‘சங்கீத பிதாமஹர்’ என்று அழைக்கப்படும் புரந்தரதாசர் கர்னாடக சங்கீத உலகிற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. பக்தி உணர்வு தானாகவே புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கேட்ட உடனே நமக்குள் ஊற்றெடுத்து விடும். ‘இந்தக் கலியுகத்தில் நம்மால் தியானம் செய்ய முடியாது. ஏனென்றால், நம் மனம் என்பது சஞ்சலப்பட்டு கொண்டே இருக்கும். இறைவனின் திருவடியில் மட்டுமே நம் மனத்தை முழுமையாக செலுத்தி தியானம் செய்வது என்பது இயலவே இயலாது. அதைப்போலவே பக்தி யோகமோ கர்ம யோகமோ செய்ய முடியாது. தான தர்மங்களும் செய்ய இயலாது. அப்படி இருக்கும்போது அந்த பகவானை அடைய என்ன செய்யலாம் தெரியுமா? பகவானை ஸ்மரணம் செய்யலாம். இடைவிடாது அவனை நினைக்கலாம். இதைத் தவிர வேறு ஏதாவது சுலபமான வழி கிடைக்குமா என்ன?’ என்கிறார் புரந்தர தாசர்.
‘ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர’ என்று எப்போதும் ஹரி ஸ்மரணம் செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் மனக் குழப்பம், மன சஞ்சலம் என எல்லாவற்றையும் நீக்கக்கூடியது ஹரி ஸ்மரணையே. எனவே, நிரந்தரமாக ஹரி ஸ்மரணம் செய்வோம். அதுவே நிர்கதிக்கு வழி என தமது கீர்த்தனையின் வழி சொல்லித் தருகிறார் புரந்தரதாசர். நாரத மகரிஷியே புரந்தரதாசராக அவதாரம் புரிந்து பக்தியை சங்கீர்த்தனம் வழியாக நமக்கு போதித்தார் என்றே பெரியோர்கள் சொல்லுவர்.
திருப்பதி ஏழுமலையானின் அருளால் பிறந்த குழந்தை என்பதாலேயே, ‘சீனப்பர்’ என்ற பெயரோடு வளர்ந்தார் புரந்தரதாசர். சாஸ்திர ஞானத்திலும் சங்கீத ஞானத்திலும் படுசுட்டியாய் விளங்கிய அந்த சீனப்பரை பார்த்து பெற்றோர் அப்படிப் பூரித்துப் போவார்களாம். லக்ஷ்மி பாய் என்கிற பெண்ணோடு சிறு வயதிலேயே சீனப்பருக்கு திருமணம் முடிந்தது. நான்கு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையான சீனப்பரின் தந்தை திடீரென இறந்து விட, தனது தந்தை பார்த்து கொண்டிருந்த வியாபரத்தை தானே பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் சீனப்பர்.
தனது தந்தை செய்து கொண்டிருந்த ரத்ன வியாபாரத்தை மென்மேலும் எப்படி லாபகாரமாக்கலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு அதை மட்டுமே செயல்படுத்தியும் கொண்டிருந்தார் சீனப்பர். வியாபாரத்தில் முனைப்பாக இருந்து, ‘நவ கோடி நாராயணன்’ என்று 9 கோடிகளை சம்பாதித்தவர் என்று பெயரும் பெற்று விட்டார் அவர். மேலே மேலே தனம் சேர்க்கணும். இன்னும் செல்வம் சேர்க்கணும் என்ற ஒரே எண்ணம்தான் அவர் மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்குமாம். தனத்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்த சீனப்பருக்கு தானம் என்ற வார்த்தையே பிடிக்காமல் இருந்து வந்தது.
அவரது மனைவிக்கு தானம் செய்யணும், தர்மம் செய்யணும் என்று ஓரே ஆசையாக இருக்கும். ஆனால், கணவரோ யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்ற குறிக்கோளோடு மட்டுமே வாழ்ந்து வந்ததால் அவரை மீறி லக்ஷ்மி பாயால் தான தர்மம் எதுவும் செய்ய முடியாமல் இருந்து வந்தது. பாண்டுரங்க விட்டலனுக்கோ ரத்னங்களை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் தனது பக்தனை எப்படியாவது தனது திருவடி எனும் மிக உயர்ந்த ரத்தினத்தை காண்பித்து அவனை பக்தி மார்கத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என்று இருந்தது.
