

அத்ரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்து வந்தனர். குழந்தை இல்லாத அனுசுயா, தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர் மூவரும் சொன்னார்கள். எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு.
அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும்போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால்தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்குத் தனது கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.
கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், எனது கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்தத் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள்.
வெளியே சென்றிருந்த அத்ரி முனிவர், தனது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒருசேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.
தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுய வடிவில் திருப்பித் தரக் கேட்டனர். அவர்களிடம், ‘‘உங்கள் கணவர் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்’ என்றார் அத்ரி மகரிஷி. உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ‘ரிஷியே, உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்’ என்று கூறி மறைந்தனர். அந்த குழந்தையே தத்தாத்ரேயர்.
தத்தாத்ரேயர் அவதூதராக காட்டில் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாட்டின் மன்னனை சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
“எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்” என்றார் தத்தாத்ரேயர். இந்த பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே” என்றான்.
மன்னனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும்,நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் எனது குருக்கள் ஆவர்“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார். "மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்; தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன். பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன். எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு) உணர்த்தியது.
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது. ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன். வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக்கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன். பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது. எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின. இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தால் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்..." என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார். இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.