
நம் நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடிப்படை ஆன்மிக இந்து தர்ம போதனைகளை எடுத்துரைக்கும் மத குருவாக உள்ளார் சுவாமி பிரேமானந்த்ஜி மகராஜ். அடிக்கடி இவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது பக்தி கொண்டு அவரின் புனித மந்திரங்களை தினமும் உச்சரித்து வருபவர்களின் வாழ்க்கையில் கஷ்டங்களும் தடைகளும் நீங்கி வாழ்க்கை எப்படி சுபிட்சமடைகிறது என்பதை அவரின் சத்சங்க கூட்டங்களின் வாயிலாகக் கூறி வருகிறார். குறிப்பிட்ட ஒரு சுலபமான, சக்தி வாய்ந்த மந்திரத்தைக் கூறி, அதன் பலன்களையும் விவரித்துள்ளார் சுவாமி பிரேமானந்த்ஜி. அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
‘ஓம் கிருஷ்ணாய வாசுதேவாய ஹரயே பரமாத்மனே பரனாத க்ளேஷனாஷாய கோவிந்தாய நமோ நமஹ’ : ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டான எத்தனையோ மந்திரங்கள் இருக்கையில், இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை தினசரி கூறி வரும் பக்தர்கள், எப்பேர்ப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும், கடினமான சவால்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் அவை அனைத்திலிருந்தும் அவர்கள் சுலபமாக வெளிவர முடியும் என்கிறார் பிரேமானந்த்ஜி.
இந்த மந்திரத்தின் பொருள்: எங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, வாசுதேவா, பரமாத்மன் ஸ்ரீஹரி, கோவிந்தா அனைவருக்கும் நமஸ்காரம். ஓ கோவிந்தா, உன்னை சரணடைபவர்களின் துன்பங்களை நீக்கக் கூடியவனாயிருக்கும் உன்னை மறுபடியும் மறுபடியும் வணங்குகிறோம்.
இந்த மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையின் பொருள்:
ஓம் - பிரபஞ்சத்தின் ஓசை, கிருஷ்ணாய – கிருஷ்ணருக்கு, வாசுதேவாய - வாசுதேவரின் மகன், ஹரயே - அனைதித்திற்கும் மேலான தெய்வமான ஹரி. பரம -ஆத்மனே - அனைதித்திற்கும் மேலான தெய்வத்தின் ஆன்மா, பரந்தா – சரணாகதியடைந்தவர்களின், க்ளேஷ – துன்பங்களை, நாஷாய – அழிப்பவனாகிய, கோவிந்தாய – கோவிந்தனுக்கு, நமோ நமஹ - மீண்டும் மீண்டும் வந்தனம். நமஹ என்ற வார்த்தை இரண்டு முறை கூறப்படுவது பகவானிடம் நாம் முழுமையாக சரணடைந்து விட்டதைக் குறிக்கிறது.
ஆழ்ந்த பக்தியும், மந்திரத்தின் அதிர்வுகளுமே இந்த குறிப்பிட்ட மந்திரத்தை சக்தி வாய்ந்ததாக செய்துள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், இந்த மாதிரியான சக்தி வாய்ந்த மந்திரங்களே, நேர்மறை எண்ணங்கள் கொண்டு நிம்மதி பெற உதவுகின்றன. கர்ம வினைகளிலிருந்து காக்கவும் செய்கின்றன. இந்த மந்திரத்தை உச்சரிக்கையில் நாம் சில நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியமாகிறது.
அதாவது, இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அமைதியான மன நிலையுடன், கையில் 108 மணிகள் உடைய ஜப மாலையை வைத்துக்கொண்டு தினசரி ஓதுதல் சிறந்த பயனளிக்கும். நம் மனம் தெளிவு பெறும். துன்பங்கள் தூர விலகும். இந்த மந்திரத்தை தினசரி உச்சரித்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவோம். சந்தோஷம் பெறுவோம்.