
கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது தெய்வங்கள் குதிரை வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவதைக் கண்டிருப்போம். குதிரை வாகனம் என்றாலே கள்ளழகர்தான் ஞாபகத்திற்கு வரும். வைகையில் சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் குதிரையின் மீது வரும் அழகை கண்டு வியக்காதவர் எவருமில்லை. ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட வண்ணத்திலான குதிரைகளை குறிப்பிடுகின்றன புராணங்கள். வேதமே வெண்ணிறப் புரவியாக வந்து சிவபெருமானை தாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
அம்பிகை நீல நிற குதிரையில் அமர்ந்து உலா வருவாள் என்றும், விநாயக பச்சை வண்ண குதிரையிலும், முருகன் சிவப்பு வண்ண குதிரையிலும், சண்டிகேஸ்வரர் பொன்வண்ண குதிரையிலும் பவனி வருவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பொதுவாக, இந்து சமய புராணங்களில் குதிரை வாகனம் சாஸ்தா, விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதப்படும் கல்கி, சூரியன், சந்திரன் ஆகியோரின் வாகனமாக குறிப்பிடப்படுகிறது. குபேரனின் வாகனம் வெண்குதிரை. இவரை வணங்க செல்வ செழிப்பு உண்டாகும். சூரியனின் வாகனம் குதிரை. இவர் ஏழு நிறம் கொண்ட வானவில்லைக் குறிக்கும் வகையில் ஏழு குதிரையின் மீது சவாரி செய்கிறார். திருவிழாக்களின்பொழுது அந்தந்த கோயில் உத்ஸவ மூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் குதிரை வாகனமும் ஒன்றாக உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 'மருங்கூர்' சுப்பிரமணியர் திருக்கோயிலில் உள்ள முருகனுக்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மயில் வாகனத்திற்கு பதிலாக குதிரை வாகனத்தில் மட்டுமே முருகப்பெருமான் பவனி வருகிறார். கௌதம முனிவரின் சாபத்தினால் இந்திரன் ஈசனிடம் சாப விமோசனம் பெற்றும், இந்திரனை சுமந்து வந்ததால் அவனது வாகனமான 'உச்சை சிரவசு' என்னும் குதிரையும் பாப விமோசனம் வேண்டி இங்கு உள்ள குன்றின் மீது அமர்ந்து முருகனை வேண்டி தவம் இருந்தது. முருகப்பெருமான் காட்சி தந்து பாவ விமோசனம் கொடுத்தருள, இக்கோயில் 'குதிரை வழிபட்ட தலம்' என்ற சிறப்புப் பெற்றது.
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியின் குருவாக போற்றப்படும் ஹயக்ரீவர் பெருமாள் குதிரை முகமுடையவராகவே வணங்கப்படுகிறார். திருவிழா காலங்களில் வீதியுலாவின் பொழுது பல திருத்தலங்களில் சுவாமியோ அம்பாளோ குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறுவது சிறப்பாகும். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை தேருக்கு முதல் நாள் இரவு மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருகிறாள்.
ஸ்ரீரங்கத்தில் நம் பெருமாள் திருத்தேர்களில் எழுந்தருளுவதற்கு முதல் நாள் குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் 'வேடுபறி திருநாள்' அன்று கோயில் மணல் வெளியில் குதிரை வாகனத்தில் நம் பெருமாள் அசைந்தாடி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
அதேபோல் மதுரை சித்திரைப் பெருவிழாவின்போது தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் சிறப்பாகும்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி ஆவணி திருவிழாவில் வெள்ளை குதிரை வாகனத்தில் 'கலிவேட்டை வைபவம்' நடைபெறும். குதிரை வாகனம் என்பது மரத்தால் செய்யப்பட்டு மேற்புறம் உலோக தகடுகளால் காப்பும், அழகும் செய்யப்படும். குதிரைக்கு இறக்கைகள் உள்ளது போல வடிவமைக்கப்பட்டு பாய்ந்து செல்வது போன்ற தோற்றத்தில் இருக்கும். குதிரை வாகனத்தின் மீது உத்ஸவரை அமர்த்த ஏதுவாக இரும்பால் தாங்கு பலகைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கால்களில் தோன்றும் வியாதிகள் நீங்கவும், வண்டி வசதிகள் நன்கு அமையவும், மனச்சோர்வு நீங்கவும் குதிரைச் சிலைகளை தெய்வங்களின் சன்னிதியில் காணிக்கையாக செய்து வைக்கும் பழக்கம் உண்டு. இதற்கு 'குதிரை எடுப்பு' என்று பெயர்.
கோயில்களில் வாகனமாக இருக்கும் குதிரைகளையும் வழிபடுவது வழக்கம். அதன் கண்களில் சூரிய சந்திரர்கள், சேணங்களில் பாம்பரசர்கள், முதுகில் மகாலட்சுமி, வாலில் வாயு, பார்வையில் அக்னி போன்ற தெய்வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் உள்ளது.