ஒன்பதாம் நூற்றாண்டில் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிற்றரசர், அதியமான். தகடூரின் மீது பகை மன்னர்கள் அடிக்கடி போர் தொடுத்தார்கள். சிற்றரசர் என்பதால் பகைவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரிடம் படைபலம் இல்லை. இதனால் அவரது உள்ளம் நிம்மதியின்றித் தவித்தது. ஆகவே, அரசவை சான்றோர்கள் ஆலோசனைப்படி தன் கோட்டையிலேயே காலபைரவர் கோயிலை நிர்மாணித்தார். அந்த பைரவர், மன்னருக்கும், மக்களுக்கும் காவல் தெய்வமாகவே விளங்கினார்.
மன்னர் அதியமான் தன் ஆயுதங்களை, காலபைரவர் சந்நிதியில் வைத்து, வேண்டிக் கொண்டு, களத்தில் இறங்கி, போர்களில் வெற்றி வாகை சூடினார். அதியமானின் ஒரு வாள், பைரவர் சன்னிதியில் இன்றைக்கும் கூர் மழுங்காமல் பளபளப்புடன் காட்சியளிக்கிறது. இந்த ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தையது.
அனைத்து சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நிர்வாணக் கோலத்தினராய், நீல மேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் காலபைரவப் பெருமான். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவ ஆராதனை நடைபெறும். பைரவரே காவல் தெய்வம் என்பதால், ஆலயத்தின் மற்றச் சன்னதிகளைப் பூட்டி அந்தச் சாவிகளை பைரவர் பாதத்தில் அர்ப்பணித்து, அதன்பின் கோயிலின் வெளிக் கதவை பூட்டுவது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் மரபு.
தமிழ்நாட்டில், தர்மபுரியிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள இந்த காலபைரவர் ஆலயம், மிகவும் சக்தி வாய்ந்தது.
காசிக்கு அடுத்து, அதியமான் கோட்டை ஆலயத்தில் மட்டுமே தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் என்பதால் இந்தக் காலபைரவர், தட்சிண காசி காலபைரவர் என்று வணங்கப்படுகிறார்.
இப்போது, அதியமான் கோட்டை என்பது கிராமத்தின் பெயர். கோட்டை, கொத்தளங்கள் இல்லை. ஆலயம் மட்டுமே. கோயிலில், கருவறையை நோக்கியபடி, பைரவரின் வாகனமான ஸ்வானப் பெருமான் (நாய்) காட்சி அளிக்கிறார். இங்கே எழுந்தருளியிருக்கும் கால பைரவரின் திருமேனியில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் அடக்கம் என்பதால், இவரை தரிசிக்கும் பக்தர்களின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தால் அது பைரவர் அருளால் அப்போதே விலகுகிறது என்கிறார்கள்.
மூன்றடி உயர காலபைரவர் தனது நாய் வாகனத்துடன் பத்ம பீடத்தின் மீது தெற்கு முகமாக எழுந்தருளியிருக்கிறார். கரங்களில் சூலம், கபாலம் ஏந்தி இருக்கிறார். காலபைரவரை தரிசித்து மகிழும் பக்தர்கள், ஆலயப் பிராகாரத்தை எட்டு முறை, பதினெட்டு முறை என கணக்கு வைத்துக் கொண்டு வலம் வருகின்றனர்.
இந்த தட்சிணகாசி காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், நினைத்த காரியங்கள் எல்லாம் குறைவற நிறைவேறுகின்றன என்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ராகுகால பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மாதந்தோறும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கி சத்ரு சம்ஹார யாகம் இயற்றப்படுகிறது.
தினமும் காலை ஒன்பது முதல் பத்தரை மணி வரை பைரவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இரவு 9.30 மணியளவில், அந்தகாசுரன் என்ற அரக்கனை வதைக்க 64 திருக்கோலம் கொண்டு காட்சியளித்த இந்த காலபைரவரை ஆற்றுப்படுத்தும் விதத்தில் மூலிகைத் தைலம் மற்றும் இன்ன பிற திரவங்களைக் கொண்டு 64 வித அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அதன் பின் அர்ச்சனை, ஆராதனை, ஆரத்தி ஆகியவை குறைவற நிறைவேறுகின்றன. இரவு 10 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு இரண்டு மணி வரை சத்ரு சம்ஹார குறிஞ்சி ஹோமம், அடுத்து குருதி பூஜை (பயப்படாதீர்கள். இது புனிதக் குருதி. யாகத் தீர்த்தத்தில் குங்குமத்தைக் கரைத்து, அரைமணி நேரத்துக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டு, இதனால் செய்யப்படும் அபிஷேகம்!) முதலியன நடைபெறுகின்றன.