சிலருக்கு பேசிக்கொண்டிருக்கும்பொழுதே கண்கள் துடிக்கும். விரல் துடிக்கும். கால்கள் துடிக்கும். அப்பொழுது ஏதோ நடக்கப்போகிறது என்று கூறுவார்கள். அப்படி உடம்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் துடிக்கும்பொழுது ஏற்படும் பலாபலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உச்சி துடித்தால் இடர் நீங்கும். உச்சியின் வலப்பாகம் துடித்தால் அச்சம்; இடப்பாகம் துடித்தால் பெருமை சேரும்.
தலை முழுவதும் துடித்தால் சம்பத்து உண்டாம். பின்தலை துடிக்கில் சத்துருக்கள் தொல்லை உண்டாம்.
இடதுநெற்றி துடித்தால் சம்பத்து சேரும், வலது நெற்றி துடித்தால் பிணி நீங்கும்.
வலது புருவம் துடித்தால் பெருமை. இரண்டு புருவங்கள் துடித்தால் பெருமை. இடது புருவம் துடித்தால் தீயது.
இடது கண்ணின் மேல் இமை துடித்தால் துன்பம் வந்து மாறும். கண்ணின் முன்குவளை துடித்தால் புகழும், செல்வமும் உண்டாகும். வலக்கண்ணின் கீழ் இமை துடித்தால் துணைவருக்குத் துன்பம் உண்டாகும்.
வலது மூக்கு முழுவதும் துடித்தால் சம்பத்து உண்டாகும். இடது மூக்கு துடித்தால் செல்வம் எய்தும்.
மேல் இதழ் துடித்தால் இனிய செய்தி, இனிய வார்த்தை வந்து சேரம். கீழ் இதழ் துடிக்கையில் தின்பண்டங்கள் உண்டாம்.
பிடரியின் வலப்பாகம் துடித்தால் நன்மை உண்டாகும். இடப்பாகம் துடித்தால் பெருமை உண்டாகம்.
முதுகு துடித்தால் செல்வம் வந்து சேரும்.
வலது முழங்கை துடித்தால் தவ பயணம். இடது முழங்கை துடித்தால் தனம் சேரும். வலது கண்டக் கை துடித்தால் தோஷம் நீங்கும். இடது அகங்கை துடித்தால் லாபம் வந்து சேரும்.
வலது கையின் பெருவிரல், சுட்டு விரல் துடித்தால் லாபம். நடுவிரல் துடித்தால் நல்ல செய்தி. மோதிர விரல் துடித்தால் பெருமை. சிறுவிரல் துடித்தால் மரணம். வலக்கை அடி துடிக்கில் எடுத்த காரியம் முடியும்.
இடக்கையின் பெருவிரல் துடித்தால் நிறை உண்டாகும். சுட்டு விரல் துடித்தால் ராஜ நோக்கு உண்டாகும்.
நடுவிரல் துடிக்கின் பெருமை உண்டாகும். மோதிர விரல் துடிக்கின் நன்மை. சிறு விரல் துடிக்கின் மரணம் இல்லை.
வலது தோள்பட்டை துடித்தால் புது வஸ்திரம் கிடைக்கும். இடது தோள்பட்டை துடித்தால் பிரிய வார்த்தை கூறுவார்கள்.
இடை துடிக்கின் புகழ் உண்டாகும்.
இரண்டு தொடைகளும் துடித்தால் செம்பொன் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு முழந்தாள்களும் துடித்தால் சம்பத்து உண்டாகும்.
இரண்டு கணைக்காலும் துடித்தால் பிரயாணம் உண்டாகும்.
உள்ளங்காலில் வலது துடித்தால் பொருள் கை கூடும். இடது உள்ளங்கால் துடித்தால் பிணி வந்து நீங்கும். கால் விரல்கள் துடித்தால் செல்வமும், நன்மையும் உண்டாகும்.