
மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, தனது கணவர் மீது அதீத பக்தி கொண்ட தர்மபத்தினி. அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் அப்படி வணங்க முற்பட்டபோது, அவரது உடல் நிழல் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்து துணுக்குற்றாள். உடனே தனது கணவருக்கு ஏதோ நிகழப்போகிறது என்பதை உணர்ந்தவள், அதைத் தடுக்கும் ஆவேசத்துடன் அகல்விளக்கை தூண்டி எரிய விட்டாள். குளித்து சாணம் தெளித்து கோலமிட்டாள்.
கண் விழித்த மகரிஷி நீராடப் புறப்பட, அவரைத் தடுத்தாள். “இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன். சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் செல்ல வேண்டாம்!’’என்றாள்.
அவள் பேசிய விதம் மகரிஷியின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்றவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டு பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டதை புரிந்து கொண்டு புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்தார்.
ஆற்றங்கரையில் காத்திருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் குடிலை நோக்கி வந்தனர். குடிலை நெருங்கியவர்களை அக்னிப் பிழம்பு எரித்தது. “மகாபத்தினி பூந்ததி தனது கற்பின் மீது சத்தியம் செய்து என்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள். எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது” என அக்னி பகவான் எச்சரித்தார்.
மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் சென்று விஷயத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே பூஜை செய்தாள் பூந்ததி. பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் ஒன்று கரைந்துகொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தக் காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது.
பூந்ததி பூஜை தடைபடாவண்ணம் கண்களை மூடி மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்த நிசப்தம் நிலவியது. கண்களைத் திறந்த பூந்ததி இறைவனுக்குப் படைத்த பிரசாதத்தை காகம் தின்பதை பார்த்து கோபமானாள். அருகில் இருந்த குச்சி எடுத்து விரட்டினாள். காகம் தள்ளிப்போனது. பூந்ததி நகர்ந்து அதை விரட்டினாள். மீண்டும் தள்ளிப் போனது. இப்படியாக காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள். இதுவரை விலகிப்போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது.
‘‘தாயே… மன்னியுங்கள்! குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது. விதிப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன்.
‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, அருகிலிருந்த கிணற்றில் குதித்தாள் பூந்ததி.
எமதர்மன் அவளைப் பின் தொடர்ந்து வந்து கிணற்றை எட்டிப் பார்த்தான். ‘பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே?’ என்று அவன் யோசித்தபோது, கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி.
“தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப்போகிறேனோ அங்கெல்லாம் காகம் உருவில் சென்று அவர்களை எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்” என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன்.
அதன்படி, காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டும் இருந்து வருகிறாள் பூந்ததி.