
பிரதோஷம் என்பது சிவபெருமான் மற்றும் நந்திகேஸ்வரர் வழிபாடு ஆகும். அனைத்து சிவாலயங்களிலும் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எம்பெருமான் ஆலகால விஷமுண்ட நாள் சனிக்கிழமை எனப்படுவதால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானதாகவும் மகிமை பொருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதை மகா பிரதோஷம் என்பார்கள். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணி வரை நடைபெறும். அபிஷேகத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பச்சரிசி மாவு, நெய், எண்ணெய் மற்றும் சந்தனம் போன்ற அபிஷேகத் திரவியங்களை வாங்கிக் கொடுக்கும் அன்பர்களுக்கு சிவபெருமான் அளவில்லா திருவருள் புரிவார்.
நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் கொடுப்பதும் மிகவும் விசேஷம். அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு அழகாய் அலங்கரிக்கப்பட்ட ஈசனையும் பார்வதியையும் நந்தி வாகனத்தில் அமர்த்தி தேவார, திருவாசக துதி பாடல்களுடன், ‘ரிஷபாரூட மூர்த்தி மகாதேவா’ என்ற கோஷம் முழங்க வலம் வரும் காட்சியை காண்போருக்கு பாவங்கள் விலகி நற்பலன்கள் தானாகவே வந்தடைகின்றன. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை பூஜிப்பவர்கள் தமது பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.
தேவர்களின் குறையை முதலில் நந்தியம் பெருமானே கேட்டு சிவபெருமானிடம் சென்று விண்ணப்பிப்பதால் பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கே முதலில் பூஜை செய்ய வேண்டியது அவசியமாகும். ‘ப்ர’ என்பது அளவு கடந்ததான தன்மையை உணர்த்தும் தோஷம் என்ற சொல் தீமையை குறிக்கும். எனவே, பிரதோஷம் என்பது ஆலகால விஷம் தோன்றியதால் அனைவருக்கும் அளவு கடந்த தீமை ஏற்பட்டு பெருந்தொல்லை உண்டாக்கிய காலம் பரமேஸ்வரன் அந்த விஷத்தினை உண்டு யாவரையும் காப்பாற்றிய காலம் எல்லோருக்கும் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி கொள்ள ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடிய காலம்.
சிவனையும் நந்தியையும் வணங்கிய பிறகு அப்பிரதட்சணமாக வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிய பின்பு பிரதட்சணமாக வந்து சிவன் மற்றும் நந்தியை வணங்கி வலம் வரும்போது கோமுகியை கடக்காமல் மீண்டும் நந்தியிடம் வந்து கொம்புகளுக்கு நடுவே சிவனை தீபாராதனையில் தரிசிக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்தால் அஸ்வமேதயாக பலன் கிட்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நந்தி தேவர் ஒப்பற்ற பெருமையை பெற்றவர். தர்மமே உருவானவர். ‘சிவாய நம’ என்னும் ஸ்ரீ பஞ்சாக்ஷர வடிவமானவர். எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பேறு பெற்றவர் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நிவேதிப்பர். அருகம்புல் ஆராதனையும் நடைபெறும். வில்வ தளத்தால் அலங்காரம் செய்வர். திருக்கயிலை மாமலையில் ஐயன் உமையம்மையுடன் நவரத்தின மணி பதித்த மரகத ஊஞ்சலில் எழுந்தருள்வார். அது சமயம் எதிரிலே காட்சி தரும் ரிஷப தேவரின் மூச்சுக்காற்று பட்டு ஊஞ்சல் மிக அழகாக ஆடும். இக்காரணம் பற்றியே சிவ சன்னிதிக்கு முன்னால் நந்தி தேவர் திருத்தோற்றமளிக்கிறார்.
ஊழிக்காலத்தில் ஏழு கடலும் ஒரு கடலாகி பிரபஞ்சமே ஒன்றினுள் ஒன்று அடங்கி, இறுதியில் அனைத்துமே சிவனுள் அடக்கம் என்னும் நிலையில் பிரம்மாதி தேவர்கள், முனிவர்கள் கூட சிவ சக்தியினுள் அடங்கி ஒடுங்கி விடுகின்றனர். அது சமயம் நந்தி மட்டும் எம்பெருமான் திருக்கருணையால் சிவனுள் ஒடுங்காமல் சிவனின் வாகனமாய் விளங்குகிறார். எனவேதான் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கும் எம்பெருமானுக்கும் சேர்த்து அபிஷேக ஆராதனைகள் ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் அற்புதமாகக் கொண்டாடப்படுகிறது.
மூன்று பிரதோஷங்களை தொடர்ச்சியாக தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான மூன்று தெய்வங்களையும் ஒருசேர தரிசித்ததற்கு சமம்.
ஐந்து பிரதோஷங்களை தொடர்ச்சியாக பார்த்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
ஏழு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
பதினொரு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் உடலும் மனம் வலிமை பெறுவதோடு புது தெம்பும் கூடும்.
பதிமூன்று பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
இருபத்தியொரு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
முப்பத்தி மூன்று பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
எழுபத்தி ஏழு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
நூற்றியெட்டு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்.
நூற்றி இருபத்தியொரு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜன்மம் என்பதே கிடையாது.
ஆயிரத்தெட்டு பிரதோஷங்களை தொடர்ந்து பார்த்தால் ஒரு அசுவ மேத யாகம் நடத்தியதற்கு சமம்.
நாளை சனிக்கிழமை சனி பிரதோஷம். இத்தினத்தன்று சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் தரிசிப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். அனைத்து தோஷங்களும் நீக்கிடும். சனி பிரதோஷம்.அன்று சிவாலயம் சென்று ஈசனின் பேரருள் பெறுவோம்.