பொமேலோ (Pomelo) பழம் தென்கிழக்கு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதன் தாவரப் பெயர். 'சிட்ரஸ் கிராண்டிஸ்.' இது ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடிப் பழ இனத்தைச் சேர்ந்தது. தமிழில் இதை பப்ளிமாஸ் பழம் என அழைப்பதுண்டு. இப்பழத்திலிருந்து நம் உடலுக்குப் பல வகை நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொமேலோ பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃபிரீரேடிக்கல்களினால் செல்கள் சிதைவடையாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இப்பழத்தில் உள்ள அதிகளவு வைட்டமின் C, கல்லீரல் என்சைம்களின் உற்பத்தியைப் பெருகச் செய்து, நச்சு நீக்கும் செயலை சுலபமாக்க கல்லீரலுக்கு உதவி புரிகிறது. இதன் மூலம் மொத்த கல்லீரல் செயல்பாடுகளும் சிறப்படையும்.
இப்பழத்தில் ஃபிளவனாய்ட்ஸ் என்ற ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவும். பொமேலோ பழம் குறைந்த கலோரி அளவு கொண்டது. இதில் கொழுப்புச் சத்தும் அதிகம் கிடையாது. இதனால் உடல் எடையை சீராகப் பராமரிக்க பொமேலோ சிறந்த முறையில் உதவுவதுடன். கல்லீரல் கொழுப்பு வீக்க (fatty liver) நோயை குணப்படுத்தவும் உதவும்.
பப்ளிமாஸ் பழத்தில் உள்ள ஒருவகை கூட்டுப் பொருளானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவக் கூடியது. இதனால்தான் ஆல்ககாலிக் கொழுப்பு வீக்க (Non Alcoholic fatty liver) நோய் எனப்படும் கல்லீரல் கோளாறு உண்டாகும் அபாயத்தைக் குறைக்க முடிகிறது.
பொமேலோவில் உள்ள வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள், இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் தங்கு தடையின்றி சென்றடையவும் உதவுகின்றன.
இது குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் இரத்த சர்க்கரை அளவையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. பப்ளிமாஸில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சிறக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவும். வைட்டமின் A கண்களில் பார்வைக் கோளாறு உண்டாகாமல் பாதுகாக்கும். வெயில் காலங்களில் பப்ளிமாஸ் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கவும் உதவும்.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய பொமேலோ பழத்தை கிடைக்கும் போதெல்லாம் வாங்கி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறுவோம்.