

மாயவரம் அருகில் உள்ள வள்ளலார் கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மிகவும் அற்புதமானவர், இங்கே இவர் நந்தி மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் இவருக்கு வியாழக்கிழமை தோறும் தங்க கவசம் சாத்தப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது தக்கோலம். இங்கு உள்ள உமாபதி கோவிலில் தட்சிணாமூர்த்தி ஒரு காலை தொங்கவிட்டு மற்றொரு காலை ஆசனத்தின் மீது ஏற்றி வைத்து தலை சாய்ந்த கோலத்தில் இருக்கிறார்.
ஆந்திராவில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் உள்ள வான்மீகேஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்தி காளையோடு அருகில் தேவியுடன் காட்சி தருவது தனி சிறப்பாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை கோவிலில் தட்சிணாமூர்த்தி ஒரு கையை தரையில் ஊன்றிய கோலத்தில் வித்தியாசமாக விச்சாந்தியாக போதிக்கும் நிலையில் காணப்படுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் அருகிலுள்ள தனி கோவிலில் வடக்கு பார்த்த நிலையில் தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி அருகில் சனகர் சனந்தனர் சனாதனர் சனத்குமாரர் என்னும் முனிவர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கு பதினெட்டு முனிவர்கள் உள்ளனர். குரு தோஷ பரிகாரமாக இவரது சன்னிதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பிரம்ம தேசம் கைலாசநாதர் திருக்கோவிலில் கால் மாறி அமைந்த தட்சிணாமூர்த்தி திருவருவத்தை காணலாம். ஜடா மண்டலத்துடன் விளங்கும் முயலகன் மீது தம் இடப்பாதத்தை பதிய வைத்துள்ளார். இவருக்கு பாதங்களில் காப்பு சிலம்பு தண்டை வீர கழல் போன்றவை வழக்கத்திற்கு மாறாக இடக்காலில் காணப்படுகிறது.
கோவில்பட்டி சங்கரன் கோவில் பாதையில் உள்ள வெட்டுவானம் சிவன் கோவிலில் மிருதங்கம் வாசிக்கும் நிலையில் ஸ்ரீ தஷிணாமூர்த்தி காட்சி தருகிறார்.
திருவிழி மழலை ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் தேவகோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியின் பாதம் முயலகன் மீது இல்லாமல் தாமரை மலர் மீது பதிந்திருக்கிறது.
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் ஆமை இருக்கிறது.
பாமணி நாகநாத திருக்கோயிலில் குருபகவான் நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
கிழக்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கும் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் தலத்தில் உள்ள அருள்மிகு தட்சிணா மூர்த்தி திருக்கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மட்டுமே.
தர்மபுரம் யாழ்முரிநாதர் கோவிலில் சிவன் யாழ் இசைத்தபோது தட்சிணாமூர்த்தி அந்த இசையை கேட்டு தன்னையும் அறியாது பின்புறம் சாய்ந்தாராம். இதனை விளக்கும் வகையில் தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வண்ணம் ஆடையே தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆனால், இங்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது.
காவடி என்றாலே முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். ஆனால் தட்சிணாமூர்த்திக்கு விபூதி காவடி எடுக்கும் கோவிந்தவாடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தலமாகும். இங்கு சித்திரை திருவிழாவின்போது விபூதி காவடி எடுக்கின்றனர் .
கூர்மம் ஆமை எட்டு யானைகள் பஞ்ச நாகங்கள் சிம்மம் அஷ்டதிக்கு பாலகர்கள் என பஞ்ச ஆசனங்களாக விளங்க அதன் மீது அமர்ந்த காலத்தில் தட்சிணாமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி ஊரில் உள்ள கோவிலில் காணலாம்.
திரிச்சோபுரம் ஸ்ரீ மங்களேஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்தி சிலையை தட்டினால் சப்தஸ்வர ஓசை கேட்கிறது. இவருக்கு மஞ்சள் வண்ண ஆடை அணிவிக்காமல் வெள்ளை வண்ண வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம் வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவைகாவூர் வில்வனேஸ்வரர் திருக்கோவிலில் மட்டும் வேறு எங்கும் காணக் கிடைக்காத வகையில் கையில் கோலேந்திய தக்ஷிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில் அய்யாவாடி கிராமம் ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி கோவிலுக்கு கிழக்கில் நடார் என்னும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிந்தாமணி அம்பாள் சமேத ஸ்ரீ மணிகண்ட ஈஸ்வரன் கோவிலில் குரு பைரவரும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பன்னிரண்டு ராசிகள் உருவங்களின் மீது அமர்ந்தவராக உள்ளார்.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தேஸ்வரர் ஆலயத்தில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அபூர்வமான காட்சியாக தரிசனம் தருகிறார் தட்சணாமூர்த்தி. இவரது காலத்துக்கு கீழே முயலகன் இல்லை நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.