
பாரத மக்களின் வாழ்வியலில் பசுக்கள் என்றும் உயரிய இடத்தில் உள்ளன. உலகில் மக்கள் கூட்டம் நாகரீகம் பெறத் தொடங்கியதும் மாடு மேய்ப்பதை பிரதானமாக வைத்திருந்தனர். உலகம் முழுக்க மேய்ச்சல் தொழில் இருந்தாலும், இந்தியாவில் தொழிலாக மட்டும் அல்லாமல், அது ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்து தொன்மவியல் படி பசுக்களில் எல்லா கடவுள்களும் உறைவதாக நம்பப்படுகிறது. அதனால் பசுக்களை தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். பசுக்களை தினமும் வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
தாய்ப்பாலுக்கு பிறகு ஒருவர் தன் ஆயுள் வரை பசும் பாலை தான் பருகுகிறார். இதனால் பசுவினை கோமாதா என்று அழைக்கிறார்கள். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருட்களை பெறுகிறோம். ஒருவர் தினசரி சாப்பிடும் உணவுப் பொருட்களில் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்கள் அதிகம்.
இதனால் பசுவினை 'கேட்டதை கொடுக்கும் காமதேனுவாக' பார்க்கிறோம். ஒரு நாட்டின் செல்வத்தினை அந்த நாட்டில் உள்ள பசுக்களை வைத்து அளவிடலாம். அந்த அளவிற்கு செல்வத்தின் அதிபதியாக பசு இருக்கிறது.
பசுக்கள் வளர்ப்பதினால் ஒருவரின் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். பசு பல வழிகளில் செல்வத்தினை கொண்டு வந்து சேர்க்கும். பசுவின் பாலினை விற்பனை செய்யலாம், பாலை தயிராக்கியும் விற்பனை செய்யலாம், பகிரிலிருந்து தயிரில் இருந்து வெண்ணெயை கடைந்து எடுத்து வெண்ணெயையும், வெண்ணெயை உருக்கி நெய்யாகவும், வெண்ணெய் எடுத்து மீந்து போன மோரையும் விற்பனை செய்ய முடியும். பாலில் இருந்து பல்வேறு வகையான இனிப்புகளை செய்து விற்பனை செய்கிறார்கள்.
இது மட்டும் இல்லாமல் பசுவின் கோமியம் தீய சக்திகளை விரட்டவும், புனித நீராகவும் கருதப்படுகிறது அதுவும் புனித செயல்களின் தேவைகளுக்கு விற்பனை ஆகிறது. பசுவின் சாணத்தில் இருந்து வாசனை திரவியங்கள் கலந்து ஊதுபத்தி செய்யப்படுகிறது; சாணத்தில் மூலிகைகளை சேர்த்து எரித்து விபூதியும் செய்யப்படுகிறது.
பசுக்களை வளர்ப்பதும், அதற்கு உணவளிப்பதும் மஹாலக்ஷ்மியின் மனதினை குளிர வைக்கும் செயலாகும். இந்த புனிதமான செயலினால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். கோ இருக்கும் இடத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வார்.
மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடத்தில் வறுமை அகன்று எப்போதும் அதிர்ஷ்டமும் ஆற்றலும் செல்வமும் நிறைந்து இருக்கும். பசு வளர்ப்பவர்களின் இல்லங்களில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.
பசுக்கள் புனிதமான விலங்கு ஆதலால் அதை வளர்ப்பதால் ஒருவரின் பாவங்கள் குறைய தொடங்குகிறது. எந்த ஒரு விலங்கின் மீதும் அன்பு காட்டுவதால் நற்பலன்கள் உண்டாகும். பசுக்களை அன்புடன் பராமரிப்பதால் முற்பிறவியின் தீமைகள் அனைத்தும் குறைகிறது. நிறைய நற்பலன்கள் உருவாகிறது. பசுக்களை வளர்ப்பது மட்டும் அல்லாமல் அதை தானமாக தருவதும் அதிக நற்பலன்களை தருகிறது. பசு தானமாக கொடுக்கப்பட்ட பின் அதன் பலன் ஒரு நாளோடு முடிவது இல்லை. தினந்தோறும் பால் மூலம் அந்த பசு பசியை ஆற்றுகிறது, தானமாக பெற்றவருக்கு வருமானத்தையும் தருகிறது, அந்த வகையில் கோதானம் தினம் தினம் நற்பலன்களை கொண்டு வந்து தீய கர்மாவினை விடுபட வைக்கிறது.
பசுக்களை வழிபடுவதால் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். பசுக்கள் வளர்க்கப்படும் இடத்தில் மருத்துவக் கடவுளான தன்வந்திரியும் குடியிருப்பார். பசுவின் சாணமும், கோமியமும் கிருமி நாசினியாக செயல்படுகின்றன. பசும் சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டில் கதிர் வீச்சு அபாயம் கூட குறைகிறது.