ஒரு நாள் நாக்பூரிலிருந்து பாபாவின் பக்தரான பூடி (G.M.Buty) என்பவர் ஷீர்டிக்கு வந்தார். (ஷீர்டி சாயிபாபா அவதாரம்: 28-9-1835 சமாதி:15-10-1918)
நானா சாஹப் டெங்க்லே (Nana Saheb Dengle) என்ற பக்தர் ஜோதிடத்தில் வல்லவர். அவர் பூடியைப் பார்த்து, அன்று அவரது உயிருக்கு ஆபத்து என்றும் பெரிய கண்டம் ஒன்று வருகிறது என்றும் கூறினார்.
சற்று நேரம் கழித்து இருவரும் ஷீர்டி பாபாவிடம் சென்று அமர்ந்தனர்.
பூடியைப் பார்த்த பாபா பேசலானார்.
"நானா என்ன சொன்னார்? உனக்கு சாவு வரும் என்று சொன்னாரா? பயப்படவே பயப்படாதே. அடி! எப்படி நீ அடித்து அதைக் கொல்கிறாய் என்று நான் பார்க்கிறேன்."
அன்று மாலை சற்று ஓய்வாக ஒதுக்குப்புறமாகச் சென்றார் பூடி. அங்கே அவர் அருகே ஒரு பாம்பு வந்தது. அதை அடிக்க தடியை எடுக்க பூடியும் அவரது வேலைக்காரரும் ஓடினர். ஆனால் அதற்குள் அது அங்கிருந்து சென்று விட்டது.
கண்டம் உண்மையிலேயே வந்தது. ஆனால் பாபாவின் அருளால் அது அகன்றது.
பூடி, பாபாவிற்காக இன்னும் ஏகப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும். ஆகவே அவரை பாபா சாவதற்கு அனுமதிக்கவில்லை. இதற்குப் பின்னர் பல ஆண்டுகள் வரை -1921-ம் ஆண்டு வரை - அவர் உயிருடன் இருந்தார்.
சரி ஒரு கேள்வி எழுகிறது. பூச்சிகள், பாம்பு, தேள் ஆகியவற்றை அடித்துக் கொல்லலாமா?
துகாராம் மஹராஜ் கூடவே கூடாது; அவை கடவுளின் உருவமே என்கிறார். பரமஹம்ஸரும் பாம்பு, புலி பற்றி அப்படியே தான் சொல்கிறார். ஆனால் மூட்டைபூச்சிகளைக் கொல்லலாம் என்றார் அவர்.
ஶ்ரீமத் பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் வரும் ஒரு வாக்கியமானது பாம்பையும் தேளையும் அடிப்பதைப் பார்த்து ஒரு மகான் கூட சந்தோஷப்படுவார் என்கிறது.
இதையெல்லாம் படித்த பாபாவின் பக்தரான ஹெச்.எஸ். தீக்ஷித் என்பவர் பாபாவிடமே இது பற்றிக் கேட்டு விட்டார்.
தீக்ஷித்: தங்களை விஷப்பாம்புகளிடமிருந்து காத்துக் கொள்ள மக்கள் பாம்புகளைக் கொல்கிறார்களே, இது சரியா?
பாபா: கூடாது. ஒரு பாம்பானது கடவுளின் ஆணையின்றி ஒருவரைக் கடிக்காது; கொல்லாது. விதி அப்படி இருக்கும் போது ஒரு மனிதனால் பாம்பை அடிப்பதோ தன் உயிரைக் காத்துக் கொள்வதோ முடியாது.
ஷீர்டியில் ஏராளமான பக்தர்கள் பாம்புகளை மிக அருகில் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பாம்பு கடிப்பதுமில்லை; அவர்கள் பாம்பை அடிப்பதுமில்லை! அவர்கள் பாம்புகளை பாபாவாகவே பார்த்தார்கள்!