வாழ்க்கையின் துன்பங்களை நொடியில் நீக்கும் நரசிம்ம வழிபாடு!

Interesting facts about Narasimhar
Sri Narasimhar
Published on

‘நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை’ என்று கூறுவார்கள். உடனடியாகப் பலன் தரக்கூடிய தெய்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் ஸ்ரீ நரசிம்மர் என்பது ஐதீகம். குறிப்பாக, உடல் நலம் இல்லாதவர்கள் மனதில் நரசிம்மரின் ஸ்லோகத்தை நினைத்து மனமுருக வேண்டும்போது நிச்சயம் உடல் நலம் சீராகும் என்பது நம்பிக்கை. அது மட்டுமா? தவறான செயல்களைக் கண்டிப்பதிலும் நரசிம்மர் முதலிடத்தில் உள்ளார் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பகவான் மகாவிஷ்ணு பக்தர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும்போதெல்லாம் ஏதேனும் ஒரு அவதாரத்தில் தோன்றி அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் தசாவதார வரலாறுகளை அறிந்திருப்போம். இந்த பத்து அவதாரங்களின் தோற்றங்களும் செயல்களும் வெவ்வேறாக இருந்தாலும் அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதே அனைத்து அவதாரங்களின் ஒரே நோக்கமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்:
மனம், உடல், ஆன்மா: தவத்தின் ரகசியங்கள்!
Interesting facts about Narasimhar

இந்த அவதாரங்களில் நான்காவதாகத் தோன்றியவர்தான் ஸ்ரீ நரசிம்மர். மற்ற அவதாரங்களை விட மேலான சிறப்பு பெறுகிறார் நரசிம்மர். காரணம், உயிரை விடக்கூடிய கடும் சோதனைகள் வந்த இறுதி நொடியிலும் முழு நம்பிக்கை வைத்து வணங்குவோரை எந்த நேரம், எந்த இடம், எந்த உருவம் என்று எதையும் ஆராயாமல் நொடியில் வந்து காப்பதில் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை என்பார்கள்.

மேலும், கடவுள்களை நிந்திப்பது, வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவது, சக மனிதர்களை வேதனைக்கு உள்ளாக்குவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி தனது பக்தர்களைக் காப்பதிலும் நரசிம்மர் சிறந்து விளங்குகிறார்.

வரலாறு: வேதங்களில் புகழ் பெற்ற முனிவரான காஸ்யபருக்கும் அவரது மனைவி திதிக்கும் பிறந்தவர்களே இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன் எனும் அசுரர்கள். பூமி மாதாவை கவர்ந்து சென்ற தம்பி இரண்யாட்சனைக் கொன்று பூமியை மீட்ட மகாவிஷ்ணு (வராக அவதாரம்) மீது கோபம் கொண்ட இரணியகசிபு பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல நிபந்தனைகளுடன் சாகா வரத்தைப் பெற்றான்.

இதையும் படியுங்கள்:
குலதெய்வ வழிபாடு: வாழ்க்கையில் நன்மைகளை அள்ளித்தரும் சக்தி!
Interesting facts about Narasimhar

அவனுக்குப் பிறந்த பிரகலாதன் எனும் சிறுவன் மகாவிஷ்ணுவின் மீது தீவிர பக்தி கொண்டவனாக இருக்க, அதை எதிர்த்த இரண்யகசிபு பல்வேறு வகைகளில் அவனைத் துன்புறுத்தி இறுதியில், ‘இதோ உன்னைக் கொல்லப்போகிறேன். உன் விஷ்ணு எங்கே இருக்கிறான்? சொல். இதோ இந்தத் தூணில் இருக்கிறானா?’ என சினத்துடன் கேட்க, பிரகலாதனோ ‘ஆம், என் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ எனச் சொல்ல, அதைக்கேட்டு சினத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட இரண்யன் ஆவேசத்துடன் எதிரிலிருந்த பிரமாண்டமான தூணை தனது கதாயுதத்தால் இடித்துத் தள்ள, அதிலிருந்து அகிலமே கிடுகிடுக்க கோபாவேசத்துடன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார் ஸ்ரீஹரி நாராயணன்.

கோரைப் பற்களுடன் நீண்டு உயர்ந்த திருமேனியில் பிடரி மயிர்கள் சிலிர்க்க செக்கச்சிவந்த கண்களுடன் விரிந்த மார்பு கொண்டு மனிதன் பாதி சிங்கம் பாதி என்று ஸ்ரீ நசிம்மராக வந்தவரைப் பார்த்து அனைவரும் நடுங்கினர். நரசிம்ம மூர்த்தியைக் கொல்ல மூர்க்கத்துடன் பாய்ந்த அசுரனை அந்திசாயும் வரை போரிட்டு பின் அரண்மனையின் நிலைப்படிக்கு இழுத்துச்சென்று தனது கூரிய நகங்களால் அவனது குடலை உருவி அவனை வதம் செய்தார் ஸ்ரீமன் நாராயணன்.

இதையும் படியுங்கள்:
மந்திரம் உச்சரிக்கும்போது ஏன் கண்களை மூடுகிறார்கள்? ஆன்மிகமும் அறிவியலும் சொல்லும் ரகசியம்!
Interesting facts about Narasimhar

இரண்யகசிபு பிரம்மாவிடம் பெற்ற வரங்களின் விதிப்படி மனிதரும் தேவரும் மிருகமும் இல்லாத உருவத்தில், பகலும் இரவுமில்லாத அந்திப்பொழுதில், அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் இல்லாத வாயிற்படியில், எவ்வித ஆயுதங்களின் உதவியும் இல்லாமல் தனது கூரான நகங்களையே ஆயுதமாக்கி தமது பக்தன் பிரகலாதனை மகனென்றும் பாராமல் கொல்லத் துடித்தவனின் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்று வழிந்த ரத்தத்தை ஆவேசத்துடன் குடித்தார் நரசிம்மர்.

வதம் முடிந்த பிறகும் ஸ்ரீ நரசிம்மரின் கோபம் சற்றும் தணியாமல் இருக்க, அச்சமுற்ற தேவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மரை சமாதானப்படுத்த ஸ்ரீதேவி உட்பட வேறு எந்த தெய்வங்களாலும் முடியாதபோது நாரதரின் யோசனைப்படி அவரின் பக்தனான சிறு பிள்ளை பிரகலாதனையே அவர் முன் வரச்செய்து அவன் பாடிய துதியில் மகிழ்ந்து நரசிம்மர் உக்கிரம் தணிந்து சாந்தமானதாக வரலாறு.

இதையும் படியுங்கள்:
அதிசய கருடாழ்வார்: தமிழக கோயில்களில் நீங்கள் அறியாத ரகசியங்கள்!
Interesting facts about Narasimhar

சிறப்பு: நரசிம்மர் யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நவ நரசிம்மராகவும் பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பக்தர்களுக்குப் பிடித்த பல வடிவங்களிலும் மகாவிஷ்ணுவின் ஆலயங்களில் அருள்பாலிக்கிறார்.

இறைவன் என்பவர் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் எனும் ஆன்மிகத் தத்துவத்தை விளக்கும் ஸ்ரீ நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்த நேரமாக அவர் அவதரித்த அந்திப் பொழுதான மாலை 4.30 முதல் 7.30 மணி வரை சிறப்பு. நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால் மகாவிஷ்ணுவுக்கு ஏற்ற  மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையே நரசிம்மருக்கும் பயன்படுத்தலாம். தூய மனம் உடல் சுத்தத்துடன் நரசிம்மர் துதிகளை ஜபித்து நரசிம்மரின் அருளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com