக்குகளையும் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைக்கக் கூடாது. இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து என இரட்டைப்படையில் இருக்க வேண்டும்.
* வாழைப்பழத்தை பாதியாக வெட்டி அதன் மீது கற்பூரம் ஏற்றி வைத்து தீபாராதனை செய்வதோ அதன் மீது திரி போட்டு தீபம் ஏற்றுவதோ செய்யக் கூடாது.
* மணி அடிக்கும் ஓசை இல்லாமல் எந்த ஒரு பூஜையும் செய்யக் கூடாது.
* பூஜை செய்யும்போது தாமிர பாத்திரத்தில் சந்தனத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.
* அகல், சட்டி போன்ற மண் பாத்திரத்தில் பூஜைக்குரிய சந்தனத்தை வைக்கக் கூடாது.
* பூஜைக்கு உபயோகிக்கும் மணி, வெற்றிலை, அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸமித்துகள், வாழை இலை முதலியவற்றை பூமியில் தரையில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
* தாழம்பூவை கொண்டு சிவனுக்கு பூஜையும் அர்ச்சனையும் அலங்காரமும் செய்யக் கூடாது.
* வீட்டில் செய்யும் பஞ்சாயதன சிவ பூஜையின் முடிவில் சண்டிகேஸ்வரருக்கு பலி போடாமல் இருக்கக் கூடாது.
* மகாலட்சுமிக்கு தும்பை பூ கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.
* வில்வ இலையால் சூரியனை அர்ச்சனை செய்யக் கூடாது.
* ஸ்ரீராமரையும் பெருமாளையும் பூஜிக்கும்போது பூ கிடைக்கவில்லை என்பதால் அட்சதை அரிசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.
* இரும்பு அல்லது எவர்சில்வரால் செய்யப்பட்ட விளக்குகளில் தெய்வத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யக் கூடாது.
* தலையை துணியால் மூடிக்கொண்டு எந்த ஒரு ஜபத்தையும் செய்யக் கூடாது. அதேபோல், இரு கைகளையும் துணியால் மறைத்து மூடிக்கொள்ளாமல் காயத்ரி ஜபத்தை செய்யக் கூடாது.
* துளசி செடியின் குச்சியை ஹோமம் செய்யும் நெருப்பில் போடக் கூடாது.
* திருக்கோயிலில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் பிரதட்சணம் செய்தல் கூடாது.
* கோயிலை ஒரு முறை மட்டும் பிரதட்சணம் செய்யக் கூடாது. குறைந்து மூன்று முறையாவது பிரதட்சணம் செய்ய வேண்டும்.
* திருக்கோயில் மூடி இருக்கும் நேரத்திலும் திருவிழாவில் ஸ்வாமி வீதி உலா வரும் நேரத்திலும் உள்ளே திரை போட்டிருக்கும் நேரத்திலும் கோயிலில் உள்ள தெய்வத்தை தரிசனம் செய்வதோ பிரதட்சணம் செய்வதோ கூடாது.
* கோயில்களில் திருவிழா நடக்கும்போது, கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை அதன் சுற்றுப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
* ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப் பற்றி புகழ்ந்து பேசக் கூடாது.
* பெருமாள் கோயிலில் பிரசாதமாகத் தரப்படும் பூஜா தீர்த்தத்தையோ பொங்கலையோ சாப்பிட்டுவிட்டு கைகளை அலம்பக் கூடாது.
* கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. காதுகளில் வைத்துக் கொள்ளலாம்.