
ஆன்மிகம் என்பது பிரார்த்தனைகள், தியானம் மூலம் தெய்வத்துடன் இணைவதற்கும், கடினமான காலங்களில் நம்பிக்கையைத் தரவும், நேர்மறையான மாற்றத்தை அடைவதற்கும் உதவும். அந்த வகையில், பொதுவாக அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில ஆன்மிக விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது கோயிலில் மட்டுமே செய்ய வேண்டியது. வீட்டில் ஏற்றக் கூடாது.
2. சனி பகவானுக்கு வீட்டில் எள் தீபம் ஏற்றக் கூடாது. கோயிலுக்குச் சென்று சனி பகவான் சன்னிதியிலோ அல்லது நவகிரக சன்னிதியிலோ எள் தீபம் ஏற்றலாம்.
3. சனீஸ்வர பகவானின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. அதேபோல் நடராஜரின் உருவப் படத்தையும், கோபமாக இருக்கும் காளியின் படத்தையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.
4. குத்துவிளக்கை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேய்க்கக் கூடாது. அதேபோல், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது.
5. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டதும் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாமாக அதை அணைக்கக் கூடாது.
6. மருதாணி இலை கொண்டு தூபம் போட வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இரவில் தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் தலையணைக்கு அடியில் கொஞ்சம் மருதாணி இலைகளை வைத்துக் கொண்டு தூங்க நல்ல உறக்கம் வரும்.
7. வெள்ளெருக்கு பூவை மாலை கட்டி சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு அணிவிக்க, வறுமை நீங்கி செல்வ வளம் பெறலாம்.
8. சனிக்கிழமைகளில் ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்க அசுப பலன்களிலிருந்து விடுபடலாம். பசுக்கள், பறவைகள் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது கங்கை நதியில் நீராடுவதை விட புனிதமாகக் கருதப்படுகிறது.
9. சனிக்கிழமை அன்று சிவப்பு நிறத் துணி ஒன்றை எடுத்து அதில் ஏலக்காய், கிராம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம், துளசி இலைகள் சிறிது, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து பூஜித்து அதனை வியாபாரம் செய்யும் இடத்தில் வாசலில் கட்டிவிட தொழிலில் தடைகள் நீங்கி லாபம் உண்டாகும்.
10. கோமதி சக்கரம் என்பது கங்கையின் துணை ஆறான கோமதி ஆற்றுப் பகுதியில் இருந்து கிடைக்கும். இது சங்கு போன்று உருண்டையாக இருக்கும். வீட்டில் கோமதி சக்கரத்தை 11 என்ற எண்ணிக்கையில் வைத்து வழிபாடு செய்ய முழு பலனையும் பெற முடியும்.
11. வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை உண்டாக்கும் கோமதி சக்கரம் எடுத்த காரியங்களில் வெற்றியடையச் செய்யும். வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
12. சிறிய வடிவில் உள்ள 7 கோமதி சக்கரத்தை சிவப்பு துணி ஒன்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்கவிட, எதிர்மறை ஆற்றல் நம் வீட்டிற்குள் நுழையாது; சுபிட்சம் நிலைக்கும்.
13. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி போன்ற நாட்கள் திருஷ்டி கழிக்க ஏற்ற நாட்களாகும். சாம்பிராணி புகை போடுவது, தேங்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி கழிப்பது, காலடி மண்ணை எடுத்து திருஷ்டி கழிப்பது, கல்லுப்புடன் கடுகு, மிளகாய் வற்றல் சேர்த்து சுற்றி நெருப்பில் போடுவது என ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம்.
14. விளக்கை கிழக்கு, மேற்கு, வடக்கு போன்ற திசைகளில் ஏற்றலாம். தெற்கு திசை நோக்கி மட்டும் விளக்கு ஏற்றக் கூடாது.
15. தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும், எறும்புப் புற்றில் அரிசி மாவு சிறிது போடுவதும், துளசி மாடத்திற்கு முன்பு விளக்கேற்றுவதும் முன்னோர்களின் சாபம் நீங்க உதவும் எளிய பரிகாரங்களாகும்.