
யானை முடி வைத்து மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் போன்றவற்றை பலரும் கைகளில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன்களிலும் யானை முடி மோதிரம் தயாரிப்பது உண்டு. யானை முடி வைத்து அணியப்படும் ஆபரணங்களின் விசேஷ சிறப்பு என்ன தெரியுமா?
நவகிரகங்களில் குரு பகவானின் வாகனம் யானையாகும். தங்கம் குருவுக்கு உகந்ததாகும். யானை முடி மோதிரம்அணிவதால் நம்மை நோக்கி வரும் சூழ்ச்சிகள் மற்றும் ஆபத்துக்கள் தடுக்கப்படும். மேலும், இது பில்லி, சூனியம், மாந்த்ரீகம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கக் கூடியது. நமக்கு வரக்கூடிய தீய விஷயங்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி பாதுகாப்பு அரணாகச் செயல்படும். யானை முடி ஆபரணம் அணிவதால் யானை பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. பயந்த சுபாவம் உள்ளவர்கள் யானை முடி ஆபரணம் அணிந்தால் நல்ல தைரியம் கொடுக்கும். அதோடு, எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாது.
முதன் முதலாக வியாழன் அன்று குரு ஹோரையில் வளர்பிறை திதியில் இந்த மோதிரத்தை அணிய வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இந்த ஆபரணத்தை அணியலாம். ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் இதை அணிய வேண்டும். மாதம் ஒரு முறை இந்த ஆபரணத்தை சாம்பிராணி புகையில் காண்பிக்க வேண்டும். இப்படிச் செய்ய எதிர்மறை ஆற்றல்கள் விலகும். வியாழக்கிழமை அன்று பிறந்தவர்களும் 3, 11, 21, 29 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த ஆபரணத்தை அணிவது சிறப்பு.
சரி, கண்ணாடி டம்பளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை வைப்பதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா உங்களுக்கு? வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
ஆன்மிக ரீதியாக இதற்கு எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றலாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. தண்ணீருக்குள் தன்னைச் சுற்றியுள்ள ஆற்றலுக்கும் தகுந்தாற்போல் மாறக்கூடிய சக்தி எலுமிச்சைக்கு உண்டு. நம் வீட்டில் ஒரு கண்ணாடி டம்பளரில் எலுமிச்சையை போட்டு வைக்க, தீய எண்ணத்தோடு நம் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணத்தை முறியடிக்கும் சக்தி இதற்கு உண்டு.
வியாபார இடங்களிலும் இதை வைக்கலாம். இதை வெள்ளிக்கிழமைகளில் வைப்பது மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை நீரை மாற்ற வேண்டும். பழைய நீரை மற்றவர்கள் கால் படாத இடத்தில் கொட்டி புதிய நீர் ஊற்ற வேண்டும். எதிர்மறை சக்திகளை நீக்க இது சிறந்த பரிகாரமாக விளங்குகிறது.