வழிபாட்டுப் பொருள் கமண்டலத்துக்கு இத்தனை பெருமைகளா?

Kamandalam
Kamandalam
Published on

குழந்தைகளிடம், ‘ரிஷிகள், முனிவர்கள் எப்படி இருப்பார்கள்?’ என்று கேட்டால், ‘தலையில் உச்சி கொண்டை போட்டுக் கொண்டு, கையில் யானை செம்புடன் இருப்பார்கள்’ என்று கூறுவதைக் கேட்கலாம். அவர்கள் அப்படிச் சொல்வதன் காரணம் கெண்டி போன்ற அமைப்புடைய அந்த செம்பில் யானையின் தும்பிக்கை போன்ற குழாய் இருப்பதைத்தான் அவர்கள் அப்படிக் கூறுகின்றனர். மேலும், கமண்டலத்திற்கு கரகம், குண்டிகை, கெண்டி  என்ற வேறு பெயர்களும் இருக்கின்றன.

நமக்கு, ‘கெண்டி’ என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது நாம் சிறுவர்களாக இருந்தபொழுது நமக்குப் பாலூட்டுவதற்காக நம் தாய்மார்கள் பயன்படுத்திய கெண்டியைத்தான் நினைத்துக் கொள்வோம். இன்றும் அதை வீட்டில் புழக்கத்தில் வைத்திருப்பதைக் காணலாம். ஆனால், புராணம், இதிகாசம் என்று வந்துவிட்டால் அது வழிபடுபொருளாக உள்ளதை அறிய முடிகிறது. இதனால் அனைத்து மகாமுனிவர்களுமே கமண்டலத்தை கையில் ஏந்துகின்றனர். குடகு மலையில் தலைக்காவிரி என்ற இடத்தில் அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதை காக்கை வடிவில் வந்த விநாயகர் தட்டி விட்டதாகவும் அதுதான் காவிரியாக பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் புராணம் கூறுகின்றது. அங்கு அதற்கான ஆதாரச் சிலைகள் இருப்பதையும் காணலாம்.

இதையும் படியுங்கள்:
யார் இந்த தீர்த்தங்கரர்கள்? அடையாளம் காணும் வழிகள்!
Kamandalam

அதேபோல், திருவண்ணாமலையில் ஓடும் பருவ கால கமண்டல நாக நதிக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அதன் பெயரே ‘கமண்டல நாக நதி’ என்பதிலிருந்து கமண்டலத்தின் பெருமையை புரிந்து கொள்ளலாம். அது ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் என்னும் இடத்தில் சென்று செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றை அம்பிகை கமண்டலத்தினால் உருவாக்கியது என்று கூறுகின்றனர். மேலும், இந்த நாக நதியை ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி   சீர்திருத்தம் செய்து குடிநீருக்காக உபயோகப்படுத்தினர் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு. ஆரணி மக்களுக்கு இன்று குடிநீர் வழங்கி வருவது இந்த கமண்டல நாக நதிதான். இதுபோல் பல சிற்றாறுகள் கமண்டலத்தினால் உருவாக்கப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் சிறப்பு.

நூபுர கங்கை: வாமன அவதாரத்துடன் வந்த திருமால் பின்னர் திருவிக்ரம அவதாரம் எடுத்து உலகை தமது திருவடியால் அளக்க, விண்ணை நோக்கி நீட்டியபோது பிரம்ம லோகம் வரை நீண்ட அத்திருவடியை பிரம்மன் தனது கமண்டல நீரால் நீராட்டி வழிபட்டார் என்றும், அப்போது அவரது நூபுரத்தில் தங்கிய தண்ணீர் அழகர்மலையில் நூபுர கங்கை என்னும் பெயரில் வற்றாத சிற்றாறாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படிப் பல்வேறு வரலாறுகள் கமண்டலத்திற்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
யானை முடி ஆபரணம் அணிவதால் கிடைக்கும் பலன்கள்!
Kamandalam

அஷ்ட மங்கலப் பொருள்: சமண, பௌத்த சமயங்களிலும் கெண்டி உயர்ந்த பொருளாகப் போற்றப்படுகிறது. சமண முனிவர்கள் மயிற் பீலியையும் கெண்டியையும் ஏந்துகின்றனர். அவர்களது திருவுருவை அமைக்கும்போது பீடத்தில் மயிற் பீலி, புத்தகம், கெண்டி ஆகிய வடிவங்களை அமைக்கின்றனர். மேலும், சமணக் கோயில்கள், பள்ளிகளில் சீதனமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களை அளப்பதற்கு இந்த கமண்டலக்கல் பயன்பட்டதாகக் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.

