
பிரம்ம முகூர்த்தம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் சக்தி கொண்டது. பிரம்ம முகூர்த்தத்தின் போது அண்ட சக்திகள் உச்சத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளிப்புற, மனித சக்திகள் மிகக் குறைந்த நிலையில் இருக்கும் போது மற்றும் பெரும்பான்மையாக தூங்கிக்கொண்டிருக்கும் போது, அண்ட அதிர்வுகள் தங்கள் நடனத்தை நிகழ்த்துகின்றன. பிரம்ம முகூர்த்தத்தின் போது தியானம், மந்திரங்கள் அல்லது பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம், மக்கள் இந்த சக்தியை ஆன்மீக வளர்ச்சி மற்றும் உள் மாற்றத்திற்காகப் பயன்படுத்தலாம்.
பண்டைய இந்திய நூல்களில், அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை எழுந்திருப்பது மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் நேரமாகவும் 'படைப்பாளரின் நேரம்' என்று குறிப்பிடப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது இரவின் கடைசி மணி நேரம் அதாவது அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை ஆகும். அதுமட்டுமின்றி இந்த நேரம் சூரிய உதயத்தைப் பொறுத்து மாறுபடும்.
இது வழக்கமாக சூரிய உதயத்திற்கு சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்களுக்கு முன்பு, தோராயமாக அதிகாலை 3:30 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை தொடங்குகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான்.
பிரம்மதேவன் சிவபெருமானை இந்த நேரத்தில்தான் வழிபட்டதாகவும், அதன் பலனாய் பல வரங்களைப் பெற்றதாகவும் அதனாலேயே இதற்கு, ‘பிரம்ம முகூர்த்தம்’ எனப் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.'பிரம்ம முகூர்த்தம்' என்று அழைக்கப்படும் அதிகாலையில் இந்த நீரில் 'பிரான்சக்தி' இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் குளிக்கும் போது உடல் 'பிரான்சக்தியை' உறிஞ்சி, உங்கள் நாளை நேர்மறை ஆற்றலால் நிரப்ப உதவும் என்று நம் முன்னோர்கள் நம்பினர்.
தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு குளிப்பது மிகவும் முக்கியம். அதுவும் தலைக்கு குளிப்பது சிறப்பு. அப்படி குளிக்க முடியாதவர்கள் மட்டும் தலையில் மஞ்சள் நீரை தெளித்து கொள்ளலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடலில் பிரச்சனை உள்ளவர்கள், மட்டும் முகம் கழுவி விட்டு விளக்கேற்றலாம்.
தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து தூய ஆடை அணிந்து, திருநீறு இட்டு பூஜையறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து இறைவனை வேண்டி காயத்ரி மந்திரம் சொல்வது அதன் சக்தியையும் செயல்திறனையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி அப்படி சொல்லச் சொல்ல, நமக்குள்ளும், வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவி, நேர்மறையான சிந்தனைகள் தோன்றுவதுடன் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு. அதிலும் பிரம்ம முகூர்த்த வேளையில் பிரம்ம காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டு வந்தாலும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை கண்கூடாக காணலாம்.
காயத்ரி மந்திரம் மிகவும் பரிந்துரைக்கப்பட்டாலும், "ஓம்," "நம சிவாய" போன்ற பிற மந்திரங்களையும், சிவன், விஷ்ணு அல்லது துர்க்கை போன்ற தெய்வங்களை வணங்கும் மந்திரங்களையும் பக்தியுடன் ஜபிக்கலாம். பிரம்ம முகூர்த்தத்தின் போது மந்திரங்களை ஜபம் செய்வது அமைதி, மகிழ்ச்சி, அருள் மற்றும் செழிப்பைத் தரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் வீட்டில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் அகல்விளக்கு ஏற்றி சிவபெருமானை வழிபட்டு வர, சனி தோஷம் தீரும். தரித்திரம் தொலையும்.
இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதன் பலன் பல மடங்காக பெருகும் என்பதால் இந்த நேரத்தில் நெய் விளக்கு ஏற்றி மிக எளிமையான வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தால் நம்முடைய வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும். வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும், சுபிட்சம் ஏற்படும்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் தினமும் நெய் விளக்கேற்றி, மந்திரங்களை சொல்லி திருமணம், குழந்தை, வேலை, படிப்பு, பொருளாதார பிரச்சனை என எந்த காரியம் கை கூட வேண்டுமோ அதை மனதார வேண்டி வந்தால் ஒரே வாரத்திலேயே உங்களின் வேண்டுதல் படிப்படியாக நிறைவேறத்தொடங்கும். பிரம்ம முகூர்த்தத்தின் போது நெய் விளக்கு ஏற்றி, பிரார்த்தனை செய்வது, நீங்கள் விரும்புவதைப் பெறும் சக்தியை கொண்டுள்ளது.
பிரம்ம முகூர்த்தத்தில் நெய் விளக்கு ஏற்றும் போது அதில் சிறிய குண்டுமணி அளவிற்கு தங்கம் அல்லது வெள்ளி நாயணம் மற்றும் ஒரு ரூபாய் காசையும் போட்டு, விளக்கேற்றி வந்தால் விளக்கேற்றுபவர்களின் வீட்டில் அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். விளக்கினை சுத்தம் செய்யும் போது அதில் போடப்பட்ட தங்கம் போன்றவற்றை தனியாக எடுத்து வைத்து விட்டு, சுத்தம் செய்து, மீண்டும் விளக்கில் போட்டு விளக்கேற்றி வரலாம். இப்படி விளக்கேற்றி வந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்.
பூஜையறையில் ஏற்றும் விளக்குடன் அகல் விளக்குகள் எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் பூஜையறையில் மட்டுமின்றி வீட்டின் நிலை வாசலிலும் விளக்கேற்றி வைப்பது சிறப்பு.