
சைத்ரா நவராத்திரி துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது நாள் இந்து பண்டிகை ஆகும். வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் நவராத்திரியை பொருத்த வரை அனைத்து நவராத்திரிகளிலும் துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதே வழக்கம். அதுமட்டுமின்றி இந்த சைத்ர நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கடைபிடிக்கப்படும் விரதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பண்டிகை இந்தாண்டு மார்ச் 30-ம்தேதி தொடங்கி ஏப்ரல் 7-ம்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளில், இந்த விழா இந்து புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் இறுதி நாளில் ராமரின் பிறந்தநாளான ராம நவமியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த பண்டிகையை ராம நவராத்திரி என்றும் சில பகுதிகளில் கொண்டாடுவது உண்டு.
குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள், சைத்ர நவராத்திரியை மிகவும் பக்தியுடனும், மத தீவிரத்துடனும் கொண்டாடுகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தூய மனதுடன் அம்பிகையை விரதம் இருந்து பூஜை செய்து வழிபட்டால் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நவராத்திரி நிறைவடையும் நாளில் தான் இந்து புத்தாண்டு தொடங்குவதாக கருதப்படுவதால் இந்த பண்டிகை கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களாவது கண்டிப்பாக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சைத்ர நவராத்திரியின் போது பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில் உண்ணாவிரதம், பிரார்த்தனை, தியானம் மற்றும் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் விழாக்களில் கலந்துகொண்டு வழிபாடு செய்வது போன்றவை அடங்கும்.
சைத்ர நவராத்திரி காலம் அம்பிகை அசுரனை வெற்றி கொண்ட காலம் என்பதால் சுப காரியங்கள், புதிய தொழில்களை தொடங்கலாம் என்றாலும் நவராத்திரியின் முதல் ஐந்து நாட்களில் எந்த சுப காரியங்களையும் தொடங்கக் கூடாது. இந்த நாட்களில் அம்பிகையிடம் மனமுருகி அருளை வேண்டி விரதம் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் விரதம் இருப்பதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தீமைகள், துன்பங்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பப்படுகிறது.
முதல் ஐந்து நாட்கள் ஏன் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்றால், உலகில் உள்ள பாவங்கள், கர்ம வினைகள் நவராத்திரியின் ஆரம்ப நாட்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நவராத்திரி காலத்தில் அம்பிகையின் சக்தி அதிகரிக்க அதிகரிக்க தீமைகள் அழிய தொடங்கி, நன்மைகள் பெருக தொடங்கும். இதனால் தான் நவராத்திரியின் முதல் ஐந்து நாட்களில் சுப காரியங்கள் எதுவும் தொடங்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நீடிக்கும் இந்த பண்டிகை, துர்கா தேவியை வழிபடுவதற்கும், தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் துர்க்கையின் பல்வேறு வடிவங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த 9 நாட்களும் சைலபுத்ரி தேவி, பிரம்மச்சாரிணி தேவி, சந்திரகாந்தா தேவி, கூஷ்மாண்டா தேவி, ஸ்கந்தமாதா தேவி, காத்யாயனி தேவி, காலராத்ரி தேவி, சித்திதாத்ரி பூஜை & ராம நவமி என துர்க்கையை ஒன்பது வடிவங்களில் பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள்.
நவாத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புடையது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளும் அன்னைக்கு உகந்த நிற உடைகளை அணிந்து துர்க்கையை வழிபாடு செய்ய வேண்டும். அதன்படி நவராத்திரியின் முதல் நாள் மஞ்சள் நிறத்தில் தொடங்கி பச்சை, சாம்பல், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, அரச நீலம், இளஞ்சிவப்பு, ஊதா என ஒவ்வொரு நாளும் அன்னை துர்க்கைக்கு உகந்த நிற ஆடைகளை அணிந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
சைத்ர நவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் :
சைத்ர நவராத்திரி முன்தினமே வீடு மற்றும் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து துர்க்கை அம்மனின் சிலை அல்லது படத்தை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், வைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே தினமும் துர்க்கை அம்மனுக்கு ஆரத்தி காட்டுங்கள். துர்கா சப்தஷதியை உச்சரியுங்கள். அவை அனைத்தும் உங்கள் ஆன்மீகத்தை ஆழப்படுத்த உதவுகின்றன.
இந்த ஒன்பது நாட்களிலும், தூய மனதுடன் துர்க்கை அம்மனுக்கு விரதம் அனுஷ்டித்து, நைவேத்தியம் படைத்து, பஜனைகள் பாடி, மனமுருகி துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
விரதம் இருந்து வழிபாடு செய்யும் ஒன்பது நாட்களிலும் தங்களால் முடிந்த தான தர்மங்கள் மற்றும் பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
விரதம் இருக்கும் நாட்களில் அசைவ உணவை சாப்பிடக்கூடாது. மது, போதை வஸ்து போன்றவற்றை தொடக்கூடாது. யாரிடமும் கோபப்படவோ, தகாத வார்த்தைகளை பயன்படுத்தவோ, அடிக்கவோ கூடாது.
தூய மனதுடன் அன்னை துர்க்கை விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் தந்தருள்வார்.