
ஸ்ரீ கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்த தினமாக தென்னிந்தியாவில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ஸ்ரீராமன், ராவணனை சம்ஹரித்த நாளாகவும், மேற்கு மாநிலங்களில் குபேரனுக்கு மகாலட்சுமி செல்வம் அருளிய நாளாகவும், மகாராஷ்டிராவில் விநாயகர் தடைகளை நீக்கும் தினமாகவும், குஜராத்தில் மகாலட்சுமி தேவியை வரவேற்று புதுக் கணக்கு தொடங்கும் நாளாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
* மத்தியப்பிரதேசத்தில் உள்ள ‘ரௌத்தாயா’ என்ற இன மக்கள் தீபாவளியன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
* பதினொராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த டோமிஸ் கேபேயஸ் என்ற போர்ச்சுகீசிய பயணி தீபாவளி கொண்டாடினாராம்.
* அகர்வால் இன மக்கள் தீபாவளியன்று தங்கள் வீடுகளில் 51 முதல் 101 விளக்குகள் வரை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.
* கர்நாடக மாநிலம், ஹாசன் எனும் ஊரில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் திறக்கப்படும் கோயில் ஹாசனாம்பிகை கோயில் ஆகும். ஹாசன் என்றால் கன்னட மொழியில் புன்னகை என்று பொருள். அம்மன் புன்னகை முகத்துடன் திகழ்வதால் இந்தப் பெயர். ஹாசனாம்பிகை அம்மன் பெயரை ஒட்டியே ஊருக்கும் ஹாசன் எனும் பெயர் வந்தது.
* சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீபாவளியன்று பூக்குழி திருவிழா நடைபெறும்.
* இமயமலையில் உள்ள கங்கோத்திரியில் புராதான கங்கா தேவி கோயில் உள்ளது. இங்கு தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று கங்கா தேவியை வழிபட்டால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும் என்பது ஐதீகம்.
* ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியன்று பழைய ரூபாய் நோட்டுகளை தம் வீட்டு பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு, புது ரூபாய் நோட்டுகளை அவர்களின் ஆசிகளுடன் பெற்றுக்கொள்வது வழக்கம்.
* மேற்கு வங்கத்தில் வீடுகளை அலங்கரித்து தீபாவளி அன்று மாலையில் தீபங்களால் அழகுபடுத்துவார்கள். அன்று 14 வகை கீரைகளை சமைத்து சாப்பிடுவார்கள்.
* கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு முதல் நாளில் நீர் நிரப்பும் விழா கொண்டாடுகிறார்கள். குளியல் அறையை கழுவி சுத்தம் செய்து கோலம் போட்டு வெந்நீர் அண்டாக்களை அலங்கரித்து நீர் நிரப்பி பூஜை செய்வார்கள். இதற்கு கங்கா பூஜை என்று பெயர். தீபாவளியன்று பூஜை செய்த அந்த நீரில் ஸ்நானம் செய்வார்கள்.
புராணங்களில் கூறப்படும் தீபாவளியின் பெயர்கள்
பாகவத புராணத்தில் இப்பண்டிகை ‘தீபாவளிகா’ என்றும், கால விவேகத்தில், ‘சுக்ராத்திரி’ என்றும், காமசூத்திரத்தில், ‘கூராத்திரி’ என்றும், வடமொழி நூல்களில், ‘திருத்யத்வம்’ என்றும், நாகநந்தத்தில், ‘தீபப் பிரதி பனுஸ்தவம்’ என்றும், நீலமேக புராணத்தில், ‘தீபோத்ஸவம்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
* திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் தீபாவளியன்று மாலை ‘அத்தரதானம்’ எனும் வழிபாடு நடைபெறும். முதலில் மலையப்ப சுவாமி தங்கப்பல்லத்தில் உட்பிராகாரத்தைச் சுற்றி வலம் வருவார். பிறகு கருடாழ்வாருக்கு எதிரில் இறக்கி வைக்கப்பட்டு, ‘விருட்சபாடி’ எனும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலவருக்கு புதுப் பட்டு வஸ்திரங்கள் பரிசாக வழங்கப்படும்.
* திருச்செந்தூர் முருகனுக்கு இந்திரன் தனது மகள் தெய்வயானையை திருமணம் செய்து கொடுத்தார். அதனால் இந்திரன் தனது மருமகனுக்கு தீபாவளி புத்தாடை சீர் செய்வதாக ஐதீகம். அதனால் முருகன் அன்று புத்தாடை அணிவது வழக்கம்.
* வெனிசுலா நாட்டில் ட்ரினிடேட் எனும் ஊரில் தீபாவளி நகர் என்ற ஒரு பகுதி உள்ளது. இங்கு தீபாவளி அன்று பூஜைகளும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
* ரஷ்ய யாத்திரிகர் நிக்கோலேரே கொண்டி என்பவர் தீபாவளி அன்று கடல் மற்றும் நதிகளில் மக்கள் மகிழ்ச்சியாக நீராடியதாகக் கூறியுள்ளார்.