மயிலிறகு என்றதும் நம் நினைவிற்கு வருவது முருகப்பெருமானின் வாகனம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் கிரீடமாக இருப்பது போன்ற விஷயங்கள் ஆகும். பழங்காலத்தில் மன்னர்களுக்கு மயிலிறகைக் கொண்டு விசிறி விடுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலிறகில் இருக்கும் அதிர்ஷ்டம் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால், வீட்டிற்கு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீய சக்திகள் விலகும். மயில் அதனுடைய தோகையை விரித்து ஆடுவதைப் பார்க்கும்போது நம் மனதில் மகிழ்ச்சியும், பாசிட்டிவ் எனர்ஜியும் உருவாகும்.
அத்தகைய மயிலிறகை நம் வீட்டில் வைத்திருக்கும்போது, அது நல்ல நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மயிலிறகைக் கொண்டு விசிறி விட்டதன் காரணம், மயிலிறகில் இருந்து வரும் மென்மையான காற்று நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், மருத்துவத்தில் இன்றளவும் மயிலிறகை ஏதேனும் அடிப்பட்ட இடத்தில் பத்துப் போடுவதற்காக பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அதன் காரணம் அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான். மயிலிறகை நாம் படுக்கும் இடத்தில் வைத்தால், எந்த ஒரு விஷப் பூச்சிகளுள் வராது என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகள் சாப்பிட மறுத்தால் அல்லது வயிற்று வலி என்று அழுதால், மயிலிறகை அவர்கள் தலையில் வைத்து நீவி விடும்போது அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் நீங்கும். பள்ளிவாசலில் பிரச்னை என்று வரும் மக்களுக்கு மயிலிறகை வைத்து தலையில் நீவி விடும் பழக்கம் இன்றளவும் உண்டு.
திருவிழாக்களில் மயிலாட்டம் ஆடும் பழக்கம் உண்டு. இது எதற்காக என்றால், அந்த மயிலினுடைய தோகையை விரித்து ஆடும்போது அதிலிருந்து வரும் காற்று மக்களின் மீது படும். இது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும், பாசிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும், மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதற்காகவே ஆகும்.
மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால், செல்வம் செழிக்கும் என்று சொல்லப்படுகிறது. மயிலிறகை குழந்தையின் அருகில் வைப்பதால், குழந்தைக்கு இருக்கும் பட்சி தோஷம், திருஷ்டி போன்றவை கழியும்.
வயதானவர்களை மயிலிறகு படுக்கையின் மீது படுக்க வைப்பார்கள். அவ்வாறு செய்யும்போது அது சுருங்கிய சருமம் வலுவடையவும், பொலிவாகவும் உதவுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மயிலிறகை நீங்களும் உங்கள் வீட்டில் வைத்து அதன் பலனை முழுமையாகப் பெறுங்கள்.