
பகவான் மஹாவிஷ்ணு கம்சனை அழிப்பதற்காக பூமியில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்த ஶ்ரீ கிருஷ்ணர், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோகுலத்தில் வாழும் இடையர் குடி தலைவரான நந்தகோபன் - யசோதைக்கு மகனாக வளர்ந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் சிறு வயதாக இருக்கும்போதே தங்களின் குல வழக்கப்படி, கோகுல மக்களுடன் மாடு மேய்க்கும் தொழிலைச் செய்தார். எத்தனையோ பணிகள் இருக்க, கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக மாடு மேய்த்தார்? என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம்.
காரண, காரியமின்றி எதுவும் நடைபெறுவது இல்லை. இறைவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதை மனிதர்கள் தங்களுக்குப் பாடமாக எடுத்துக்கொண்டு, வாழ்வியலை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் மாடு மேய்த்ததும், காலபைரவர் நாயை தனது வாகனமாக வைத்திருப்பதும் ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காகத்தான். மனிதர்களைப் போலவே விலங்குகளையும் இறைவன்தான் படைத்தார். அவரைப் பொறுத்த வரை தேவர்களும் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றுதான். விலங்குகளுடன் மனிதர்கள் இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதை மூலக் கருத்தாகக் கொண்டுதான் கிருஷ்ண அவதாரத்தில் கண்ண பரமாத்மா மாடுகளை மேய்த்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களை மிகவும் நேசித்தார். அந்த நேசம் பசு புனிதமான விலங்கு என்பதால் மட்டுமல்ல, ஒரு விலங்கை எந்த விதம் நேசிப்பது என்பதையும் காட்டுவதற்காக அந்த லீலை நடந்தது. பசு எவ்விதம் புனிதமானது? கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவின் மறு வடிவமாக பசு இருக்கிறது. பசு தன்னலமற்ற ஒரு உயிராக உள்ளது. தனது குட்டிக்காக சேர்த்து வைத்திருக்கும் பாலை மனிதர்கள் கறந்தாலும், அது வன்மம் கொள்வதில்லை.
பசுவின் பால் என்றும் புனிதமானது, அது தியாகத்தின் அடையாளம். தாய்ப்பாலுக்கு பிறகு பசுவின் பால்தான் மனிதர்களின் முக்கிய உணவாக இருக்கிறது. அதனால், தாய்க்கு இணையான ஒரு ஸ்தானம் பசுவிற்கு வழங்கப்படுகிறது. காமதேனுவை போலவே பசுவும் பொருட்களை வாரி வழங்குகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி உள்ளிட்ட ஏராளமான உணவுப் பொருட்களை நாம் பெற பசுவே காரணமாக இருக்கிறது.
பசுவின் சாணத்தில் திருநீறு, ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது, பசுவின் சாணமும் சிறுநீரும் கிருமி நாசினியாகவும் பாரம்பரிய உரமாகவும் எரிபொருளாகவும் உள்ளது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பசு உள்ளது. அதனாலேயே பசு மஹாலக்ஷ்மியின் வடிவமாகவும், அனைத்து தேவர்களின் வசிப்பிடமாகவும் விளங்குகிறது.
பசு ஒரு நாட்டின் செல்வச் செழிப்பையும் பெருமையையும் உணர்த்துகிறது. அது மட்டுமல்லாமல், பசு ஒரு நாட்டின் மரியாதை உருவகமாகவும் உள்ளது. அதனாலேயே சங்க காலத்தில் போருக்கு முன் எதிரி நாட்டின் ஆநிரைகளை போர் வீரர்கள் கவர்ந்து வருவது வழக்கத்தில் இருந்தது. பசுக்களைக் கவர்வது எதிரி நாட்டு மன்னனுக்கு இழுக்காகக் கருதப்பட்டு, அவனும் படையெடுத்து வருவான், போரும் தொடங்கும்.
இன்று உலக அரங்கில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பசுவின் மூலம் கிடைக்கும் பொருளாதாரம் ஒரு நாட்டை பலப்படுத்துகிறது. இந்தியா மட்டுல்லாது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்துக் கண்டங்களிலும் பசுவின் மூலம் கிடைக்கும் பொருளாதாரம் இன்று வரையில் மாறாமல் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பாலின் தேவை தினசரி நுகர்வில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஒரு விலங்கு பல வழிகளில் மனிதர்களுக்கு உதவி செய்கிறது என்றால் அது பசுதான். தன்னை வளர்ப்பவர்கள் மீதும் பசு அன்பு காட்டுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் பசுவினை மேய்த்தது பலவித காரணங்களுக்காகத்தான். செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு எதுவும் இல்லை. அது பொருளாதாரத்தை வளப்படுத்தும் ஒரு நல்ல தொழில்முறையாகும். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், அவற்றின் உணவுத் தேவைகளை நிறைவேற்றுதல், பாதுகாத்தல், பராமரித்தல் போன்ற கடமைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.