கெண்டி, ஜப மாலையுடன் காட்சி தரும் தெய்வங்கள்: காசி விசாலாட்சி கெண்டி ஜப மாலைடன் காட்சி தருகிறார். கலைமகள் சரஸ்வதி, ஞானாசிரியனாய் வரும் சிவபெருமான், வாமனனாக வந்த திருமால், ஞானாசிரியனாக திகழும் முருகன் ஆகியோர் கமண்டலத்தை தமது திருக்கரத்தில் ஏந்துகின்றனர்.

சோழபுர சரஸ்வதி: மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம், கங்கைகொண்ட சோழிச்சரம் உடையார் கோயிலில் தெற்கு அணுக்கன் வாயிலில் லட்சுமியையும், வடக்கு அணுக்கன் வாயிலில் இந்த சரஸ்வதி வடிவத்தையும் அமைத்துள்ளனர். இவர் கென்டி, அட்ச மாலை, கையில் ஏடு, வலது கையில் ஒன்று என்னும் முத்திரை ஆகியவற்றைத் தாங்கியுள்ளாள். இவளை ஞான சரஸ்வதி என்று அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆயுதம் இல்லாத அரியக் கோலத்தில் அருளும் அபூர்வ ஸ்ரீராமர் திருத்தலம்!
Kamandalam

கமண்டல முருகன்: கமண்டலத்தோடு இணையாக இருப்பது ஜப மாலையும் தண்டு எனப்படும் யோக தண்டமும் ஆகும். தொண்டை மண்டலத்தில் இருக்கும் திருப்போரூர், காஞ்சி குமர கோட்டம், சென்னை கந்த கோட்டம் முதலிய தலங்களில்  இத்தகைய கெண்டி, கமண்டலம் ஏந்திய முருகனை தரிசிக்கலாம். முருகன் ஞானாசிரியனாக பிரம்ம சாஸ்தா என்னும் கோலத்தில் விளங்கும்போது மேற்கரங்களில் கெண்டி அட்ச மாலை எனப்படும் ஜபமாலை ஏந்துகின்றான்.

சிவலிங்கமாய் கமண்டலம்: முனிவர்கள் தினசரி சிவ பூஜை செய்ய முற்படும்போது சிவலிங்கம் கிடைக்காவிட்டால் தமது கமண்டலத்தை சிவலிங்கமாக பாவித்து வழிபடும் வழக்கம் இருந்தது என்றும் கூறப்படுகிறது. கேரள கோயில்களில் கெண்டி முக்கியமான பூஜை பாத்திரமாக இருக்கின்றது. அர்ச்சகர் பூஜை செய்யும்போது கமண்டல நீரை கொண்டே பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

கலை வடிவம்: அந்தக் கமண்டலங்களை கலை வடிவுடன் செய்தும் பயன்படுத்துகின்றார்கள். கமண்டலத்தில் நீரை வெளியேற்ற யானையின் துதிக்கை போல் அமைந்த குழாய் பகுதியின் முனையில் யாளி முகம், இடப முகம் போன்றவற்றை அமைத்து அவற்றின் வாய் வழியே தண்ணீர் வெளியேறும்படி பயன்படுத்துகின்றனர். மேலும், கமண்டலங்களின் மேற்பரப்பில் பூ வடிவங்களையும் கொடிப்பூ வேலைகளையும் கலைநயத்துடன் செய்து பயன்படுத்துகின்றார்கள்.

இப்படி மகாமுனிவர்கள் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இத்தனை பயன்பாடுகள் உள்ளவற்றை அறிய முடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com