
முகலாயர்கள் காலத்தில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலுக்கு பேராபத்து ஒன்று நிகழ இருந்தது. அதனை அண்ணாமலையாரே தனது பக்தனான வீரேகிய முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். கோயிலுக்கு வந்த பேராபத்தை அண்ணாமலையாரே எதிர்கொண்ட உண்மை நிகழ்வு இது. பர்வதமலை அருகே சீலப்பந்தலில் இம்முனிவர் வாழ்ந்த ஊரும் அவரது ஜீவசமாதியும் உள்ளது.
பொதுவாக, எல்லா சிவாலயங்களிலும் ஈசனை பார்த்து நந்தி அமர்ந்தபடி இடது காலை மடக்கி, வலது காலை முன்வைத்து இருக்கும். ஆனால், திருவண்ணாமலை ராஜகோபுரத்தை கடந்ததும் ஐந்தாவது பிராகாரத்தில் உள்ள நந்தி வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி காட்சி தரும். இந்த நந்தி சுமார் 12 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் எட்டு நந்திகள் உள்ளன. இந்த நந்தி மட்டும் வித்தியாசமான கோலத்துக்குக் காரணம் ஒரு முகலாய மன்னன்தான்.
முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் திருவண்ணாமலை கோயிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றினான். அவன் கோயிலில் இருந்த சமயம் ஒரு காளை மாட்டை ஐந்து சிவ பக்தர்கள் சுமந்து சென்றனர். ‘எதற்காக இந்த காளை மாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’ என முகலாய மன்னன் கேட்க, ‘இது எங்கள் ஈசனை சுமக்கும் வாகனம். எனவே, இதனை சுமப்பது இந்தப் பிறவியில் எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றனர் அந்த பக்தர்கள். இதனைக் கேட்ட மன்னன் கோபம் கொண்டு, ‘இதனை நான் இரண்டு துண்டுகளாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் இதனை ஒன்று சேர்ப்பாரா?’ என்று கூறி அந்தக் காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் ஈசன் சன்னிதிக்கு சென்று முறையிட்டனர்.
அதனை செவிமடுத்த ஈசன், “ஓம் நமசிவாய என்று சொல்லியபடி என் பக்தன் ஒருவன் வடக்கு திசையில் அமர்ந்திருப்பான். அவனைச் சென்று அழைத்து வாருங்கள்” என்று அசரீரியாக குரல் கொடுக்க, அங்கு சென்றவர்களோ, ‘இந்த சிறுவனா காளை மாட்டுக்கு உயிர் கொடுக்கப் போகிறான்’ என்று நினைத்தனர். அப்போது ஒரு புலி இவர்களைத் தாக்க வர, ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரத்தை சொல்லி புலியை விரட்டினான் அச்சிறுவன். அச்சிறுவனை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட காளை மாட்டை காட்ட, சிறுவனோ இடைவிடாமல் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்ல, வெட்டுப்பட்டுக் கிடந்த காளை மாடு உயிர் பெற்று ஒன்று சேர்ந்தது.
இதைக் கண்டு கோபமடைந்த முகலாய மன்னன், ‘இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் நீ ஜெயித்தால் என் சொத்துக்களை இந்தக் கோயிலுக்கு கொடுப்பேன். நீ தோற்றாலோ இந்த கோயிலை இடித்து விடுவேன்’ என்று கூற, அதற்கு சம்மதித்த சிறுவனிடம், ‘தட்டு நிறைய மாமிசத்தை வைக்கிறேன் உனது இறைவன் அதனை பூக்களாக மாற்றுகிறானா என்று பார்க்கலாம்’ என்று கூறி, மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படைத்தான். சிறுவன் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்ல அவை பூக்களாக மாறின. தொடர்ந்து ராஜகோபுரம் அருகே வந்த மன்னன், ‘இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா?’ அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?’ எனக் கேட்க சிறுவன் ‘நமசிவாய’ மந்திரத்தை சொல்ல, உயிர் பெற்ற நந்தி எழுந்து கால் மாற்றி அமர்ந்தது.
மன்னன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கோயிலுக்குப் பொன், பொருள் யாவையும் கொடுத்தான். அற்புதம் நிகழ்த்திய அந்த சிறுவன்தான் பின்னாளில் வீரேகிய முனிவர் என அழைக்கப்பட்டார். அவரது நினைவாக திருவண்ணாமலை மாவட்டம், சீனந்தலில் மடம் ஒன்று உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வீரேகிய முனிவர் இருக்கும் வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி காட்சி தருகிறது.
ஆயிரம் கால் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்த நந்திக்கு மாட்டு பொங்கலன்று 108 பொருட்களால் அபிஷேகம் செய்து 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை நடத்தப்படும். இதனை கண்டு களிக்கும் பக்தர்களுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் வாங்கிக் கொடுப்பதும், அலங்காரம் செய்ய தும்பைப் பூ வாங்கிக் கொடுப்பதும் நமக்கு செல்வத்தையும், பதவி உயர்வையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.