சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படும் ஒரு தமிழ் பண்டிகையாகும் ... இந்த ஆண்டு மே 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) சித்ரா பௌர்ணமி வருகிறது.
சித்ரா பௌர்ணமியில் சித்தர்கள் வழிபட 10 நிமிடங்கள் அனுமதிக்கும் கோயில்!
நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் சாலையில் 22 கிமீ தொலைவில் உள்ளது, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பேளுக்குறிச்சி பழனியப்பன் கோயில். இங்கு சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் சிறப்பு பூஜையில் சித்தர்கள் வந்து வழிபடுவதாக ஐதீகம். அன்றிரவு 11.50 க்கு பூஜை முடிந்ததும் 10 நிமிடங்கள் சித்தர்கள் வழிபடுவதற்கு கருவறை திரையிடப்படுகிறது. இங்கு வேறெங்கும் இல்லாதபடி முருகப்பெருமானின் கையில் சேவலை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சித்ரா பௌர்ணமி சந்தன பிரசாதம்
கோவை-பாலக்காடு சாலையில் கோவையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது நலக்கரை. இங்குள்ள மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று துர்க்கா பகவதியின் திருமேனியில் சாத்தப்பட்டிருக்கும் மூலிகைகளால் ஆன சந்தனத்தை பிரசாதமாக தருவர். அதனை சூரிய ஒளியோ அல்லது மின்னொளியோ விழாமல் உட்கொள்ள, தீராத பல வியாதிகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சித்ரா பெளர்ணமி நடவாவி உற்சவம்
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.
ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தர்
திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம் எனுமிடத்தில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோயில். இக்கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர். அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சித்ராபெளர்ணமி அன்று அவதரித்தார் சித்திர குப்தர் என்பதால் அன்று சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமியில் கிராமம் செல்லும் பெருமாள்
திண்டுக்கல் கோட்டையின் அடிவாரத்தில் ரயில் நிலையத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் திண்டுக்கல்லில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில் அச்சுத தேவராயரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. நெல்லி மரத்தடியில் பெருமாள் வலது கையில் ஆகாயத்தையும், இடது கையில் பூமியையும் காட்டியபடி அருள்பாலிக்கிறார். இங்குள்ள ஆளுயர கருடனுக்கு பில்லி சூனியம் விலக வேண்டுதல் நிறைவேற வித்தியாசமாக ஜிலேபி படைத்து வணங்குகிறார்கள்.
சித்திரையில் பௌர்ணமி நாளில், திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆண்டுதோறும் மூன்று நாள் ஊர்வலத்தைத் தொடங்குகிறார். சித்ரா பௌர்ணமி அன்று சீனிவாச பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி குடகனாற்றில் இறங்குகிறார்.
வேதவியாசர் அவதரித்த சித்ரா பௌர்ணமி
வேதங்களை ரிக்,யஜுர்,சாம,அதர்வண என்று நான்காகப் பகுத்தவர், மகாபாரதம் அளித்தவர், பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உபபுராணங்களையும் இயற்றியவராகக் கருதப்படுபவர் வேத வியாசர். இவர் சித்ரா பௌர்ணமி நாளில் அவதரித்தவர்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் ஆதிசங்கரர், வேத வியாசர் ஊர்வல தெய்வங்கள். சித்ரா பூர்ணிமா நாளில் மகரிஷி வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு உற்சவ மூர்த்தியாக அருள் பாலிக்கும் இவரை சித்ரா பௌர்ணமி அன்று வழிபட குழந்தைகளின் கல்வியறிவு பெற்று சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இவர் புடைப்புச் சிற்பமாக அருள்பாலிக்கிறார்.