புவனேஸ்வர் கோயில்கள்: கட்டாயம் தரிசிக்க வேண்டிய 6 அற்புத ஆன்மீகத் தலங்கள்

கலிங்கக் கட்டிடக்கலையும் ஹரிஹர தத்துவமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புவனேஸ்வர் கோயில்களின் வழிகாட்டி.
புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples

இந்தியாவின் கோயில் நகரமான புவனேஸ்வரில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்..

1. லிங்கராஜர் கோயில் - Lingaraj Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
Lingaraj Temple - புவனேஸ்வர் கோயில்கள்

இது புவனேஸ்வரில் அமைந்துள்ள கோயில்களிலேயே மிகப்பெரியது. 11-ஆம் நூற்றாண்டில் சோமவம்சி மன்னர் ஜஜாதி கேசரியால் கட்டத் தொடங்கப்பட்டு, அவரது மகன் லலாடேந்து கேசரியால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. கலிங்கக் கட்டிடக்கலை பாணியில், சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட இதன் பிரதான கோபுரம் சுமார் 180 அடி உயரமுடையது. 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்திற்குள் சுமார் 158 சிறிய சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள சிவபெருமான் 'ஹரிஹரன்' என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுவும்,சிவனும் இணைந்த சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். அதனால் சிவபெருமானுக்குரிய வில்வ இலைகளும், விஷ்ணுவுக்குரிய துளசி இலைகளும் ஒரே நேரத்தில் சாற்றப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மகா சிவராத்திரியன்று  கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படும் 'மகா தீபம்' நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். (குறிப்பு: இக்கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள்).

2. முக்தீஸ்வரர் கோயில் - Mukteshwar Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
Mukteshwar Temple - புவனேஸ்வர் கோயில்கள்

10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் "ஒடிசா கட்டிடக்கலையின் இரத்தினம்" என்று அழைக்கப் படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும், இதன் சிற்ப வேலைப்பாடுகள் உலகப் புகழ்பெற்றவை. இக்கோயிலின் பிரதான ஈர்ப்பு, இதன் நுழைவாயிலில் அமைந்துள்ள அரைவட்ட வடிவ பௌத்த மற்றும் கலிங்க பாணி கலந்த தோரண வளைவு ஆகும்.

இதில் அழகிய தேவதைகள், மயில்கள் மற்றும் குரங்குகளின் உருவங்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுவர்களில் பஞ்சதந்திரக் கதைக் காட்சிகள், யோகப் பயிற்சிகள் செய்யும் முனிவர்கள் மற்றும் பெண் உருவங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

3. கேதாரேஸ்வரர் கோயில் - Kedareswar Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
Kedareswar Temple - புவனேஸ்வர் கோயில்கள்

முக்தீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள இக்கோயில், புவனேஸ்வரில் உள்ள 8 முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் 'கேதாரேஸ்வரர்' என்ற பெயரிலும், பார்வதி 'கௌரி' என்ற பெயரிலும் இங்கு தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் வளாகத்தில் எப்போதும் வற்றாத இயற்கை நீர்ச்சுனை உள்ளது. இதன் நீருக்கு நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

4. அனந்த வாசுதேவர் கோயில் - Ananta Vasudeva Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
புவனேஸ்வர் கோயில்கள் - Ananta Vasudeva Temple

13-ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்தைச் சேர்ந்த சந்திரிகா தேவி என்ற அரசியால் கட்டப்பட்ட புகழ்பெற்ற வைணவத் தலமாகும். இக்கோயிலில் கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.

பூரி ஜெகந்நாதர் கோயிலைப் போலவே இங்கும் மண்பாண்டங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து விறகடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் 'மகாபிரசாதம்' மிகவும் சுவையானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள 'ஆனந்த பஜாரில்' அமர்ந்து இந்த உணவைப் பிரசாதமாக உட்கொள்கிறார்கள்.

5. பிரம்மேஸ்வரர் கோயில்  - Brahmeswara Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
Brahmeswara Temple - புவனேஸ்வர் கோயில்கள்

11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோமவம்சி அரசியான கோலாவதி தேவியால் கட்டப்பட்ட வரலாற்றுத் தலமாகும். இக்கோயில் 'பஞ்சாயதன' கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதாவது மையத்தில் பிரதான கோபுரமும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய துணைச் சன்னதிகளும் அமைந்துள்ளன. கோயிலின் சுவர்களில் அஷ்டதிக்பாலகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் விக்கிரகங்கள் மிக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஒடிசாவின் வரலாற்றை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.

6. ராஜாராணி கோயில் - Raja Rani Temple

புவனேஸ்வர் கோயில்கள் - Bhubaneswar Temples
Raja Rani Temple - புவனேஸ்வர் கோயில்கள்

11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், தனது வித்தியாசமான பெயர் மற்றும் சிற்ப அழகால் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. இக்கோயிலைக் கட்டுவதற்கு 'ராஜாராணியா' எனப்படும் மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதால் இது 'ராஜாராணி கோயில்' என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் வழிபாட்டிற்கென எந்த ஒரு கடவுளின் சிலையும் இல்லை. தற்போது இது இந்திய தொல்லியல் துறையின் (ASI) பராமரிப்பில் ஒரு வரலாற்றுச் சின்னமாக மட்டுமே பாதுகாக்கப்படுகிறது. இக்கோயில்கள் பெரும்பாலானவை 'பழைய புவனேஸ்வர்' (Old Town) பகுதியில் ஒன்றற்கொன்று அருகிலேயே அமைந்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com