ஒரு நாள் ஏழை அந்தணர் ஒருவர் சீனப்பரின் ரத்தினக் கடை பக்கம் ராம நாமத்தை பாடிக்கொண்டு வந்து, ‘ஏதாவது பொருள் உதவி செய்யும்படி’ கேட்டார். சீனப்பரோ அந்த ஏழையிடம், ‘ஒன்றும் கொடுக்க முடியாது போ’ என்று விரட்டி விட, பசி வயிற்றை கிள்ள மெல்ல நடந்து ஒரு பெரிய வீட்டின் முன் போய் நின்றார் அந்த ஏழைப் பெரியவர். அவர் நின்ற வீடு சீனப்பரின் வீட்டின் வாசலில்தான் என்பது அவருக்கே தெரியாது.
அங்கே இருந்த லக்ஷ்மி பாயிடம் தனது மகனுக்கு பூணூல் வைபவத்திற்காகவும் தம் மகளின் திருமணத்திற்காகவும் ஏதாவது பொருள் உதவி செய்யும்படி கேட்க, லக்ஷ்மி பாய் வீட்டில் அந்த ஏழைக்குக் கொடுத்து உதவ ஒரு பொருளுமே இல்லையே என தவித்து, தாம் அணிந்திருந்த உயர்ந்த வைர மூக்குத்தியை கழற்றி அந்த ஏழையிடம் தந்தாள். உடனே அந்த அந்தணரும் அந்த மூக்குத்தியை எடுத்து கொண்டு சீனப்ப நாயக்கரின் கடைக்குச் சென்று அடமானம் வைத்து பணம் கேட்டார். சீனப்பர் அந்த மூக்குத்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாராம். அந்த வைர மூக்குத்தியை ஒரு இரும்புப் பெட்டியில் போட்டு பூட்டி விட்டு அந்த அந்தணரிடம், “ஸ்வாமி ஒரு சின்ன சந்தேகம் சற்றே இங்கேயே இருங்கள்” என்று கூறி விட்டு தனது வீட்டை நோக்கி கோபத்தோடு புறப்பட்டார் சீனப்பர்.
நேராக தம் வீட்டிற்கு சென்று லக்ஷ்மி பாயை அழைக்க, அவளோ பயந்து நடுங்கியபடியே மூக்குத்தி இல்லாத மூக்கோடு வெளியே வந்தாள். “எங்கே உன் மூக்குத்தி?” என்று சீனப்பர் கேட்க, ”தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக அதை பத்திரமாக பெட்டியில் வைத்திருக்கிறேன்” என்று பயந்தபடியே சொன்னாள் லக்ஷ்மி பாய். “அப்படியா? அந்த பெட்டியை திற பார்ப்போம்” என கணவர் கூற, மனதால் துளசி தேவியை பிரார்த்தனை செய்து கொண்டாள் லக்ஷ்மி பாய். தான் எப்போதும் பூஜை செய்யும் அந்த துளசி செடியிடம் சென்று கதறி அழுத லக்ஷ்மி பாயின் கைகளில் அந்த துளசி தொட்டியில் மின்னியது அந்த வைர மூக்குத்தி. அதை பெற்றுக்கொண்டு திரும்பிய சீனப்பர் கடைக்கு வந்து பார்த்தபோது அங்கே அந்த அந்தணரையும் காணவில்லை. பெட்டியில் வைத்த மூக்குத்தியும் இல்லை.
தனது மனைவி தம்மிடம் கொடுத்த மூக்குத்தியில் சாட்சாத் அந்த எம்பெருமானே காட்சி தர, அன்று முதல் புரந்தரதாசராக, பரந்தாமனின் தாசராகவே மாறி விட்டார் சீனப்பர்.