தேவலோக புனித மரம் பவளமல்லியின் மிரள வைக்கும் ரகசியம்!

Pavalamalli flower
Pavalamalli flower
Published on

வளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ‘சவுகந்திகா’ என்ற ஆபரணத்தைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் மற்றொரு பெயர் பாரிஜாதம். இது முன்னிரவில் பூத்து மணம் வீசிய பிறகு உதயத்திற்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக, மண்ணில் விழுந்த பூக்களை பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், பவளமல்லி இதற்கு விதிவிலக்கு.

மூன்று இலைத் தொகுப்பைக் கொண்ட இதன் இலையில் மும்மூர்த்திகள்  உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், இடதுபுறம் பிரம்மாவும், வலதுபுறம் சிவனும் இருப்பதாக ஐதீகம். இதன் பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும் காம்பு பவள நிறத்திலும் இருக்கும்.‌ இதன் கனிகள் உறை அமைப்பில் இருக்கும்‌.

இதையும் படியுங்கள்:
மன்னனை திகைக்க வைத்த தத்தாத்ரேயரின் 24 ஆசான்களும் காரணமும்!
Pavalamalli flower

இந்தச் செடியைப் பற்றி வாயு புராணத்தில் ஒரு கதை உள்ளது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விரும்பினாள். ஆனால், சூரியன் இதை ஏற்கவில்லை. அதனால் மனமுடைந்த அவள் தீயில் குதித்தாள். அவள் எரிந்த சாம்பலில் இருந்து பாரிஜாத செடி உருவானது.‌ சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தன்னை கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூப்பதாகக் கூறப்படுகிறது.

திருமாலுக்கு உகந்த இந்த மரத்தின் வேரில் ஆஞ்சனேயர் குடியிருப்பதாக நம்பிக்கை. இந்த மரத்தினால் பாமா, ருக்மிணியான கிருஷ்ண பத்னிகளுக்குள் சண்டை மூண்டது. இத்தகைய பவழமல்லியிலிருந்து நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இம்மரத்தின் இலை, பட்டை, விதை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தது.‌ இது சிறுநீரகத்தைக் காப்பாற்றக்கூடிய மருத்துவத் தன்மை கொண்டது.‌ நீரிழிவு நோய்க்கும் நல்லது‌.

கால் மூட்டு வலி, இரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு சிறந்த  நிவாரணியாக உள்ளது. பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. பவளமல்லி வேரை மென்று தின்றால் பல் ஈறுகளில் உருவாகும் வலி நீங்கும்.‌ விதைகளை பௌடராக்கி சாப்பிட சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாக உள்ளது. பவளமல்லி விதைப் பொடியை எண்ணெயில் குழைத்துக் தலையில் தடவ வழுக்கை மறைந்து முடி வளரும்.

இதையும் படியுங்கள்:
ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருள் மொழிகள்!
Pavalamalli flower

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருத்தணிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் இது  தல விருட்சமாக உள்ளது. தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்ததை அறிந்த துர்வாசர் தானும் அந்த பாக்கியத்தை பெற நினைத்தார். தேவலோக பாரிஜாத செடியை இங்கு நட்டார்.‌ நாளடைவில் இது பாரிஜாத வனமாகியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத  மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன்  மூலமாக கோயில் ஒன்றை எழுப்பியதால் வரலாறு கூறுகிறது.

திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.‌ கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட, தோஷம் நீங்கும். திருவண்ணாமலையில் உள்ள புத்ரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவளமல்லி தல விருட்சமாக வணங்கப்படுகிறது.‌ இத்தலத்தில் குழந்தை இல்லாதவர்க்கு குழந்தைப்பேறு கிட்டும். இம்மரத்தின் காற்று உடல் நலத்தைப் பாதுகாக்கக் கூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com