
நாம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடக்கூடிய பண்டிகைகள் என்று எடுத்துக்கொண்டால் அதில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கக்கூடியது தீபாவளி பண்டிகை என்றே சொல்லலாம். இதனை தீப ஒளி திருநாள் என்றும் கூறுவார்கள்.
தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு, வெற்றி, சுதந்திரம் மற்றும் ஞானத்தின் ஆசீர்வாதங்களையும் கொண்டாடும் தீபங்களின் பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 20-ம்தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையில் போது சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் தீபாவளி பண்டிகை அன்று செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் எவை என்பதை தெரிந்து கொண்டு, அந்த முறையில் தீபாவளியை கொண்டாடினால் அந்த நாளுக்குரிய முழு பலன்களையும் நாம் பெற முடியும்.
நிறைய விளக்குகள் ஏற்றி அந்த விளக்கின் ஒளியின் மூலம் நாம் நம்முடைய இறைவனை வழிபாடு செய்யும் போது அது இன்னும் அதீதமான பலன்களை தரக்கூடியதாக அமைகிறது என்பதால் தான் தீபாவளி பண்டிகை இவ்வளவு சிறப்பு.
தீபாவளி பண்டிகை அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடும். எனவே அன்றைய தினம் 3 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று கண்டிப்பாக நல்லெண்ணெய் மற்றும் சீகைக்காய் வைத்து குளிக்க வேண்டும். இவை இரண்டு மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். அதாவது உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து சூடான நீரில் நீராடினால் நான் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏனெனில் அன்றைய தினம் கங்கா தேவி சூடான நீரில் வசம் செய்கிறாள் என்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது.
அதிகாலை (3 மணி முதல் 5.30 மணிக்குள்) எண்ணெய் குளியல் செய்வது சிறந்தது. இது கங்கையில் குளித்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.
வழிபட வேண்டிய நேரம்:
தீபாவளி அன்று அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இறைவழிபாடு செய்ய உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் உங்களால் இறைவழிபாடு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வழிபாடு செய்யலாம்.
நீராடிய பிறகு பூஜையறையில் உள்ள இறைவனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, புதுத்துணிகள், இனிப்பு பலகாரங்களை படைத்து, அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி இந்த ஒளியில் இறைவனை வழிபட வேண்டும். உங்கள் பூஜை அறையில் 64, 51 அல்லது எத்தனை அகல் விளக்குகளை ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகளை ஏற்றி அந்த ஒளியில் இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.
வழிபாடு செய்து முடித்த பின்னர் புதுத்துணிகளை உடுத்திக் கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற வேண்டும்.
அதேபோல் அன்றைய தினம் மாலையில் நாம் வழிபட வேண்டியது லட்சுமி குபேர வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 3.45 மணி முதல் 7 மணிக்குள் ஆகும்.
அன்றைய தினம் வீட்டில் லட்சுமி பூஜை செய்வதும், வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்வதும் வீட்டில் எப்போதும் செல்வ வளம் நிறைந்திருக்க அருள்புரியும். பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை நைவேத்தியமாகப் படைத்து வழிபட வேண்டும். லட்சுமி பூஜை செய்வது செல்வத்தை ஈர்க்கும் எனவும், குபேர பூஜை செய்வது வியாபார விருத்தியை அளிக்கும் எனவும் நம்பப்படுகிறது.
செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :
தீபாவளி அன்று 10 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியம் தரும் என்பது ஐதீகம். அதேபோல் 5 பேருக்காவது வஸ்திர தானம் செய்யவேண்டும். முடியாதவர்கள் ஒருவருக்காவது வேட்டி, சேலை வாங்கிக்கொடுப்பது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.
லட்சுமி பூஜை முடிந்த பிறகு, சாத்வீக உணவை உண்ணலாம். அன்றைய தினம் அசைவம் உண்ணக்கூடாது. ஏனெனில் அமாவாசை மற்றும் லட்சுமி தேவிக்கு பூஜை செய்வதால் அன்றைய தினம் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
தீபாவளி அன்று மாலை நேரத்தில் வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். அப்படி வீடு முழுவதும் ஏற்ற முடியாதவர்கள், வீட்டின் வாசலில் ஒரு அகல் விளக்கை மட்டுமாவது ஏற்றி வைக்க வேண்டும். ஏனெனில் தீபாவளி அன்று வீட்டில் உள்ள எந்த இடத்திலும் இருள் படியும்படி வைத்திருக்கக் கூடாது.
தீபாவளிக்கு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது.
அதேபோல் எந்த விலங்கையும், குறிப்பாக பட்டாசு சத்தத்தால் பயப்படும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.
தீபாவளிக்கு முன்தினம் மாலையில் வீட்டின் வாசலில் யம தீபம் ஏற்றி வைத்து முன்னோர்களை வழிபட வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றுவது அவர்கள் மோட்சம் அடைய வழிகாட்டும் என்பது நம்பிக்கை.