

சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்ரா பௌர்ணமி. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி வானியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஒரு அதிசயமான நாள். வானத்தில் நிலவு அன்று எந்த கலங்கமும் இல்லாமல் முழு பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வந்த காட்சி தரும். சந்திரனும் சூரியனும் முழு பலன் பெற்று விளங்கும் இந்த திருநாளில் நாம் இறைவனை சரணடைவது நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்கும்.
மற்ற மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிகளை விட சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி ஏன் சிறந்தது என்று பார்த்தால், இந்த நல்ல நாளில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி நிறைய பலன்கள் கிடைக்கும். அதேபோல் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தவிடுபொடியாகும் நாள் என்று பார்த்தால் அது சித்ரா பௌர்ணமி தான்.
இந்த நாளில் நாம் தெரியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக நமது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம். குறிப்பாக நம் வாழ்வின் பாவ புண்ணிங்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தரை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் இது.
இந்தாண்டு சித்ரா பௌர்ணமி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மே 1-ம்தேதி) வருகிறது. பௌர்ணமி திதி நாளை ஏப்ரல் 30-ம்தேதி வியாழக்கிழமை இரவு 9.12 மணிக்கு தொடங்கி மே 1-ம்தேதி இரவு 10.52 மணிக்கு முடிகிறது.
சித்ரா பௌர்ணமி நாளில் ஆர்ப்பாட்டமான பூஜைகள் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. காலையில் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி சித்திரகுப்தரை மனதார வேண்டிக் கொண்டாலே போதும். அவருக்கு பிடித்தமான வேப்பம்பூ பச்சடி, தயிர் சாதம் மற்றும் விதவிதமான கலவை சாதங்களை நைவேத்தியமாக படைக்கலாம். இன்று மிக முக்கியமான செய்ய வேண்டிய விஷயம் தானம். நாம் செய்த பாவங்கள் குறையவும், புண்ணியங்கள் பெருகவும் பசித்திருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். குறிப்பாக தயிர் சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களை தானமாக வழங்குவது சித்திரகுப்தருக்கு மிகவும் பிடிக்கும்.
சித்ரா பௌர்ணமி என்பது நம்மை நாமே சீர்தூக்கி பார்க்கும் ஒரு நாள். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் முதல் திருவண்ணாமலையில் நிகழும் கிரிவலம் வரை இந்த நாள் முழுவதும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்திருக்கும்.
நமது கர்ம வினைகளை பதிவு செய்யும் சித்திரகுப்தரை வழிபடுவதற்கும் நம் மனதை தூய்மைப்படுத்தி கொள்வதற்கும் இதுவே மிகச்சிறந்த நாள். குலதெய்வ வழிபாடு, விரதம் இருத்தல் மற்றும் தான தர்மங்கள் செய்வது இந்த நாளில் பெரும் நன்மைகளை தரும்.
சித்ரா பௌர்ணமி அன்று இதையெல்லாம் செய்தால் உங்கள் தலையெழுத்தே மாறும்.
முதல் ரகசியம் அன்றைய தினம் நாம் சாப்பிடும் உணவில் ஒருவேளை உணவிலாவது உப்பை தவிர்த்தால் நமது தீராத கர்ம வினைகள் கூட தீரும் என்பது ஐதீகம். அதேபோல் அன்றைய தினம் சித்ரகுப்தருக்கு உப்பு இல்லாத தயிர் சாதம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இரண்டாவது உங்கள் பேனா மற்றும் டைரிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஏனெனில் அது சித்திரகுப்தருடைய ஆசி பெற்ற கருவி.
மூன்றாவதாக அன்றைய தினம் ஏழை, எளியவருக்கு குடை அல்லது செருப்பு தானம் செய்வது உங்கள் முன்னோர்களுடைய ஆசையை நேரடியாக பெற்றுத்தரும். அதேபோல் அன்றைய தினம் ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்வது புண்ணியத்தைத் தரும்.
நான்காவதாக அன்றைய தினம் இரவு நிலவுக்கு கீழே நின்று நீங்கள் செய்யும் பிராயசித்தம் உங்களுடைய பாவக்கணக்கையே மாற்றி எழுதும் வல்லமை கொண்டது. அன்று நிலவு மிகவும் பிரகாரசமாக இருப்பதால் மனத்தெளிவு மற்றும் நேர்மறை ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
அன்றைய தினமும் முழுவதும் விரதம் அனுஷ்டித்து இரவு நிலவு தரிசனம் செய்த பின் உணவருந்தவேண்டும்.
இந்த நாளில் செய்யப்படும் தானங்கள் பல மடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்பது ஐதீகம். எனவே உங்களால் முடிந்த தான தர்மங்களை கண்டிப்பாக செய்வது நல்லது.
செய்யக்கூடாதவை
அன்றைய தினம் பொய் பேசுதல், சூதாட்டம், பிறரை நிந்தித்தல், தகாத சொற்களால் பேசுவது, அசைவ உணவு சாப்பிடுவது, போதை வஸ்துக்களை சாப்பிடுவது, மது அருந்துவது, மாலையில் உறங்குதல் போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது.
சித்திரகுப்தர் கர்மாவின் கணக்காளர் மட்டுமல்ல. அவர் நம் வாழ்வின் வழிகாட்டி. இந்த நன்னாளில் நல்ல எண்ணங்களை விதைப்போம். நம் வாழ்வின் கணக்கு புத்தகம் புண்ணியங்களால் நிறையட்டும்.
அன்றைய தினம் சித்திரைகுப்தரிடம் இறைவா தெரிந்தும், தெரியாமலும் செய்த பிழைகளை மன்னித்து இனி என் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திரு என்று நாம் வைக்கும் ஒரு நிமிடம் மௌன பிரார்த்தனை ஆயிரம் பூஜைகளுக்கு சமமானது.
இந்த சித்ரா பௌர்ணமி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரட்டும்.