
பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களில் தலையாயது. இந்த விரதம் இருப்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடித்துவிட வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகள் போன்றவற்றை படித்து முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று சிவ தரிசனம் செய்து நந்திக்கு பச்சரிசியில் வெல்லம் கலந்து படைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.
பிரதோஷ விரதம் முடிந்ததும் ஏழை, எளியோர்களுக்கு அல்லது தான் விரும்பியவருக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். அதேபோல் விருப்பப்பட்டவர்களுக்கு அன்னதானம் செய்யலாம் என்பது முறை.
அருகம்புல் மாலையின் மகத்துவம்:
நந்தி தேவருக்கு 'ருத்ரன்' என்றொரு பெயர் உண்டு. 'ருத்' என்றால் துக்கம், 'ரன்' என்றால் ஓட்டுபவன், ருத்ரன் என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். அதனால்தான் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசியில் வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
சோமசூக்தப் பிரதட்சணம்:
சாதாரண நாட்களில் சிவன் கோயில்களுக்கு செல்லும் பொழுது ஆலயத்தை மூன்று முறை வலம் வருவோம். ஆனால் பிரதோஷ காலத்தில் 'சோமசூக்தப் பிரதட்சணம்' செய்ய வேண்டும். ஏனென்றால் ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். அங்கு இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரண் அடையலாம் என்று எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பி வர ஆலகால விஷம் அந்தப் பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் பயத்தின் காரணமாக வலமும் இடமுமாக வந்த நிகழ்ச்சியைத் தான் சோமசூக்தப் பிரதட்சணம் என்று கூறுகிறோம்.
பிரதோஷம் வகைகள்:
சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும் நட்சத்திரங்கள் உதிக்கின்ற காலம் வரையிலுமான நேரத்திற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர்.
சுக்ல பக்ஷத்தில் வரும் சதுர்த்தி அன்று உள்ள பிரதோஷ காலத்தை பக்ஷப் பிரதோஷ காலம் என்பர்.
கிருஷ்ணபட்ச திரயோதசி மாலை நேரம் வரும் பிரதோஷ காலத்திற்கு மாதப் பிரதோஷம் என்று பெயர்.
கிருஷ்ண பக்ஷ திரியோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அந்த நாள் மகா பிரதோஷமாகும். ஏனென்றால் சனிக்கிழமை அன்றுதான் ஈசன் விஷத்தை அருந்தி, நீலகண்டனாகி தேவர்களை காத்தருளினார். இதனால் தான் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு அவ்வளவு சிறப்பு.
பிரளயத்தின்போது எல்லாமும் ஈசனில் அடங்கி ஒடுங்கும் அந்த காலமே பிரளய பிரதோஷம் என்று போற்றப்படுகிறது.
சர்வ மங்களம் தரும் பிரதோஷ வழிபாடு:
புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். குறைகளை களைந்து நிறைவினைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. 'பலரோடு ஆயினும் காலம் அறிந்து உண்' என்ற பழமொழியை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். அதிலும் காலம் அறிந்து அதற்கேற்ப வழிபாடு செய்வதற்கு அதிக பயன் கிட்டும்.
ஆதலால் பிரதோஷ காலம், ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி மற்றும் சூரிய சந்திர கிரகண காலங்களில் இறைவழிபாடு பெறுபவர்கள் பாவங்களிலிருந்து புண்ணியம் பெற்று யுகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நாமும் வழிபடுவோம்; தொட்டது துலங்கும்; கேட்டது கிடைக்கும்; உலகம் நலம் வாழும்! என்ற நம்பிக்கையோடு.