கீரைகள் மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஆரோக்கிய உணவாக விளங்குகிறது. பலவித கீரைகள் பல்வேறு ஆரோக்கிய நலனை உடலுக்கு அளித்தாலும், அவற்றில் தண்டுக்கீரை முக்கியமானதாக விளங்குகிறது. பெரும்பான்மையான கீரைகளில் அதன் இலைகளையே பறித்துச் சமைத்து சாப்பிடுதல் வழக்கம். தண்டுக்கீரையில் அதன் தண்டினையும் சேர்த்து சமைப்பதற்கு பயன்படுத்துவதால் தண்டுக்கீரை என இதற்குப் பெயர் வந்திருக்கலாம். இந்தக் கீரையானது ஆனி, ஆடி மாதங்களில்தான் ஏராளமாகக் கிடைக்கின்றன. முளைக்கீரையின் முற்றிய வடிவமே தண்டுக்கீரை.
தண்டுக்கீரையில் இலை, தண்டு இரண்டுமே உணவாகப் பயன்படுகிறது. இளம் தண்டுக்கீரையில் சத்துக்கள் அதிகமாக இருக்கும். 100 முதல் 120 நாட்களுக்குள் அறுவடையாவதுதான் இளம் தண்டுக்கீரை. இதில் வைட்டமின் ஏ, மற்றும் சி ஆகியவையும். இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் முதலிய தாதுச்சத்துகளும் அதிகம்.
இந்தக் கீரை ஆறு மாதம் வரை வளரக்கூடியது. ஆகையால், ‘ஆறு மாதக் கீரை’ என்றும் இதை சொல்வர். இருவகை தண்டுக்கீரைகள் உள்ளன. தண்டு வெண்நிறமாய் உள்ள கீரை வெங்கீரைத் தண்டு என்றும், தண்டு செந்நிறமாய் உள்ள கீரை செங்கீரைத் தண்டு என்றும் பெயர். இரண்டின் இலைகளும் சொரசொரப்பாகவும் தடிப்பாகவும் இருக்கும். இரண்டுமே வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டவை. எட்டடி உயரம் வரை வளரக்கூடியவை. நாற்பது நாட்களுக்குள் வளர்ந்து உணவுக்கு இவை தயாராகி விடுகின்றன.
இரு வகைக் கீரைகளிலும் கீரையையும், தண்டுகளையும் சமைத்து உணவாக்கிக் கொள்ளலாம். தண்டில் உள்ள கீரைகளை ஆய்ந்து தனியாகவும் அல்லது தண்டுகளையும் சிறுக நறுக்கிச் சேர்த்து மசித்தோ பருப்புடன் துவட்டியோ உண்ணலாம். மரச்சீனி கிழங்கில், கீரை, தண்டு இவற்றை நறுக்கிக் போட்டு வெந்தவுடன் மசித்தும் உண்ணலாம். உண்ண உண்ணச் சுவை குறையாது. வெங்கீரை, செங்கீரைத் தண்டுகளை தனித்தனியே நார் நீக்கித் சன்னமாக நறுக்கி நீள நீளமாக வெட்டி சாம்பார் வைத்தும் சாப்பிடலாம்.
தமிழ்நாட்டில் சூப், கீரைக்கூட்டு, அடை போன்ற உணவுகளில் இதைப் பயன்படுத்துவார்கள். தானியங்களுடன் அல்லது பசும்பாலுடன் சேர்த்து இதனைச் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும். தண்டுக்கீரையில் உயிர்ச்சத்தான வைட்டமின் ‘ஏ’யும், ‘சி’யும் ஏராளம் இருப்பதைக் காணலாம். தாதுப்புகளாகிய சுண்ணாம்பு சத்து 0.5 விழுக்காடும், மணிச்சத்து 0.1 விழுக்காடும் இருக்கின்றன. அன்றியும் 100 கிராம் கீரையில் 21.4 மி.கிராம் இரும்புச் சத்தும் இருக்கிறது.
இதில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் ஜீரணத்தை மேம்படுத்துகிறது. இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் இரத்த சோகை இருந்தால் உடனடியாக நன்மைத் தருகிறது. எலும்புகளை வலுப்படுத்தும் வகையில் அதிகமாக கால்சியம் உள்ளடங்கி இருக்கும். கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
வெங்கீரைத் தண்டும், செங்கீரைத் தண்டும் வெவ்வேறு விதமான மருத்துவப் பயன்களைத் தருகின்றன. வெங்கீரைத் தண்டுகளினால் சிறுநீர் பிரச்னைகள் குணமாகும். பித்தம் அகலும். மேலும் மேகச்சூடு, மூலக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, இரத்த பேதி நீங்கப்பெற்று உடல் வெப்பமும் தணியும், இரத்தமும் சுத்தியுறும். மலக்கட்டு அவிழும். செங்கீரைத் தண்டுகளினால், தீராத பித்த நோயும், பெண்களின் பெரும்பாடும், உடல் வெப்பமும் குணமாகும்.இதனை அடிக்கடி சாப்பிட்டால் பெண்களின் கர்ப்பப்பை சுத்தமாகி கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். அதேவேளையில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை சரிசெய்யும்.
இரண்டு கீரைகளுமே இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. உடனடி பயன்களை வழங்கக்கூடியதாக இருப்பதால் இது பல வீடுகளில் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சத்து மிகுந்த முக்கியமான இந்த தண்டுக்கீரை வகைகளை வீட்டுத் தோட்டங்களில் விதைகளைத் தூவி இனவிருத்தி செய்து எளிதாகப் பயன் பெறலாம்.
கொழுப்பைக் கரைக்கவும் தேவையற்ற சதையைத் குறைக்கவும். அளவுக்கு அதிகமாக உள்ள உடல் நீரை வெளியேற்றவும் கீரைத்தண்டு பயன்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் அதனை குறைக்க தண்டுக்கீரை சாப்பிட்டு வரலாம். அவியல், பொரியல், மசியல் என பல வகைகளில் தண்டுக்கீரையை சமைத்து சாப்பிடலாம். தண்டை சாம்பாரிலும் சேர்க்கலாம். தண்டுகளில் சூப் செய்தும் சாப்பிடலாம்.