குடும்ப மகிழ்ச்சிக்கு பைரவர் வழிபாடும் பச்சரிசி மாவு கோலமும்: பிரிந்தவர்களையும் சேர்க்கும் எளிய பரிகாரம்!
குடும்பம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களால் வேறு எந்த வேலையிலும் நல்ல கவனம் செலுத்த முடியாது. பிரச்னைகளை நினைத்துக்கொண்டே துவண்டு போய்விடுவார்கள். சந்தோஷமான மனைவி, சந்தோஷமான கணவன், சந்தோஷமான பிள்ளைகள், சந்தோஷமான மற்ற உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் நம்முடைய வெற்றி. ஒருவருடைய பலமும் அவர்கள் குடும்பம்தான். பலவீனமும் அவர்களுடைய குடும்பம்தான்.
நமக்கு மிகவும் பிடித்த உறவுகள் நம்மிடம் சண்டை போட்டு பிரிந்துவிட்டால் அதை நம்மால் தாங்க முடியாது. எப்படியாவது அவர்களை பேசவைக்க வேண்டும், எப்படியாவது அவர்களோடு நட்புறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்போம். அதற்கு சில முயற்சிகளையும் செய்வோம். ஆனால், முயற்சிகள் தோல்வியடையும்போது மனம் தளர்வோம். இப்படி முரண்டு பிடிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் நம் வசப்படுத்திக்கொள்ள ஒரு வழி உள்ளது.
இந்தப் பரிகாரத்தை செவ்வாய்கிழமை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் குறையாது. நாளுக்கு நாள் சந்தோஷம் இரட்டிப்பாகும். வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்கிழமை அன்று ராகுகாலத்தில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்கிழமை மாலை மூன்று மணியிலிருந்து 4.30 மணி வரை பைரவர் சன்னிதானத்துக்கு முன் இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணை விட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு செவ்வரளிப் பூவை வாங்கிக் கொடுத்து பிறகு நைவேத்தியமாக துவரம் பருப்பு பயன்படுத்தி ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
சாம்பார் சாதம், துவரம் பருப்பு சுண்டல் இப்படி எந்த பிரசாதமாக இருந்தாலும் சரி. இப்படி பைரவரை வழிபட்டு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவு எப்போதுமே வராது. பிரிந்து போன உறவுகள் கூட ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும்.
இதைத் தவிர, இந்த பரிகாரத்தையும் செய்யலாம். வீட்டு பூஜை அறையில் பச்சரிசி மாவு கோலம் போட, தோஷம் மற்றும் திருஷ்டிகளையும் அகற்றும். இது நேர்மறை சக்திகளை அதிகரிக்கச் செய்யும். வாசலில் மஞ்சள் நீர் தெளித்து பச்சரிசி மாவு கோலம் போடுங்கள். வாசல் அருகில் வலது புறத்தில் உருளி ஒன்றை வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வாசனை மிகுந்த பூக்களை நிரப்பி வைக்க, வீட்டில் இறைபக்தி அதிகரிக்கும்.
பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பட்டை, ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை மிகுந்த பொருட்களை ஒரு உருளியில் தண்ணீர் சேர்த்து அதில் சேர்க்க இந்த வாசம் எவ்வளவு அளவு நம் வீட்டில் நுழைகிறதோ அந்த அளவிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

