

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஊரெல்லாம் பசுமையாகவும், செழிப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சமயம் அறுவடை காலம் என்பதால் உழவுத்தொழிலுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
தங்களின் கலாசார அடையாளமாக விளங்கும் தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் பண்டைய காலம் முதலே கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி ‘நற்றிணை', ‘குறுந்தொகை', ‘புறநானூறு', ‘கலித்தொகை' போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தீபாவளிக்கு எப்படி பட்டாசும், பலகாரமும், புத்தாடையும் அடையாளமோ... அதுபோல் பொங்கலுக்கு தித்திக்கும் செங்கரும்பும், மங்களகரமான மஞ்சள் குலையும்...அடையாளமாகும்.
முன்னொரு காலத்தில் ஒரு மாத காலம் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை இப்போது போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு முதல் நாளான மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பழையன கழிதல் என்ற வகையில் பழைய பொருட்களை எரிக்கிறார்கள்.
பொங்கல் தினத்தன்று காலையில் வீட்டின் முற்றத்தில் கோலமிட்டு கரும்பு, மஞ்சள் குலை படையலுடன் மண்பானையில் பொங்கலிட்டும், சர்க்கரை பொங்கல் வைத்தும் சூரிய பகவானை மக்கள் வழிபடுகிறார்கள். அதற்கு மறுநாள், உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தன்று சுற்றுலா தலங்களுக்கு சென்று மக்கள் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள்.
வரும் 15-ம்தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை கீழே விரிவாக காணலாம்.
பொதுவாக, எந்தவொரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் ராகு காலம், எமகண்டம் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலே செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் பொங்கல் வைக்க சில ஹோரைகள் உள்ளன. சில ஹோரைகளில் பொங்கல் வைப்பது நல்லது. செவ்வாய் அல்லது சூரியன் ஹோரையில் பொங்கல் வைத்தால் அது வீட்டில் தேவையில்லாத மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். சுக்கிரன், சந்திரன், குரு, புதன் ஹோரைகளில் பொங்கல் வைக்கலாம்.
ஜனவரி 15-ம்தேதி வியாழக்கிழமை அன்று தைப்பொங்கல் பிறக்கிறது. காலையில் 6-7 குரு ஹோரை என்றாலும் அது எமகண்ட நேரம் என்பதால் அந்த நேரத்தில் வைக்க வேண்டாம்.
காலை 9 மணி முதல் 10 மணி வரை சுக்கிர ஹோரை வருகிறது. அந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
புதன் ஹோரை 10 மணி முதல் 11 மணி வரை,
சந்திரன் ஹோரை 11 மணி முதல் 12 மணி வரை உள்ளது.
எனவே, 9 மணியில் இருந்து 12 மணிக்குள் இந்த ஹோரையில் பொங்கல் வைக்கலாம்.
சுக்கிர ஹோரையில் பொங்கல் வைத்தால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பம் தழைக்கும். உங்கள் வீட்டில் வம்ச விருத்தி ஏற்பட வேண்டுமென்றால் சுக்கிர ஹோரையில் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் வைக்க வேண்டும்.
புதன் ஹோரையில் பொங்கல் வைத்தால் குடும்பத்தில் உள்ள உங்களுடைய குழந்தைகளிடம் வளர்ச்சி ஏற்படும். புதன் என்பது அறிவு சார்ந்த கிரகம், புத்திகாரகன் என்பதால், புத்தியை பயன்படுத்தி யாரெல்லாம் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் புதன் ஹோரையில் பொங்கல் வைக்கலாம்.
குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும், மனதில் எந்த விதமான கெட்ட எண்ணங்களும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் சந்திரன் ஹோரையில் பொங்கல் வைக்கலாம்.
12 மணிக்கு தாண்டி பொங்கல் வைக்கக்கூடாது. ஏனெனில் சூரியன் உச்சி காலத்தில் சென்று விடுவார். சூரியன் உச்சி காலத்தை அடைந்து விட்டால், நீங்கள் அதற்குள் பொங்கல் வைத்து உறவுகளுடன் பொங்கலை சாப்பிடுவதற்கு தயாராக வேண்டும்.
காலை 6 மணிக்கு எமகண்டம் வருவதால், 9 மணியில் இருந்து 12 மணி வரை உள்ள நேரத்தில் உங்கள் வீட்டில் பொங்கப்பானையை வைத்து பொங்கலை பொங்க வைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மட்டுமில்லாமல் வளர்ச்சியும், சுபிட்சமும் ஏற்படும்.
இல்லாவிட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கினால் மிகவும் சிறப்பாகும். அதாவது பொங்கல் வைப்பதற்கு மிகவும் உகந்த நேரம் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை என்று சொல்லலாம். ஏனென்றால் சூரிய பகவான் உதிப்பதற்கு முன்பே பொங்கலை வைத்துவிட்டு சூரிய பகவான் வந்தவுடன் அந்த பொங்கலை படைத்து வழிபடுவது தான் நம் பாரம்பரியத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி பிரம்ம முகூர்த்த நேரத்தில் ராகு காலம், எமகண்டம் வராது என்பதால் இந்தநேரம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
மாட்டுப்பொங்கல்
அதேபோல, அடுத்த நாளான மாட்டுப் பொங்கல், விவசாயத்திற்கு உற்ற துணையாக நிற்கும் மாடுகளைப் போற்றும் விதமாக வழிபடப்படுகிறது. மேலும், கால்நடைகள் மூலமாகவும் மனிதர்களின் பொருளாதாரமும் உயர்கிறது. இதைப் போற்றும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மற்றும் சில மாவட்டங்களில் மாட்டுப் பொங்கல் பண்டிகையே கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் பொங்கல் வைத்து மாட்டிற்கு அந்த பொங்கலை கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு.
‘ஜல்லிக்கட்டு’ என்று சொல்லப்படும் மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டை மாட்டுப்பொங்கல் அன்று வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நந்தி பகவானை வழிபடலாம். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபிக்ஷம் பெருக வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்யலாம்.
இந்த தைப்பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், வளத்தையும் சேர்க்கட்டும் என வாழ்த்துவோம்...