
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பழைமை வாய்ந்த சிறப்புமிக்க திருக்கோயில்களில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. இந்தத் திருக்கோயில் ‘தென்னகத்தின் காளஹஸ்தி’ என அழைக்கப்படுகிறது. இக்கோயில் கும்பகோணம் அருகே அரசலாற்றின் கரையில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கோயில் அமைந்த கிராமம், ‘துர்கா ஆச்சி’ என அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் துக்காச்சி என மருவி உள்ளது.
ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பழைமை வாய்ந்த சிறப்புமிக்க திருக்கோயில்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. கல்வெட்டு சாசனங்களின்படி முதலாம் இராஜராஜ சோழனால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விக்ரம சோழன் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நோயிலிருந்து விடுபடுவதற்காக இந்தக் கோயிலில் வந்து அவன் பிரார்த்தனை செய்ததாகப் புராணங்களில் கூறப்படுகிறது. இத்தல சிவபெருமானை வழிபட்டு தனது நோயிலிருந்து மன்னன் பூரண குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே இந்தக் கோயிலை விரிவுபடுத்த அம்மன்னன் உத்தரவிட்டுள்ளான். நாற்பத்தெட்டு நாட்கள் இந்தக் கோயிலில் விக்ரம சோழன் தங்கி இருந்து தனது நோயிலிருந்து குணமடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இக்கோயில் மூலவர் சிவபெருமானின் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவி சௌந்தரநாயகி. ஸ்ரீ சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், பார்வதி தேவி ஆகிய முப்பெரும் தேவியரும் ஒன்று சேர்ந்த சக்தியான ஸ்ரீ சிவதுர்கையம்மன் இந்த ஆலயத்திற்கு வருகை புரிந்தபோது தன்னுடைய சக்தியாக விளங்கக்கூடிய பார்வதியை, ‘சௌந்தரமாக வா’ என சிவபெருமான் அழைக்க, பார்வதி தேவியும் வழிபட்டதால் இத்தல இறைவிக்கு சௌந்தர்ய நாயகி என பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.
இக்கோயிலில் குபேரருக்கு என தனிச் சன்னிதி உள்ளது. கட்டட கலைக்கும் சிற்பக் கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திருக்கோயில் விளங்கி வருகிறது. ஆலய தல விருட்சம் பாதிரி மரம். பாதிரி விருட்சம் தமது பூக்களைக் கொண்டு இத்தல ஈசனை பூஜித்ததால் தனது தோஷம் நீங்கி அருள் பெற்ற ஒரே திருத்தலம் இதுவாகும்.
பழைமை மாறாமல் புதுப்பித்ததற்காக கலாசார பாரம்பரிய யுனெஸ்கோ ஏசியா பசிபிக் விருது துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் சிவன் கோயிலுக்கு கிடைத்துள்ளது. இது இந்த கோவிலுக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாகும். கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது.