அனுமனுக்கு வெண்ணெய் பூசி வழிபடுவதன் மூலமாக அவருடைய பரிபூரண ஆசி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வெண்ணெய் தூய்மை மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆகவே, வெண்ணெய் வைத்து அனுமனை வழிபடும் பக்தர்களுக்கு பலம், வெற்றி, பாதுகாப்பை வழங்குவார் என்று நம்பப்படுகிறது. அனுமனுக்கு ஏன் வெண்ணெய் மீது இத்தனை பிரியம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அனுமன், சீதா தேவியைக் கண்டுபிடிக்க இலங்கைக்குச் சென்றார். அப்போது அனுமனின் வாலில் ராவணன் தீ மூட்டியதால், ஆத்திரம் கொண்டு இலங்கையை அனுமன் எரித்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் அனுமனை சுடவில்லை. ஆனால், அந்தத் தீ அனுமனை தாக்கியதால், அவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. அதைப்போல. ராமபிரானுடன் சேர்த்து ராவணனை எதிர்த்து போர் புரியும்போது பல அஸ்திரங்கள் அனுமனின் உடலை புண்ணாக்கியது.
அதன் பிறகு ராமாயண யுத்தம் முடிவடைந்தது. ராமரும் சீதா தேவியை மீட்டார். அயோத்தி சென்ற சீதை, ஸ்ரீராமரின் அக்னி பரீட்சையில் வென்று அனைவருக்கும் சீதாராமனாகக் காட்சிக் கொடுத்தார்கள். அப்போது அவரை வணங்கித் தொழுது கொண்டிருந்த அனுமனின் உடல் முழுவதும் வெப்பத்தினால் ஆன காயம் தென்பட்டதை சீதா தேவி கவனித்தார். இதைக்கண்ட சீதா தேவி அனுமனின் உடல் அடைந்த வேதனையையும், வலியையும் புரிந்துகொண்டு மிகவும் வருத்தப்பட்டார்.
அனுமனின் பக்தியையும், தங்கள் மீது கொண்ட தீராத அன்பையும் எண்ணி கண் கலங்கினார். பிறகு தாய் அன்புடன் அதிக அளவில் வெண்ணெய்யை எடுத்து வரச் சொல்லி, அதை அனுமனின் உடல் முழுவதும் பூசச் செய்தார். இதனால் தீயால் அனுமனின் உடலில் ஏற்பட்ட காயம், வலி ஆகியவை குறைந்தது. சீதா தேவியின் இந்த செயலால் உடல் மற்றும் மனம் குளிர்ந்தார் அனுமன்.
எனவே, அவர் சீதா தேவிக்கு ஒரு வாக்களித்தார். ‘இனி, பக்தர்கள் யார் தனக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டாலும் அவர்களின் நோயை ஸ்ரீராமபிரானின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன்’ என்று கூறினார்.
இதற்காகத்தான் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். எனவே, கடுமையான நோய் இருப்பவர்கள் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டு வர வெண்ணெய் கரைவது போல அவர்களின் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.